தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பின்

  • யோகநரசிம்மப் பெருமாள்கோவில் - திருக்கடிகை
    வரலாறு

    இத்தலத்தைப் பற்றி விஷ்ணுபுராணமும் பாத்ம புராணமும் துணுக்குத்
    துணுக்குத் தகவல்கள் தருகின்றன.

    சப்தரிஷிகளும், வாமதேவர் என்னும் முனிவரும் பிரஹலாதனுக்காக
    பெருமாள் காட்டின நரசிம்ம அவதாரத்தைக் காண வேண்டுமென்ற
    ஆவலால் இம்மலையில் வந்து தவமியற்றத் தொடங்கினர். அவர்கள்
    ஏன் இம்மலையைத் தேர்ந்தெடுத்தனர் என்றால் முன்னொரு காலத்தில்
    விசுவாமித்திரர் இம்மலையில் ஒரு கடிகை நேரத்தில் (ஒரு நாழிகை
    நேரத்தில்) நரசிம்மனைக் குறித்து துதித்து பிரம்மரிசி பட்டம்
    பெற்றாராம். எனவே கடிகை நேரத்தில் தாமும் நரசிம்ம மூர்த்தியைக்
    காணலாம் என்ற பேரவா காரணத்தால் இம்மலையைத் தெரிவு செய்து
    தவமியற்றத் தொடங்கினர்.

    இஃதிவ்வாறிருக்க     ஸ்ரீஇராமவதாரம் முடிந்ததும் ஸ்ரீராமன்
    வைகுண்டத்திற்கு எழுந்தருளுந் தருவாயில் தாமும் உடன்வருவதாக
    ஆஞ்சநேயர் கூற, கடிகாசலத்தில் என்னைக் குறித்து தவம் செய்யும்
    ஸப்த ரிஷிகட்கு, உண்டாகும், இன்னல்களைக் களைந்து அதன்பின்
    வைகுந்தம் வருவாயாக என்று கூற, அவ்விதமே ஆஞ்சநேயனும்
    இம்மலை வந்து சேர்ந்தார். காலன், கேயன் என்னும் இரு அரக்கர்கள்
    இம்மலையில் நாராயணன் குறித்து தவஞ்செய்யும் ரிஷிகட்கு பெருத்த
    இடையூறு விளைவிக்க அவர்களொடு பொருது களைத்துப்போன
    ஆஞ்சநேயர் ஸ்ரீராமனைத் துதித்து நிற்க ஸ்ரீராமன் அனுமனுக்கு காட்சி
    தந்து சங்கு சக்கரங்களை வழங்க, அவற்றால் இரு அரக்கர்களின்
    தலையைக் கொய்து ரிஷிகளுக்கு தடையற்ற நிலையை உண்டாக்குகிறார்.
    இறுதியில் ரிஷிகளின் தவத்தை மெச்சிய பகவான் நரசிம்ம மூர்த்தியாக
    அவர்களுக்கு காட்சி கொடுத்து நின்றான்.

    நரசிம்ம அவதாரத்தைக் கண்டு களித்த ஆஞ்சநேயர் ஆனந்த
    பஜனம் செய்து நிற்க ஆஞ்சநேயா நீ நமது முன்பமர்ந்து யோக
    ஆஞ்சநேயராக மக்களுக்கு தீராத பிணிகளையுந் தீர்த்து கலியுகம்
    முடியும் தறுவாயில் எம்மை வந்தடைவாயாக என்றருளி மறைந்தார்.

    இதனால் தான் யோக நிலையில் அமர்ந்த (சங்கு சக்கரத்துடன்)
    ஆஞ்சநேயருக்கும் தனிச்சன்னதி உள்ளது. இப்பிரதான கீர்த்தி
    அனுமனுக்கு வேறெந்த திவ்ய தேசத்திலும் இல்லை. கலியுகம் முடியும்
    வரை அனுமனும் கலியுகத்திலேயே வாழ்வதாக ஐதீஹம். எனவேதான்
    பக்தி ரசத்தோடு இராமாயணம் படிக்கும் இடம் தோறும் அனுமன்
    அருவமாகவோ உருவமாகவோ பிரத்யட்சம் ஆவதாய் ஐதீஹம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:06:02(இந்திய நேரம்)