தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பின்

  • திருஅரிமேய விண்ணகரம் (திருநாங்கூர்)

    சிறப்புக்கள்
    1. அடியவர்களின் பகைவர்களை அழிக்கும்     பொருட்டே
      எம்பெருமான் இங்கு எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். பகை
      நீக்கும்பரந்தாமன் என்றும் சொல்லலாம். பகைவர்களை வெல்ல
      நினைப்பவர்கட்கு இப்பெருமாள் ஒரு வரப்பிரசாதி.

    2. “திருமடந்தை மண்மடந்தை யிருபாலும் திகழ்த்
          தீவினை போயகல அடியவர்கட் கென்றும்
      அருள் நடந்து இவ்வேழுலகத்தவர் பணிய”

    3. திருமங்கையாழ்வார் இத்தலத்திற்குத் தாம் உகந்தருளின
      பாக்களில் 8 பாசுரங்களில் எம்பெருமான் தேவர்கட்காக
      அமிர்தம் கடைந்து அசுரர்களை வென்றதையும், மாவலியை
      அடக்கியதையும், இராவண சம்ஹாரத்தையும், பூதனையை
      மாய்த்ததையும் கூறி பகைவர்களை வெல்ல அருள் பாலிப்பவர்
      இவரே என்று தலைக்கட்டுகிறார்.

    4. உதங்க முனிவர் என்பார் எம்பெருமானைக் குறித்து தவம் புரிந்து,
      கோபால கண்ணனாக இத்தலத்தில் பெருமாளைச் சேவித்ததாக
      ஒரு வரலாறும் உண்டு.

    5. தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் நடைபெறும்
      கருடசேவைக்கு இவரும் எழுந்தருள்வர்.

    6. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களில் மங்களாசாசனம்.

    7. குடமாடு கூத்தர் என்பது இப்பெருமானின் திருநாமம். குடங்கள்
      எடுத்து ஆடினானா அல்லது குடைகொண்டு ஆடினானா
      என்றொரு மயக்கு இந்தக் “குடக்கூத்த” எனும் ஒரு சொல்லால்
      உண்டாகிறது.“குடங்கள் எடுத்து ஏறவிட்டுக் கூத்தாட வல்லவன்”
      என்பது பெரியாழ்வாரின்திருவாக்கு. ஆனால் அவர் திருமகள்
      ஆண்டாளோ குன்றம் குடையாய் எடுத்தாய்க் குணம் போற்றி
      என்று குன்றத்தை குடை பிடித்ததாகக் கூறுகிறார். இத்தலத்தைப்
      பொறுத்த மட்டில் குன்றைக் குடையாக எடுத்த கோவர்த்தன
      நாதனே இங்கு எழுந்தருளியிருப்பதால் குடக்கூத்தர் அல்லது
      குடமாடு கூத்தர் என்ற சொல் எதனைக் குறிக்கிறதென்பது
      ஆழ்பொருள் விஷயமாகும்.

      மலையாள திவ்ய தேசங்களில் திருக்கடித்தானம் என்பது ஒன்று.
      இங்கு ஒரு காலத்தில் எம்பெருமானுக்கு நடைபெற்ற விழாக்களில்
      பெண்கள் குடைபிடித்து நடனமாடும் நிகழ்ச்சி (குன்றத்தைக்
      குடையாக எடுத்ததை நினைவு கூர்தலைப் போல) மிகச் சிறப்பாக
      நடைபெற்ற தென்றும் காலப் போக்கில் இந்நிகழ்ச்சி
      கைவிடப்பட்டதென்றும் திருக்கடித்தானத்தில் கர்ண பரம்பரைச்
      செய்தி. நம்மாழ்வார் திருக்கடித்தானத்திற்கு இட்டருளின
      பாசுரத்தில் குடக்கூத்த எம்பெருமான் என்று கூறியிருப்பது இங்கு
      நடைபெற்ற பெண்கள் ஆடும் குடைக் கூத்தினைப் பற்றியதாகும்
      என்று இங்குள்ளோர் பொருள் கூறுவர்

      கோயில் கொண்டான் தன் திருக்கடித்தானத்தை
          கோயில் கொண்டான் அதனோடு என்னெஞ்சகம்
      கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ, வைகுந்தம்
          கோயில் கொண்ட குடக்கூத்த அம்மானே

                  - என்கிறார் நம்மாழ்வார்.

      வைகுந்தத்தில் குடங்கள் எடுத்தாடுவது இயல்பன்றே. அது
      நிகழ்ந்தது     கோகுலத்தில்     தானே.     வைகுந்தத்தில்
      கோபுரத்தையன்றோ குடையாக கொண்டுள்ளான், பரமபதநாதன்.
      எனவே குன்றத்தைக் குடையாக எடுத்த நிகழ்ச்சியைத்தான்
      “குடக்கூத்த” என்று நம்மாழ்வார் நவில்கிறாராம். குடை என்னும்
      தமிழ்ச்சொல் மலையாள மொழியில் “கொட” என்று வழங்கி
      வருதலும்ஈண்டு ஆய்விற்குரியதாகும்.

      மேலும் நம்மாழ்வார் அர்ச்சாவதார மூர்த்திகளை மங்களாசாசனம்
      செய்த பாக்களில்
          பரவி வானவரேத்த நின்ற பரமனைப்
          பரஞ்சோதியை குரவை கோத்த குழகனை
          மணிவண்ணனைக் குடக்கூத்தனை” என்றும்,
      “எழுமைக்கும் எனதாவிக்கு இன்னமுதத்தினை எனதாறுயிர்
      கெழுமிய கதிர்ச் சோதியை மணிவண்ணனைக் குடக்கூத்தனை”

      என்றும் அருளிய பாக்களில் பெரியாழ்வாரின் திருவாக்கு போல
      பிரித்து விளக்காமல் குடக்கூத்த, குடக்கூத்த என்று சொல்வதும்
      ஆய்தற்குரியதன்றோ, திருமங்கையாழ்வார் குடமாடு கூத்தன் என்ற
      சொல்லை இரண்டு தலங்கட்கு மங்களாசாசனம் செய்யும்போது
      இரு வேறுபட்ட பொருளில் எடுத்தாள்கிறார்.

    8. நந்திபுரவிண்ணகரத்தை மங்களாசாசனம் செய்யும்போது
      தாய்செற உளைந்து தயிருண்டு குட மாடு தட
          மார்வர் தகைசேர் ....................... என்று
      குடங்களில் தயிருண்டதை கூறுக

    9. இத்தலத்திற்கு அளித்த பாடலில்,
      காமரூசீர் முகில் வண்ணன் காலிகள் முன்
      காப்பான் குன்றதனால் மழைதடுத்துக் குடமாடு
      கூத்தன் குலவுமிடம்

      என்று குன்றை குடையாய் பிடித்த காட்சியைக் கோடிட்டுக்
      காட்டுகிறார். எனவே இங்கிருப்பவனுக்கு கூறப்பட்ட குடமாடு
      கூத்தன் என்ற சொல் குடங்களையெடுத்து ஆடவல்ல
      கூத்தனல்ல “குன்றத்தைக் குடையாய் எடுத்த கோவிந்தன் தான்”
      என்பதில் சான்றோர் மருட்சி கொள்வாரா,

      மேலும் குடங்களெடுத் தேறவிட்டுக் கூத்தாடுவது லீலாவிநோதம்
      குன்றத்தைக் குடையாய்க் கொண்டு காப்பது அவன் வாத்ஸல்யம்.
      பகைவனுக்கு அருளும் பண்பினனாக இங்கு எழுந்தருளியுள்ளவன்
      குடங்கள் எடுத்து ஆடுபவனன்று குடையாக குன்றத்தை
      எடுத்தவனே என்று தலைக்கட்டுவதற்கு தடையாது முளதோ,

      எனவே குடமாடு கூத்தன் என்று இங்கு குறிப்பிட்டது குன்றைக்
      குடையாகப் பிடித்ததைத்தான் குறிக்குமென்பது துணிவு. மேலும்
      பாடல் 207இல் குன்றத்தாய் என்றும், குடமாடு கூத்தன் என்றும்
      பிரித்துச் சொல்லப்பட்டுள்ளதும் இங்கு சீர்தூக்கிப் பார்க்க
      வல்லதொன்றாகும்.     குன்றத்தை     குடையாக     எடுத்து
      கோபாலர்களையும், ஆவினங்களையும் காத்தருளின கோவர்த்தன
      நாதனே இங்கு எழுந்தருளிய 11 பெருமான்களுள் ஒரவராக
      இருப்பதால் அந்த கோவர்த்தனகிரியை குடையாகப் பிடித்த
      நிகழ்ச்சியே இங்கு மறைமுகமாக உணர்த்தப்பட்டுள்ளதால்
      குடமாடு கூத்தன் என்று திருமங்கையாழ்வார் குறிப்பது
      குடைபிடித்த நிகழ்ச்சியேயாகும்.

      எனவே குடமாடு கூத்தன் என்று இங்கு எடுத்தாளப்பட்ட
      இச்சொல் குடைக் கூத்தினையே குறிக்கிறது என்பதில் யாதும்
      ஐயமில்லை.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:01:20(இந்திய நேரம்)