தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • வீரராகப்பெருமாள் கோவில் - திரு எவ்வுள்

    சிறப்புக்கள்

    1. இச்ஷேத்திரத்திற்கு வீச்சாரண்யச் ஷேத்ரம் என்றும் இங்கு
      செய்யப்படும் புண்ணியமாவது பல்லாயிரம்     மடங்காக
      விருத்தியாவதால் புண்யாவார்த்த ஷேத்ரமென்றும் எவ்வுள்ளுர்
      என்றும் இத்தலத்திற்குப் பல திருநாமங்களமைகின்றன.

    2. சாலிஹோத்ர முனிவருக்காக எம்பெருமான் இங்கே சயனித்துவிட
      எம்பெருமானைச் சேரும்பொருட்டு மகாலெட்சுமி வஸு மதி
      என்ற பெயரில் தர்மசேன புரம் என்னும் நாட்டையாண்ட
      திலிப மகாராஜாவுக்குப் புத்திரியாக அவதரித்து வாழ,
      இவ்வெம்பெருமான் வீரநாராயணன் என்ற திருப்பெயருடன்
      வேட்டைக்குச் செல்ல, தேவியைக் கண்டு மணமுடித்ததாக
      வரலாறு. கனகவல்லித் தாயார் என்றும் திருநாமம் உண்டு.
      அதற்கு முன் கிங்கிருஹேசன் (எவ்வுள் கிடந்தான்) என்பதே
      பிரதானம். இங்கு கனகவல்லித் தாயாருக்குத் தனிச் சன்னதி
      உண்டு.

    3. திருமழிசையாழ்வாரால் ஒருபாடலாலும் திருமங்கையாழ்வாரால்
      பத்துப் பாசுரங்களிலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம்.

      என்னுடைய இன்னமுதை, எவ்வுள் பெருமலையை என்று தமது
      பெரிய     திருமடலில்     திருமங்கை மயங்கி நிற்பார்.
      திருவேங்கடவனுக்குள்ள சுப்ரபாதம் போன்று இப்பெருமானுக்கும்
      வீரராகவ சுப்ரபாதம் உண்டு.

      ஸ்ரீகிங்கிருஹேசஸ்துதி என்ற பெயரால் சுவாமி தேசிகன்
      இப்பெருமானுக்கு தனி ஸ்துதி நூல் ஒன்று யாத்துள்ளார்.

    4. வடலூர் இராமலிங்க அடிகளார் இப்பெருமாள் மீது பக்திகொண்டு
      திருப்பஞ்சகம் என்னும் ஐந்து பாக்களைப் பாடியுள்ளார்.

      ‘பாண்டவர் தூதனாக பலித்ருள் பரனேபோற்றி
      நீண்டவனேன்ன வேதம் நிகழ்த்துமா நிதியே போற்றி
      தூண்டலில்லாமல் வோங்குஞ் சோதிநல் விளக்கே போற்றி
      வேண்டவ ரெவ்வுள்ளூர்வாழ் வீரராகவனே போற்றி’

      என்பது இராமலிங்க அடிகளாரின் பாக்களில் ஒன்றாகும்.

    5. இத்தலம் புத்திரப் பேறளிக்கும் தலமாகவும்,திருமணமாகாதவர்கள்
      வேண்டிக்கொண்டால் திருமணம் சித்திக்கும் தலமாகவும்,
      எத்தகைய     கொடூர     நோயாளியும்     இப்பெருமானை
      மனமுருகவேண்டி இங்குள்ள ஹ்ருத்த பால நாசினியில் நீராடி
      நோய் நீங்கப் பெறுவதால் நோய் நீக்கும் ஸ்தலமாகவும், ஒரு
      பெரிய பிரார்த்தனை ஸ்தலமாக விளங்குகிறது. இப்பெருமானை
      வேண்டினோர்க்கு நோய் நீங்கப்பெறுவது கண்கூடு. எனவே
      இப்பெருமானுக்கு வைத்திய வீரராகவன் என்னும் சிறப்புத்
      திருநாமமுண்டு.

    6. சகல பாபங்களையும் போக்கும் பாபநாசினியாகத் திகழ்கிறது
      இத்தலம். அமாவாசையன்று இதில் நீராடுவது சகல
      பாபங்களையும் போக்குமென்பது ஐதீஹம். தை அமாவாசையன்று
      இங்கு பெருந்திரளாக பக்தர்கள் கூடியிருந்து நீராடுவர். ஹிருத்த,
      இருதயத்தில்     உள்ள,     பாபநாசினி-பாபங்களை     நாசம்
      செய்யவல்லதால் இத்தீர்த்தத்திற்கு ஹ்ருத்த பாபநாசினி என்னும்
      பெயருண்டாயிற்று இத்தீர்த்தமும் சன்னதியும் அஹோபில
      மடத்தின் நிர்வாகத்திற்குட்பட்டதாகும்.

    7. தூய்மையான பக்தர்களுக்கருள்வதில் இப்பெருமானின் பாங்கு
      மிளிர்வதை பின்வரும் கதையால் உணரலாம்.

      ஒரு காலத்தில் முட்டாளாயும், ஊமையாயுமிருந்த பிராம்மணன்
      ஒரு அக்ரஹாரத்திலிருந்தான். எவ்விதமான ஆசார அனுட்டானம்
      இல்லாதிருந்தாலும்     ஒவ்வொரு     அமாவாசைதோறும்
      திருஎவ்வுளுக்கு     வந்து     பெருமாளை     வழிபட்டு
      ஹ்ருத்தபாபநாசத்தில் நீராடுவதை மட்டும் முரட்டுப் பிடிவாதமாக
      கொண்டிருந்தான். அவன் இறப்பதற்குச் சற்று நேரத்திற்குமுன்
      பப்புளித் துப்பட்டியுடன் பெருமாள் வந்து என்னை
      அழைத்துக்கொண்டு போகிறார் என்று வாய் பேசாதிருந்த ஊமை
      இரண்டு முறை கூச்சலிட்டு உயிர் நீத்தான். எனவே இத்தலம்
      மோட்ச கதி கிட்டும் ஸ்தலமாக விளங்குகிறது.

    8. ஒரு சமயம் சிவனையழைக்காது தட்சன் யாகம் செய்ய
      அவனுக்குப் புத்திமதிகூறி திருத்துவதற்காகச் சென்ற உமையவள்
      எவ்வளவு புத்திமதி கூறியும் பயனில்லாது போயிற்று. இதனால்
      சிவனுக்கும் பார்வதிக்கும் பெரும் போராட்டம் உண்டாகி பின்பு
      சினந்தணிந்த சிவன் தனது நெற்றியின்     வியர்வைத்
      துளிகளிலிருந்து தோன்றிய வீரபுத்திரனை ஏவி யாக
      குண்டலினியையும் தட்சனையும் அழித்தான். பிரம்மவித்தான
      தட்சனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் சிவன்முன் வந்து
      நின்றது. அது அவனை விடாது பின் தொடரவே அதனின்று
      மீள்வதற்கு எவ்வளவோ முயன்றும் இறுதியில் இவ்விடம்
      வந்து சிவனுக்குப் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது என்ற
      வரலாறும் உண்டு. இன்றும் தீர்த்தக் கரையின் முன்னால்
      இப்பெருமானைத் திரிசித்தபடி ருத்ரன் நின்றுள்ள காட்சியைக்
      காணலாம்.

    9. மது கைடபன் என்ற இரு அரக்கர்கள் பிரம்மாவின் படைப்புத்
      தொழில் ரகஸ்யத்தை திருடி பிரம்மாவை அச்சுறுத்த, பிரம்மன்
      திருமாலை வேண்ட பயங்கர ரூபங்கொண்ட இவ்விருவரையும்
      திருமால் துவம்சம்ப்படுத்தினார். அவர்கள் தமது பராக்கிரமத்தால்
      சூர்ய சந்திரர்களின் ஒளியையும் மறைத்து உலகை இருளில்
      மூழ்கடித்தனர். இறுதியில் எம்பெருமான் அவர்கள் மீது
      சக்ராயுதத்தை ஏவ அதன்முன் நிற்க முடியாமல் இருவரும்
      ஓடியொழிந்தார்கள். (இக்கதை பாண்டிநாட்டு திருப்பதிகளுள்
      ஒன்றான     வானமாமலை     என்னும் திருச்சீரிவரமங்கை
      ஸ்தலத்திற்கும் சொல்லப்பட்டுள்ளது)

      அவ்விதம் ஓடிவந்த இவ்விருவரும் இறுதியில் உற்ருத்த பாப
      நாசினி என்னும் இந்த தீர்த்தத்தில் மூழ்கி தம்மை
      மறைத்துக்கொண்டனர். தாம் கிடப்பதற்கு உள் ஆதி இருந்த
      இந்த தீர்த்தத்தில் மூழ்கியதால் எம்பெருமான் சினந்தணிந்து
      அவர்களையும் ரட்சித்தான் என்பர்.

    10. பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள கங்கா தீர்த்தத்தில்தேவ பாகர் என்னும்
      முனிவர் ஒருவர் இருந்தார். அவர் மார்க்கண்டேய
      முனிவரையணுகி சகல பாபங்களையும் போக்கவல்ல புண்ய
      தீர்த்தமும் மோட்சத்தையும் தரக் கூடிய பெருமாள்
      எழுந்தருளியுள்ள ஸ்தலம் யாதென வினவ அவர் தேவபாகரை
      இத்தலத்தின் மேன்மைகளை எடுத்துக் கூறி     இங்கு
      ஆற்றுப்படுத்தியதாகவும் புராணங்கூறும்.

    11. கௌசிகன் என்னும் அந்தணன் ஒருவன் சகல புண்ணிய
      தீர்த்தங்களிலும் நீராட யாத்திரை புறப்பட்டு நெடுங்காலம்
      அவ்விதமே திரிந்து தண்டகாரண்யத்தின் மத்திய பிரதேசத்தை
      அடைந்தான். அங்கு உணவின்றி வாடி பசியால் மிக்க
      களைப்புற்றுச் சோர்ந்துபோனபோது அவ்வழியே சென்ற
      சண்டாளன் ஒருவனைக் கண்டு அவனிடம் தனக்கு
      உணவளிக்குமாறு வேண்டினான். இப்பிராமணனின் முகத்திலிருந்த
      ஒளியைக் கண்ட அவன் தன் தோள் மீது ஏற்றிச் சென்று
      கௌசிகனுக்கு     உணவளித்தான்.     அயர்ந்து     தூங்கிய
      கௌசிகனுக்குப் பணவிடைகள் செய்யுமாறு தன் புத்திரியை
      அனுப்பினான். அவளது பணிவிடைகளில் தன்நிலை மறந்த
      கௌசிகன்     பலகாலம்     அவளுடனே     தங்கியிருந்து
      இன்புற்றிருந்தான்.

      பிறகு ஒரு நாள் தன் நிலையுணர்ந்த கௌசிகன் மீண்டும் தீர்த்த
      யாத்திரை தொடங்கி தனது கிழப்பருவ நிலையில் இங்குள்ள
      ஹ்ருத்த பாப நாசினியினில் நீராடி உயிர் நீத்தான். அன்று
      தெய்வாதீனமாய்த் தை அமாவாசையாயிற்று.     இவனை
      யமலோகத்திற்கு இட்டுச் சென்ற யமதூதர்கள் இவன் பாபச்
      செயல்களின் பொருட்டே இவனை இங்கு கொணர்ந்தோம் எனக்
      கூறினார். இதைக் கேட்டு நகைத்த எமன் இவன் தை
      அமாவாசையன்று ஹ்ருத்த பாப நாசினியிலில் நீராடியதால்
      இவனுக்கு பாபங்களே இல்லை. இவனை மோட்சவாயிலில்
      கொண்டு சென்றுவிட்டுவாருங்கள் என்று உத்திரவிட்டான்.

    12. இத்தலத்தின் பெருமாளை நோக்கிப் பிள்ளைப்பெருமாளையங்கார்
      கூறுகிறார் நீ உன்னை இகழ்ந்தவர்களையும், எதிர்த்தவர்களையும்
      அவர்களது     குற்றங்களை     மறந்து     மன்னித்து
      உன்பால்சேர்த்துக்கொள்ளும் நீர்மைக் குணம் பெற்றுள்ளாய்.
      இதற்கு எத்தனையோ உதாரணங்கள் காட்டலாம். உன்னிடம்
      சரணடைந்தவர்களைக் கைவிட்டதில்லை. உன் சரணாகதி
      தத்துவத்திற்கும் அளவே இல்லை. அப்பேர்பட்ட நீ
      நேர்மையில்லா கொடிய உள்ளம் பெற்ற அடியேனின் தீச்
      செயல்களையும் பொறுத்தருளி என்மீதும் இரக்கம் காட்டு
      என்கிறார்.

      நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் உள்ள அப்பாடலை இப்போது
      காண்போம்.

      நீர்மை கெட வைதாரும் நின்னோடெதிர்த்தாரும்
      சீர்மை பெற நின்னடிக்கீழ் சேர்கையினால் நேர்மையிலா
      யெவுள்ளத் தனேன் செய்கையை பொறுத்தருளி
      யைவ்வுள்ளத்தனே நீ யிரங்கு

    13. இப்பெருமாளை பரிபூர்ண அன்போடு வழிபட்டவர்கட்கு
      உத்தியோக காரியங்கள் எல்லாம் கைகூடும். பதவிகள் கிடைக்கும்.
      உலகையாளும் தகுதியைப் பெறுவர். அவ்வாறில்லாவிடின்
      அமருலகையாழ்வார் என்கிறார் திருமங்கையாழ்வார். எனவே
      உத்தியோக வாய்ப்புக்களின் பொருட்டு இப்பெருமாளை
      வேண்டிக்கொள்வோரின் வேண்டுதல்களும் நிறைவேறுகின்றன.

          மயங்கையர் கோன் கலியன்
          கொண்ட சீரால் தண்டமிழ் செய்
          மாலை யீரைந்தும் வல்லார்
          அண்டைமாள்வ தானையன்றே
           லாள்வ ரமருலகே. (1067)

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:05:36(இந்திய நேரம்)