19. தேவிக்கு விலாவித்தது

 

இதன்கண், உதயணகுமரன் வாசவதத்தை தீயின்கண் அகப்பட்டு இறந்துபட்டாள் என்று கருதி ஆற்றாமையால் தானும் தீயில் மூழ்கி  உயிர்விடப் போதலும் தோழர் அவளை விலக்குதலும், உதயணன் வாசவதத்தையின் உடம்பையேனும் எனக்குக் காட்டுமின் என்று தோழரை இரத்தலும், உருமண்ணுவா உதயணனை அழைத்துச் சென்று அரண்மனை அகத்தே வெந்து கிடந்த அணிகலன்களையும், கள்வர் இருவர் உடம்புகளையும் காட்டி வாசவதத்தை இறந்தே விட்டாள் என்று அவ்உதயணன் நம்பும்படி செய்தலும், உதயணனன் பொன்னரிமாலை முதலிய அணிகலன்களைக் கையிலெடுத்து நோக்கி அரற்றுதலும், முன்நிகழ்ச்சிகளை நினைத்து நினைத்துப் புலம்புதலும், தோழர் இச்செவ்வி அறிந்து பகைவர் படையெடுத்து வருதல் கூடும் என்று கருதித் தம் படைகளை எல்லைப் புறத்தில் சென்றிருக்கச் செய்தலும் பிறவும் கூறப்படும்.
 
              ஏற்றெழுந் ததன்பின் இனியோர் குழீஇ
            ஆற்றல் சான்ற நூல்துறை மருங்கின்
            பழையவும் புதியவும் உழைவயின் பிரியார்
            காரணம் உரைப்பவும் ஓர்வரை நில்லான்
        5   அந்தீம் கிளவிஎன் அம்பிணை மூழ்கிய
            செந்தீயானும்புகுவென் சென்றென
            முரிந்த கந்தின் எரிந்த வேயுள்
            அரிந்த யாப்பில் சொரிந்த கடுங்காழ்
            கரிந்த மாடம் காவலன் குறுக
 
         10    ஆரளைச் செறிந்த அருஞ்சின நாகத்துப்
            பேரழல் காணிய பேதை மாந்தர்
            வாயில் மருங்கின் தீயெரி கொளீஇயது
            செயிற்படு பொழுதில் செம்முக நின்றுதம்
            உயிர்ஒழிந் ததுபோல் உறுதி வேண்டார்
       15    அடங்கார் அடக்கிய அண்ணல் மற்றுநின்
            கடுஞ்சினம்பேணாக் கன்றிய மன்னர்
            இகப்ப எண்ணுதல் ஏதம் உடைத்தே
 
              ஆகியது அறியும் அரும்பொருள் சூழ்ச்சி
       20   யூகியின் அல்லதை உதயண குமரன்
            உள்ளம் இலன்என வெள்ளைமை கலந்த
            புறத்தோர் உரைக்கும் புன்சொல் மாற்றம்
            அகத்தோர்க்கு என்றும் அகஞ்சுடல் ஆனாது
            ஆங்ஙனம் அந்நிலை அறிந்து மனங் கவலாது.
       25   ஓங்கிய பெருங்குலம் தாங்குதல் கடனாப்
            பூண்டனை யாகுதல் பொருள்மற்று இதுவென
            மாண்ட தோழர் மாற்றுவனர் விலக்கக்
 
              காலங் கலக்கக் கலக்கமொடு உராஅய்
            ஞாலம் முழுதும் நவைக்குற்று எழினும்
       30   ஊர்திரை உடைய ஒலிகெழு முந்நீர்
            ஆழி இறத்தல் செல்லாது ஆங்குத்
            தோழரை இகவாத் தொடுகழல் குருசில்
            சூழ்வளை முன்கைச் சுடர்க்குழை மாதர்
            மழைக்கால் அன்ன மணிஇருங் கூந்தல்
       35   அழல்புகை சூழ அஞ்சுவனள் நடுங்கி
            மணிக்கை நெடுவரை மாமலைத் சாரல்
            புனத்தீப் புதைப்பப் போக்கிடங் காணாது
            அளைச்செறி மஞ்ஞையின் அஞ்சுவனள் விம்மி
            இன்னுயிர் அன்ன என்வயின் நினைஇத்
       40   தன்னுயிர் வைத்த மின்உறழ் சாயல்
            உடப்புச் சட்டகம் உண்டெனில் காண்கம்
            கடுப்புஅழல் அவித்துக் காட்டுமின் விரைந்தெனக்
 
              கரிப்பிணம் காணார் காவலர் என்னும்
            மொழிப்பல காட்டவும் ஒழியான் அழிய
       45   முன்னையர் ஆதலின் முதற்பெருந் தேவி
            இன்னுயிர் இகப்ப விடாஅர் இவரென
            மன்ன குமரன் மதித்தனன் ஆயின்
            எண்ணிய சூழ்ச்சிக்கு இடையூறு ஆமெனத்
            தவலரும் பெரும்பொருள் நிலைமையின் எண்ணி
       50   உலைவில் பெரும்புகழ் உருமண் ணுவாவிரைந்து
            ஆய்புகழ் அண்ணல் மேயது விரும்பி
            நீள்புடை இகந்துழி ஞாயில் ஒதுங்கிக்
            கோயில் வட்டத்து ஆய்நலம் குயின்ற
            பள்ளிப் பேரறை உள்ளகம் புக்காங்கு
       55   அழிவுறு  சுருங்கை வழிமுதல் மறைஇ
            விம்முறு துயரமொடு விளிந்துயிர் வைத்த
            குய்ம்மனத் தாளர் குறைப்பிணங் காட்டித்
            தாயும் தையலும் தீஉண விளிந்தமை
            மாயம் அன்றென மன்னனைத் தேற்றி
 
         60   மணியும் முத்தும் அணியும் இழந்துதிர்ந்து
            ஆரக் கம்மம் சாரவீற் றிருந்து
            கொள்கைக் கட்டழல் உள்ளுற மூட்டி
            மாசுவினை கழித்த மாதவர் போலத்
            தீஅகத்து இலங்கித் திறல்விடு கதிரொளி
       65   சேடுறக் கிடந்த செம்பொன் செய்கலம்
            பொன்னணி மார்பன் முன்னண விடுதலின்
 
              ஒண்செந் தாமரை ஒள்இதழ் அன்ன
            பண்கெழு விரலில் பன்முறை தொகுத்து
            நானம்  மண்ணி நீனிறம் கொண்டவை
       70   விரித்தும் தொகுத்தும் வகுத்தும் வாரியும்
            உளர்ந்தும் ஊறியும் அளந்துகூட்டு அமைத்த
            அம்புகை கழுமிய அணிமா ராட்டம்
            வெம்புகை குழ்ந்து மேலெரி ஊர
            விளிந்தது நோக்கி ஒழிந்தனை ஆதலின்
       75   நன்நுதல் மாதர் பின்னிருங் கூந்தல்
            பொன்னரி மாலாய் பொருளிலை என்றும்
 
              கொடியும் மலரும் கொழுந்தும் குலாஅய்
            வடிவுபெற வகுத்த மயிர்வினைச் சிப்பத்து
            வத்தவ மகடூஉச் சித்திரத்து இயற்றிய
       80   பல்வினைப் பரிசரத்து எல்லை யாகி
            மதிப்புறம் கவைஇய வானவில் போல
            நுதல்புறம் கவவி மிகச்சுடர்ந்து இலங்கும்
            சிறப்புடைப் பட்டம் சிறியோர் போல
            இறப்புக் காலத்துத் துறப்புத்தொழில் துணிந்த
       85   வன்கண்மை பெரிதெனத் தன்கணும் நோக்கான்
            பட்டப் பேரணி  விட்டெறிந்து இரங்கியும்
 
              பனிநாள் புண்ணியத்து அணிபெறு திங்கள்
            அந்தியுள் முளைத்த வெண்பிறை போலச்
            செந்தீச் சிறுநுதல் மூழ்கத் தீந்து
       90   நிலமிசை மருங்கின் வீழ்ந்தனை யோஎனத்
            திலகம் நோக்கிப் பலபா ராட்டியும்
 
              வெண்மதிக் கைப்புடை வியாழம் போல
            ஒண்மதி திகழ ஊசல் ஆடிச்
            சீர்கெழு திருமுகத்து ஏரணி யாகிய
       95   வார்நலக் காதினுள் வனப்புவீற் றிருந்த
            நன்பொன் குழைநீ நன்நுதல் மாதரை
            அன்பில் கரந்தே அகன்றனை யோஎனப்
            போதணி கூந்தல் பொற்பூம் பாவை
            காதணி கலத்தொடு கவன்றனன் கலங்கியும்
 
        100    பொய்கையில் தீர்ந்து புன்கண் கூர
            எவ்வ மாந்தர் எரிவாய் உறீஇய
            பொருங்கயல் போர வருந்துபு மிளிராக்
            களைகண் பெறாஅக் கலக்க நோக்கமொடு
            தளைஅவிழ்ந்து அகன்ற தாமரை நெடுங்கண்
      105    அகையற அருளா யாகிக் கலிழ்ந்து
            செவ்அழல் புதைத்திடச் சிதைந்தனை யோஎன
            அவ்விழிக்கு இரங்கி வெவ்வழல் உயிர்த்தும்
 
              செஞ்சாந்து வரித்த சின்மெல் ஆகத்து
            அஞ்சாய் மருங்குல் வருந்த அடிபரந்து
      110    வீங்குபு செறிந்த வெங்கண் வனமுலை
            பூங்கொடிப் பொன்கலம் போழ்ந்துவடுப் பொறிப்ப
            மகிழ்ச்சி எய்தி மனம்ஒன் றாகிய
            புணர்ச்சிக் காலத்து மதர்த்துமுகம் சிவப்ப
            நோய்கூர்ந்து அழியும் நீயே அளியை
      115    வேக வெவ்அழல் வெம்புகை அணிந்த
            பொங்கழல் போர்வை போர்த்ததோ எனவும்
 
              இலைப்பெரும் பூணும் இதயவா சனையும்
            நலப்பெரும் களிகையும் நன்முத் தாரமும்
            பன்மணிப் பூணும் சின்மணித் தாலியும்
      120    முத்துஅணி வடமும் சித்திர உத்தியும்
            நாணும் தொடரும் ஏனைய பிறவும்
            மெய்பெறப் புனைந்து கைவல் கம்மியச்
            செய்கையில் குயிற்றிய சித்திரம் கொளீஇப்
            பூண்அணி யுள்ளும் மாண்அணி யுடையவை
      125    ஆகக்கு ஏற்ப அணிகம் வாராய்
            வேகத் தானை வேந்தன் மகளே
            தனித்தாய் இயங்கலும் தாங்கினை யோவெனப்
            பனித்தார் மார்பன் பலபா ராட்டியும்
 
              ஓங்குவரை மருங்கின் ஒளிபெற நிவந்த
      130    காம்பொசிந்து அன்ன கவினை யாகிய
            நலங்கிளர் தடந்தோள் நவையறச் சேஎந்து
            அலங்குமலர்த் தாமரை அகவயின் அமர்ந்த
            திருமகள் இருக்கை உருவுபடக் குயிலாக்
            காமுறப் புனைந்த தாமம் உளப்படப்
      135    பொறிவரி ஒழுக்கம் போலும் மற்இம்
            மறியிலைக் கம்மமொடு மகரங் கவ்விக்
            கொடியொடு துளங்கி அடிபெற வகுத்த
            அருமணிக் கடகமொடு அங்குலி அழியச்
            செற்றுபு சிறந்த சிறப்பும்உள் ளாது
      140    கற்றதென் அமர்ந்த கலப்பின வாகியும்
            பற்றுவிட்டு அகறல் பண்போ எனவும்
 
              பவழக் காசொடு பன்மணி விரைஇத்
            திகழக் கோத்த செம்பொன் பாண்டில்
            கைவினைக் கொளுவில் செய்துநலம் குயின்ற
      145    எண்ணாற் காழ்நிரை கண்உமிழ்ந்து இலங்க
            உருவக் கோலமொடு உட்குவீற்று இருந்த
            அரவுப்பை அன்ன ஐதேந்து அல்குல்
            புகைக்கொடிப் புத்தேள் பொருக்கென ஊட்டி
            அழல்கொடி அரத்தம் மறைத்தவோ எனவும்
 
        150    மணிக்கண் அன்னம் அணித்தகு பெடையைப்
            பயிலிதழ்ப் பனிநீர்ப் பக்கம் நீக்கி
            வெயில்கெழு வெள்ளிடை விட்டிசின் ஆங்கு
            மணியரிக் கிண்கிணி சிலம்பொடு மிழற்ற
            ..................................................................  
            நின்னணி காண்கம் சிறிது சிறிதுஉலாஅய்
      155    மராஅந் துணரும் மாவின் தழையும்
            குராஅம் பாவையும் கொங்கவிழ் முல்லையும்
            பிண்டித் தளிரும் பிறவும் இன்னவை
            கொண்டியான் வந்தேன் கொள்குவை ஆயின்
            வண்டுஇமிர் கோதாய் வாராய் எனயும்
 
        160    அணிவரைச் சாரல் அருவி ஆடியும்
            பணிமலர் கொய்தும் பாவை புனைந்தும்
            திருவிழை மகளிரோடு ஒருவழி வருவோய்
            மருவின் மாதவன் மாசின் மடமகள்
            விரிசிகை வேண்ட வேறுபடு வனப்பின்
      165    தாமம் தொடுத்தியான் கொடுத்தது தவறெனக்
            காம வேகம் கடுத்த கலப்பிடை
            முகத்தே வந்துஓர் முசுக்கலை தோன்ற
            அகத்தே நடுங்கி அழல்பட வெய்துயிர்த்து
            அஞ்சி அடைந்த அஞ்சில் தேமொழிப்
      170    பஞ்சி மெல்லடிப் பாவாய் பரந்த
            கடுந்தீக்கு அஞ்சாது கரத்தியோ எனவும்
 
              அங்கண் மாநிலத்து அகன்றுயிர் வாழ்வோர்
            வன்க ணாளர் என்றுபண்டு உரைப்போய்
            நின்கண் அம்மொழி நிற்ப என்கண்
      175    புன்கண் நோக்காது போதியோ எனவும்
 
              இளைப்புறு ஞமலி நலத்தகு நாவில்
            செம்மையும் மென்மையுஞ் சிறந்துவனப்பு எய்தி
            அம்மை முன்னம் அணிபெறப் பிணங்கி
            இலைபடக் குயிற்றிய எழில்ஒளிக் கம்மத்துத்
      180    தலைவிரல் சுற்றும் தாதணி வளையமும்
            வட்ட ஆழியும் கட்டுவடஇணையும்
            மகர வாயொடு நகைபெறப் புனைந்த
            விரல்அணி கவ்வி நிரலொளி எய்திப்
            பூஅடர் மிதிப்பினும்  புகைந்தழல் உறூஉம்
      185    சேவடிக் கேற்ற செம்பொன்  கிண்கிணி
            பாடக் குரலொடு பரடுபிறழ்ந்து அரற்றக்
            கழனிக் கண்பின் காயெனத் திரண்ட
            அழகணி சிறுதுடை அசைய ஒதுங்கி
            ஆயத்து இறுதி அணிநடை மடப்பிடி
      190    கானத்து அசைந்து தானத்தின் தளர்ந்தபின்
            கரிப்புல் பதுக்கையும் கடுநுனைப் பரலும்
            எரிப்புஉள் உறீஇ எஃகின் இயலவும்
            எற்கா முறலின் ஏதம் அஞ்சிக்
            கற்கால் பயின்ற காலவி சில்அதர்
      195    நடுக்கம் எய்தி நடப்பது நயந்தோய்
 
              இடுக்கண் யான்பட என்னையும் நினையாது
            கடுப்பழல் அகவயின் கரத்தியோ எனவும்
            படிகடந்து அடர்ந்த பல்களிற்று யானை
            இடிஉறழ் முரசின் இறைமகன் பணிப்ப
      200    நூலமை வீணைக் கோலமை கொளீஇக்
            கரணம் பயிற்றினுங் காந்தள் முகிழ்விரல்
            அரணங் காணா அஞ்சின போலப்
            பயத்தின் நீங்காச் சிவப்புஉள் உறுவின
            அடைதற்கு ஆகா ஆரழற் செங்கொடி
      205    தொடுதற்கு ஆற்றத் துணிந்தவோ எனவும்
 
              வடிக்கண் மாதர் முடிக்கலம் முதலா
            அடிக்கலம் தழீஇ முடித்தார் மார்பன்
            அரற்றியும் அயர்ந்தும் உரற்றியும் உயிர்த்தும்
            வீழ்ந்தும் எழுந்தும் தாழ்ந்தும் தளர்ந்தும்
      210    செருவடு செங்கண் தெண்பனி சிதறி
            உருவுடை அகலத்து ஊழூழ் உறைத்தரக்
            கோல இரும்பிடி குழிப்பட்டு ஆழ
            நீல வேழம் நினைந்துஉழன் றாங்கு
            மாலை மார்பன். மாதரைக் காணாது
      215    இன்னவை பிறவும் பன்முறை அரற்றச்
 
              செறுநர் முன்னர்ச் சீர்மை அன்றென
            உறுநர் சூழ்ந்த ஒருபால் ஒடுங்கித்
            தேரும் புரவியும் வார்கவுள் யானையும்
            மறப்படை இளையரோடு திறப்பட வகுத்துப்
      220    போரணி கலமும் பொருளும் நல்கி
 
              ஆரணி அரசன் அடுதிறல் ஆண்தகை
            அற்றம் அறியாச் செற்றச் செய்கையோடு
            மேல்வர வுண்டெனின் மீளி வாட்டிச்
            சென்று நெருங்காது பின்றியும் விடாது
      225    குன்றகம் அடுத்துக் கூழ்அவண் ஒடுக்கி
            யாப்புற நிற்கெனக் காப்புறு பெரும்படை
            திசைசெலப் போக்கி அசைவில் ஆண்மை
            மன்பெருங் குமரனை மரபுளிக் காட்டித்
            துன்பம் தீரிய தொடங்கினர் துணிந்துஎன்.