33. மாலைப் புலம்பல்

இதன்கண் : குஞ்சரச்சேரி மாளிகையை உதயணன் காண்டலும் ஐயுற்று ஆராய்ந்து தெளிதலும், அம்மாளிகையின் மருங்கே
யமைந்த பூம்பொழிலின்கண் அவன் காணும் காட்சி வண்ணனையும் ஞாயிறு மறைவும், மாலைக்கால வண்ணனையும், பிறைத்
திங்கட்டோற்றமும், உதயணன் வருத்தமும் வாசவதத்தை வருத்தமும் தோழியர் வாசவதத்தையைக் காண்டலும் பிறவும் கூறப்
படும்.
 




5
 அரசவை விடுத்தபின் அணிநகர் முன்னித்
 தொடர்பூ மாலைக் கடைபல போகி
 அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்
 தண்பூங் காவும் தலைத்தோன்று அருவிய
 வெண்சுதைக் குன்றொடு வேண்டுவ பிறவும்
 இளையோர்க்கு இயற்றிய விளையாட்டு இடத்த
 சித்திரப் பூமி வித்தக நோக்கி
   


10
 ஒட்டாக் கிளைஞரை நட்பினுள் கெழீஇய
 ஐயிரு பதின்மர் அரக்கின் இயற்றிய
 பொய்யில் அன்ன பொறிஇவன் புணர்க்கும்
 கையுங் கூடுங் காலம் இதுவென
 ஐய முற்று மெய்வகை நோக்கிச்
 சிறப்புடை மாநகர்ச் செல்வம் காண்கம்
 உழைச்சுற் றாளரைப் புகுத்துமின் விரைந்தெனத்
   
15




20
 தலைக்கூட்டு உபாயமொடு தக்கோன் தெரிந்து
 முட்டு முடுக்கும் இட்டிடை கழியும்
 கரப்பறை வீதியுங் கள்ளப் பூமியும்
 மரத்தினும் மண்ணினும் மதியோர் புணர்க்கும்
 எந்திர மருங்கின் இழுக்கம் இன்மை
 அந்நிலை மருங்கின் ஆசற நாடி
 வஞ்சம் இன்மை நெஞ்சில் தேறிச்
   



25




30
 சந்தன வேலிச் சண்பகத்து இடையதோர்
 வேங்கையொடு தொடுத்த விளையாட்டு உறற்
 தூங்குபு மறலும் முழைச்சிறு சிலதியர்
 பாடல் பாணியொடு அளைஇப் பல்பொறி
 ஆடியன் மஞ்ஞை அகவ அயலதோர்
 வெயில்கண் போழாப் பயில்பூம் பொதும்பில்
 சிதர்தொழில் தும்பியொடு மதர்வண்டு மருட்ட
 மாதர் இருங்குயில் மணிநிறப் பேடை
 காதற் சேவலைக் கண்டுகண் களித்துத்
 தளிப்பூங் கொம்பர் விளிப்பது நோக்கியும்
   



35
 பால்நிறச் சேவல் பாளையில் பொதிந்தெனக்
 கோள்மடல் கமுகின் குறவயிற் காணாது
 பவழச் செங்கால் பன்மயிர் எருத்தில்
 கவர்குரல் அன்னம் கலங்கல் கண்டும்
 தனித்துஉளங் கவல்வோன் தான்வீழ் மாதர்
 மணிக்கேழ் மாமை மனத்தின் தலைஇப்
 புள்ளுப்புலம் புறுக்க உள்ளுபு நினைஇ
 மன்றனாறு ஒருசிறை நின்ற பாணியுள்
   
40  சென்றுசென்று இறைஞ்சிய சினந்தீர் மண்டிலம்
 சூடூறு பாண்டிலில் சுருங்கிய கதிர்த்தாய்க்
 கோடுஉயர் உச்சிக் குடமலைக் குளிப்ப
 விலங்கும் பறவையும் வீழ்துணைப் படரப்
   

45




50
 புலம்புமுத்து உகுத்த புன்மைத்து ஆகி
 நிறைகடல் மண்டிலம் நேமி உருட்டிய
 இறைகெழு பெருவிறல் எஞ்சிய பின்றைக்
 கடங்கண் எரிந்த கைய ராகி
 இடந்தொறும் பல்கிய மன்னர் போல
 வரம்பில் பன்மீன் வயின்வயின் விலங்கிப்
 பரந்துமீது அரும்பிய பசலைவா னத்துத்
   




55




60
 தலைத்தேர்த் தானைக்குத் தலைவனாகி
 முலைப்பால் காலத்து முடிமுறை எய்திக்
 குடைவீற்று இருந்த குழவி போலப்
 பொழில்கண் விளக்கும் தொழில்நுகம் பூண்டு
 புயல்மாசு கழீஇப் புனிற்றுநாள் உலவாது
 வியன்கண் மாநிலம் தாங்க, புவிசும், ஊர்ந்து
 பைந்தொடி மகளிர் பரவினர் கைதொழச்
 செங்கோட்டு இளம்பிறை செக்கர்த் தோன்றித்
 தூய்மை காட்டும் வாய்மைமுற் றாது
 மதர்வை யோர்கதிர் மாடத்துப் பரத்தரச்
   




65




70
 சுடர்வெண் நிலவின் தொழில்பயன் கொண்ட
 மிசைநீள் முற்றத்து அசைவளி போழ
 விதானித்துப் படுத்த வெண்கால் அமளிச்
 சேக்கை மகளிர் செஞ்சாந்து புலர்த்தும்
 தேக்கண் அகிற்புகை திசைதொறுங் கமழக்
 கன்றுகண் காணா முன்றில் போகாப்
 பூத்தின் யாக்கைமோ..................
 ................குரால் வேண்டக் கொண்ட
 சுரைபொழி தீம்பால் நுரைதெளித்து ஆற்றிச்
 சுடர்பொன் வள்ளத்து மடல்விரல் தாங்கி
 மதலை மாடத்து மாண்குழை மகளிர்
 புதல்வரை மருட்டும் பொய்ந்நொடி பகரவும்
   


75




80




85




90
 இல்லெழ முல்லையொடு மல்லிகை மயங்கிப்
 பெருமணம் கமழவும் பிடகைப் பெய்த
 வதுவைச் சூட்டணி வண்டுவாய் திறப்பவும்
 பித்திகக் கோதை செப்புவாய் மலரவும்
 அறவோர் பள்ளி அந்திச் சங்கமும்
 மறவோன் சேனை வேழச் சங்கமும்
 புதுக்கோள் யானை பிணிப்போர் கதமும்n
 மதுக்கோள் மாந்தர் எடுத்த வார்ப்பும்
 மழைக்கடல் ஒலியின் மயங்கிய மறுகில்
 விளக்கொளி பரந்த வெறிகமழ் கூலத்துக்
 கலக்கதவு அடைத்து மலர்க்கடை திறப்பவும்
 ஒளிறுவேல் இளையர் தேர்நீறு அளைஇக்
 களிறுகால் உதைத்த புஞ்சப் பூழியொடு
 மான்றுகள் அவிய மதுப்பலி தூவவும்
 தெற்றி முதுமரத்து உச்சிச் சேக்கும்
 து.........க.........ரக் குரலளைஇச்
 சேக்கை நல்லியாழ் செவ்வழி பண்ணிச்
 செறிவிரல் பாணியின் அறிவரப் பாடவும்
 அகில்நாறு அங்கை சிவப்ப நல்லோர்
 துகிலின் வெண்கிழித் துய்க்கடை நிமிடி
 உள்ளிழுது உறீஇய வொள்ளடர்ப் பாண்டில்
 திரிதலைக் கொளீஇ எரிதரு மாலை
   
95




100




105



 
 வெந்துயர்க் கண்ணின் வேல்இட் டதுபோல்
 வந்திறுத் தன்றால் வலியெனக்கு இல்லெனக்
 கையறு குருசிலை வைகிய தெழுவென
 இலங்குசுடர் விளக்கோடு எதிர்வந்து ஏத்திப்
 புறங்காப்பு இளையர் புரிந்தகம் படுப்ப
 எண்ணால் இலக்கணத்து உள்நூல் வாங்கித்
 திணைவிதி யாளர் இணைஅற வகுத்த
 தமனியக் கூடத்துத் தலைஅளவு இயன்ற
 மயன்விதி அன்ன மணிக்காழ் மல்லத்துச்
 சித்திர அம்பலம் சேர்ந்துகுடக்கு ஓங்கிய
 அத்தம் பேரிய அணிநிலை மாடத்து
 மடைஅமைத்து இயற்றிய மணிக்கால் அமளிப்
 படையகத்து ஓங்கிய பல்பூம் சேக்கைப்
 பைதல் நெஞ்சத்து மையல் கொள்ளா
 எஃகுஒழி களிற்றின் வெய்துயிர்த்து உயங்கி
   
110




115
 உண்டுஎனக் கேட்டோர் கண்டுஇனித் தெளிகஎனத்
 திருவின் செய்யோள் உருவமெய்த் தோன்றத்
 தீட்டிரும் பலகையில் றிருத்தித் தேவர்
 காட்டி வைத்ததோர் கட்டளை போலக்
 கலன்பிற அணிந்து காண்போர் தண்டா
 நலந்துறை போகிய நனிநாள் ஒடுக்கத்து
 மணிமுகிழ்த்து அன்ன மாதர் மென்முலைத்
 தணிமுத் ஒருகாழ் தாழ்ந்த வாகத்
   


120




125
 திலமலர்ச் செல்வாய் எயிறுவிளக் குறுக்க
 அலமரு திருமுகத்து அளகத் அப்பிய
 செம்பொன் சுண்ணம் சிதர்ந்த திருநுதல்
 பண்பில் காட்டிப் பருகுவனள் போலச்
 சிதர்மலர்த் தாமரைச் செந்தோடு கடுப்ப
 மதரரி நெடுங்கண் வேல்கடை கான்ற
 புள்ளி வெம்பனி கரந்த கள்விதன்
 காரிகை உண்டஎன் பேரிசை ஆண்மை
 செறுநர் முன்னர்ச் சிறுமை இன்றிப்
 பெறுவென் கொல்லென மறுவந்து மயங்கி
 எவ்வமிக்கு அவனும் புலம்ப அவ்வழிக்
   

130




135
 குழவி ஞாயிறு குன்றுஇவர் வதுபோல்
 மழகளிற்று எருத்தின் மைந்துகொண்டு இருந்த
 மன்ன குமரன் தன்னெதிர் நோக்கி
 ஒழுகுபு சோர்ந்தாங்கு உக்கதுஎன் நெஞ்சென
 மழுகிய திருமுகம் மம்மரோடு இறைஞ்சித்
 தருமணற் பேரிற் தமரொடு புக்குத்
 திருமணி மாடத்து ஒருசிறை நீங்கிப்
 பெருமதர் மழைக்கண் வருபனி அரக்கிக்
   
   



140
 கிளையினும் பிரித்தவன் கேடுதலை எய்தித்
 தளையினும் பட்டவன் தனியன் என்னான்
 வேழம் விலக்கிய யாழொடும் செல்கஎனச்
 சொன்னோன் ஆணை முன்னர்த் தோன்றி
 உரக்களிறு அடக்குவது ஓர்த்து நின்ற
 மரத்தின் இயன்றகொல் மன்னவன் கண்எனப்
   

145




150
 உள்ளகத்து எழுதரு மருளினள் ஆகித்
 தெளிதல் செல்லா திண்நிறை அழிந்து
 பொறியறு பாவையின் அறிவுஅறக் கலங்கிக்
 காமன் என்னும் நாமத்தை மறைத்து
 வத்தவன் என்னும் நற்பெயர் கொளீஇப்
 பிறைக்கோட்டு டியானை பிணிப்பதும் அன்றி
 நிறைத்தாழ் பறித்துஎன் நெஞ்சகம் புகுந்து
 கள்வன் கொண்ட உள்ளம் இன்னும்
 பெறுவென் கொல்என மறுவந்து மயங்கித்
 தீயுறு வெண்ணெயின் உருகு நெஞ்சமொடு
 மறைந்தவண் நின்ற மாதரை இறைஞ்சிய
   
155  வல்லிருள் புதைப்பச் செல்சுடர் சுருக்கி
 வெய்யோன் நீங்கிய வெறுமைத்து ஆகிக்
 கையற வந்த பைதல் மாலைத்
 தீர்ந்தவண் ஒழிந்த திருநல் ஆயம்
 தேர்ந்தனர் குழீஇப் பேர்ந்தனர் வருவோர்
   
160




165
 இணையில் ஒருசிறைக் கணைஉளங் கிழிப்பத்
 தனித்துஒழி பிணையின் நினைப்பனள் நின்ற
 எல்ஒளிப் பாவையைக் கல்லெனச் சுற்றி
 அளகமும் பூணும் நீவிச் சிறிதுநின்
 திலக வாணுதல் திருவடி ஓக்கும்
 பிறையது காணாய் இறைவளை முன்கை
 திருமுகை மெல்விரல் கூப்பி நுந்தை
 பெரும்பெயர் வாழ்த்தாய் பிணைஎன் போரும்
   


170




175
 செம்பொன் வள்ளத்துத் தீம்பால் ஊட்டும்
 எம்மனை வாராள் என்செய் தனள்எனப்
 பைங்கிளி காணாது பயிர்ந்துநிற் கூஉம்
 அஞ்சொல் பேதாய் அருளென் போரும்
 மதியங் கெடுத்து மாவிசும் புழிதரும்
 தெறுதரு நாகம்நின் திருமுகம் காணில்
 செறுதலும் உண்டினி எழுகென் போரும்
 பிசியும் நொடியும் பிறவும் பயிற்றி
 நகைவல் ஆயம் நண்ணினர் மருட்டி
   



180




185
 முள்ளெயிறு இலங்கு முறுவல் அடக்கிச்
 சொல்எதிர் கொள்ளாள் மெல்லியல் இறைஞ்சிப்
 பந்தெறி பூமியுள் பாணி பெயர்ப்புழி
 அஞ்செங் கிண்கிணி அடியலைத் தனகொல்
 திருக்கிளர் வேங்கையும் பொன்னும் பிதிர்ந்து
 மருப்பியல் செப்புங் குரும்பையும் இகலி
 உருத்தெழு மென்முலை முத்தலைத் தனகொல்
 பிணையல் அலைப்ப நுதல்நொந் ததுகொல்
 இனையவை இவற்றுள் யாதுகொல் இந்நோய்
 பெருங்கசி வுடையளிப் பெருந்தகை மகளெனத்
 தவ்வையும் தாயும் தழீஇயினர் கெழீஇச்
   


190




195
 செல்வி யிலள்எனச் சேர்ந்தகம் படுப்பச்
 செம்பொன் விளக்கொடு சேடியர் முந்துறத்
 திண்ணிலைப் படுகால் திருந்தடிக்கு ஏற்ற
 மணிக்கலம் ஒலிப்ப மாடம் ஏறி
 அணிக்கால் பவழத்து யவனர் இயற்றிய
 மணிக்காழ் விதானத்து மாலை தொடர்ந்த
 தமனியத்து இயன்ற தாமரைப் பள்ளிக்
 கலன்அணி ஆயம் கைதொழ ஏறிப்
 புலம்புகொள் மஞ்ஞையின் புல்எனச் சாம்பிப்
 புனல்கொல் கரையின் நினைவனள் விம்மிப்
 பாவையும் படரொடு பருவரல் கொள்ள
   

200




205




210
 இருவர் நெஞ்சமும் மிடைவிடல் இன்றித்
 திரிதரல் ஓயாது திகிரியில் சுழல
 ஊழ்வினை வலிப்பின் அல்லது யாவதும்
 சூழ்வினை அறுத்த சொல்லருங் கடுநோய்க்
 காமக் கனலெரி கொளீஇ யாமம்
 தீர்வது போலா தாகித் திசைதிரிந்து
 தீர்வது போல விருளொடு நிற்பச்
 சேர்ந்த பள்ளி சேர்புணை யாகி
 நீந்தி அன்ன நினைப்பின ராகி
 முழங்குகடல் பட்டோர் உழந்துபின் கண்ட
 கரைஎனக் காலை தோன்றலின் முகையின
 பூக்கண் மலரப் புலம்பிய பொய்கைப்
 பால்கேழ் அன்னமொடு பல்புள் ஒலிப்பப்
 பரந்துகண் புதைஇய பாயிருள் நீங்கிப்
 புலர்ந்தது மாதோ பொழில்தலைப் பெயர்ந்தென்.