தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஒளவையார்


ஒளவையார்

15. பாலை
பறை பட, பணிலம் ஆர்ப்ப, இறைகொள்பு
தொல் மூதாலத்துப் பொதியில் தோன்றிய
நால் ஊர்க் கோசர் நல் மொழி போல,
வாய் ஆகின்றே-தோழி!-ஆய் கழல்
சேயிலை வெள் வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே.
உடன்போயின பின்றை, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றாள். நிற்ப, செவிலித்தாய் நற்றாய்க்கு அறத்தோடு நின்றது. -ஒளவையார்

23. குறிஞ்சி
அகவன்மகளே! அகவன்மகளே!
மனவுக் கோப்பு அன்ன நல் நெடுந் கூந்தல்
அகவன்மகளே! பாடுக பாட்டே;
இன்னும், பாடுக, பாட்டே-அவர்
நல் நெடுங் குன்றம் பாடிய பாட்டே.
கட்டுக்காணிய நின்றவிடத்து, தோழி அறத்தோடு நின்றது. - ஒளவையார்

28. பாலை
முட்டுவேன்கொல்? தாக்குவேன்கொல்?
ஓரேன், யானும்: ஓர் பெற்றி மேலிட்டு,
'ஆஅ! ஒல்' எனக் கூவுவேன்கொல்?-
அலமரல் அசைவளி அலைப்ப, என்
உயவு நோய் அறியாது, துஞ்சும் ஊர்க்கே.
வரைவிடை ஆற்றாளாய்க் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - ஒளவையார்

29. குறிஞ்சி
நல் உரை இகந்து, புல் உரை தாஅய்,
பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி,
அரிது அவாவுற்றனை-நெஞ்சே!-நன்றும்
பெரிதால் அம்ம நின் பூசல், உயர் கோட்டு
மகவுடை மந்தி போல
அகன் உறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.
இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைமகன், 'இவர் எம்மை மறுத்தார்' என்று வரைந்து கொள்ள நினையாது, பின்னும் கூடுதற்கு அவாவுற்ற நெஞ்சினை நோக்கிக் கூறியது. - ஒளவையார்

39. பாலை
'வெந் திறல் கடு வளி பொங்கர்ப் போந்தென,
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை, அருஞ் சுரம்' என்ப-நம்
முலையிடை முனிநர் சென்ற ஆறே.
பிரிவிடை 'ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்கு, 'யாங்ஙனம் ஆற்றுவேன்?' எனத் தனது ஆற்றாமை மிகுதி தோன்றத் தலைமகள் கூறியது. - ஒளவையார்

43. பாலை
'செல்வார் அல்லர்' என்று யான் இகழ்ந்தனனே;
'ஒல்வாள் அல்லள்' என்று அவர் இகழ்ந்தனரே:
ஆயிடை, இரு பேர் ஆண்மை செய்த பூசல்,
நல்அராக் கதுவியாங்கு, என்
அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே.
பிரிவிடை மெலிந்த கிழத்தி சொல்லியது. - ஒளவையார்

80. மருதம்
கூந்தல் ஆம்பல் முழு நெறி அடைச்சி,
பெரும் புனல் வந்த இருந் துறை விரும்பி,
யாம் அஃது அயர்கம் சேறும்; தான் அஃது
அஞ்சுவது உடையளாயின், வெம் போர்
நுகம் பட கடக்கும் பல் வேல் எழினி
முனை ஆன் பெரு நிரை போல,
கிளையொடு காக்க, தன் கொழுநன் மார்பே.
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது. - ஒளவையார்

91. மருதம்
அரில் பவர்ப் பிரம்பின் வரிப் புற விளை கனி
குண்டு நீர் இலஞ்சிக் கெண்டை கதூஉம்
தண் துறை ஊரன் பெண்டினை ஆயின்,
பல ஆகுக, நின் நெஞ்சில் படரே!
ஓவாது ஈயும் மாரி வண் கை,
கடும் பகட்டு யானை, நெடுந் தேர், அஞ்சி
கொன் முனை இரவு ஊர் போலச்
சில ஆகுக, நீ துஞ்சும் நாளே!
பரத்தையர்மாட்டுப் பிரிந்த தலைமகன் வாயில் வேண்டிப் புக்கவழி, தன்வரை த்தன்றி அவன் வரைத்தாகித் தன் நெஞ்சு நெகிழ்ந்துழி, தலைமகள் அதனை நெருங்கிச் சொல்லியது; பரத்தையிற் பிர

99. முல்லை
உள்ளினென் அல்லெனோ யானே? உள்ளி,
நினைந்தனென் அல்லெனோ பெரிதே நினைந்து,
மருண்டனென் அல்லெனோ, உலகத்துப் பண்பே?
நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை
இறைத்து உணச் சென்று அற்றாங்கு,
அனைப் பெருங் காமம் ஈண்டு கடைக்கொளவே.
பொருள் முற்றிப் புகுந்த தலைமகன். 'எம்மை நினைத்தும் அறிதிரோ?' என்ற தோழிக்குச் சொல்லியது. - ஒளவையார்

102. நெய்தல்
உள்ளின், உள்ளம் வேமே; உள்ளாது
இருப்பின், எம் அளவைத்து அன்றே; வருத்தி
வான் தோய்வற்றே, காமம்;
சான்றோர் அல்லர், யாம் மரீஇயோரே.
'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி, 'யான் யாங்ஙனம் ஆற்றுவேன்?' என்றது.- ஒளவையார்

158. குறிஞ்சி
நெடு வரை மருங்கின் பாம்பு பட இடிக்கும்
கடு விசை உருமின் கழறு குரல் அளைஇக்
காலொடு வந்த கமஞ் சூல் மா மழை!
ஆர் அளி இலையோ நீயே? பேர் இசை
இமயமும் துளக்கும் பண்பினை;
துணை இலர், அளியர், பெண்டிர்; இஃது எவனே?
தலைமகன் இரவுக்குறி வந்துழி, அவன் கேட்பத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.- ஒளவையார்.

183. முல்லை
சென்ற நாட்ட கொன்றைஅம் பசு வீ
நம் போல் பசக்கும் காலை, தம் போல்
சிறு தலைப் பிணையின் தீர்ந்த நெறி கோட்டு
இரலை மானையும் காண்பர்கொல், நமரே?-
புல்லென் காயாப் பூக் கெழு பெருஞ் சினை
மென் மயில் எருத்தின் தோன்றும்
புன் புல வைப்பிற் கானத்தானே.
பருவ வரவின்கண், 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- ஒளவையார்

200. நெய்தல்
பெய்த குன்றத்துப் பூ நாறு தண் கலுழ்
மீமிசைத் தாஅய், வீசும் வளி கலந்து,
இழிதரும் புனலும்; வாரார்-தோழி!-
மறந்தோர் மன்ற; மறவாம் நாமே-
கால மாரி மாலை மா மலை
இன் இசை உருமினம் முரலும்
முன் வரல் ஏமம் செய்து அகன்றோரே.
பருவ வரவின்கண் ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி, 'பருவம் அன்று; வம்பு'என்ற வழி, தலைமகள் சொல்லியது. - ஒளவையார்.

364. மருதம்
அரில் பவர்ப் பிரம்பின் வரி புற நீர்நாய்
வாளை நாள் இரை பெறூஉம் ஊரன்
பொன் கோல் அவிர் தொடித் தற் கெழு தகுவி
எற் புறங்கூறும் என்ப; தெற்றென
வணங்கு இறைப் பணைத் தோள் எல் வளை மகளிர்
துணங்கை நாளும் வந்தன அவ் வரைக்
கண் பொர, மற்று அதன்கண் அவர்
மணம் கொளற்கு இவரும் மள்ளர் போரே.
வேறு ஒரு பரத்தை தன்னைப் புறங்கூறினாள் எனக் கேட்ட இற்பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பக் கூறியது. - ஒளவையார்

388. குறிஞ்சி
நீர் கால்யாத்த நிரை இதழ்க் குவளை
கோடை ஒற்றினும் வாடாதாகும்;
கவணை அன்ன பூட்டுப் பொருது அசாஅ
உமண் எருத்து ஒழுகைத் தோடு நிரைத்தன்ன
முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின்,
யானை கைம்மடித்து உயவும்
கானமும் இனிய ஆம், நும்மொடு வரினே.
தலைமகள் உடன்போக்கு நேர்ந்தமை உணர்ந்த தலைமகன், சுரத்து வெம்மையும்,தலைமகள் மென்மையும் குறித்து, செலவு அழுங்கலுறுவானைத் தோழி அழுங்காமற் கூறியது. - ஒளவையார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:08:46(இந்திய நேரம்)