தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • சியாமளமேனிப் பெருமாள் கோவில் - திருக்கண்ணங்குடி
    சிறப்புக்கள்
    1. கிருஷ்ணாரண்யம் என்றழைக்கப்படும் இத்தலம் பஞ்ச கிருஷ்ண
      ஷேத்திரங்களில் ஒன்றாகும். பஞ்ச கிருஷ்ண ஷேத்திரத்தின்
      விபரங்கீழ் வருமாறு.

      1. திருக்கண்ணமங்கை 2. திருக்கண்ணபுரம் 3. கபிஸ்தலம்
      4. திருக்கோவிலூர் 5. திருக்கண்ணங்குடி.

    2. இதனை பஞ்ச பத்ரா என்றும் புராணங்கூறும். (ஆறு, காடு, நகரம்,
      ஆலயம், தீர்த்தம்) இவ்வைந்தினாலும் புகழ்பெற்ற இடமாதலால்
      பஞ்ச பத்ரா என்றாயிற்று.

    3. திருக்கண்ணங்குடிக்கு அருகில் உள்ள மற்ற நான்கு
      ஸ்தலங்களையும் இதனுடன் சேர்த்து பஞ்ச நாராயணஸ்தலம்
      என்றும் வழங்குவர். அவைகளின் விபரம் வருமாறு.

      1. தெற்கில்      - ஆபரணதாரி என்ற பதியில் ஆனந்த
                நாராயணன்
      2. தென்மேற்கில் - பெரிய ஆலத்தூர் வரத நாராயணன்
      3. தென்மேற்கில் - தேவூர் என்ற பதியில் தேவ நாராயணன்
      4. தென்மேற்கில் - கீவளுர் என்ற பகுதியில் யாதவ நாராயணன்
      5. தென்மேற்கில் - திருக்கண்ணங்குடி என்ற பதியில் தாமோதர         நாராயணன்.

      இவ்வைந்தும் சுமார் 6 கி.மீ சுற்றுவட்டாரத்திற்குள்ளாகவே
      அமைந்துள்ளன.

    4. இங்கு தாயார் சந்நிதியில் உள்ள மூலவரும் உற்சவரும் ஒரே
      ஜாடையிலிருப்பதுவேறெங்கும் காணமுடியாத அழகாகும்.

    5. மற்றெல்லா திவ்ய தேசங்களிலும் இரண்டு கரங்களையும் குவித்து
      வணங்கும் நிலையில் உள்ள கருடாழ்வாரைத்தான் காணமுடியும்.
      ஆனால் இங்கு இரண்டு கைகளையுங் கட்டிக்கொண்டு தரிசனம்
      தருகிறார்.     இந்தக் காட்சி வைகுண்டத்தில் கருடன்
      எழுந்தருளியுள்ள காட்சி என்று கூறுவார்கள்.

    6. இங்குள்ள அழகிய சிரவண புஷ்கரணியின் தெற்கு கரையில்
      உள்ள கோவிலில் ஆதிப் பெருமாள் வீற்றிருந்த நிலையில்
      உள்ளார்.     இக்கோவிலைப்     பற்றிய     ஆராய்ச்சி
      இன்றியமையாததாகும்.

    7. இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் “திருநீரணி விழா”
      என்பது மிகச் சிறப்பான ஒன்றாகும். இந்த விழாவில் பெருமாள்
      விபூதி அணிந்துகொள்கிறார். இந்நிகழ்ச்சி மூன்றே முக்கால்
      நாழிகை தான் நடைபெறும் அனைவரும் விபூதி அணிந்தே
      வருவார்களாம்.     உபரிசரவஸு மன்னனுக்காக     இவ்விதம்
      செய்யப்பட்டது. சைவ வைணவ ஒற்றுமைக்கு இந்நிகழ்ச்சி மிகச்
      சிறந்த எடுத்துக்காட்டு.

    8. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களில் மங்களாசாசனம்
      செய்யப்பட்ட திவ்ய தேசம்.

    9. மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளார்.

    10. திருமங்கையாழ்வார், இப்பெருமானுடனும் இத்தலத்துடனும்
      கொண்டிருக்கும் தொடர்பு எண்ணியெண்ணி வியக்கத் தக்கதாகும்.
      போற்றிப் புகழ்ந்து வழிபாடு செய்வதற்கு ஏற்றதாகும். காயாமகிழ்,
      உறங்காப்புளி, ஊராக்கிணறு, தோலா வழக்கு திருக்கண்ணங்குடி
      என்பது அவ்வூரைப் பற்றிய பழமொழியாகும். இதில்
      முதலாவதாக உறங்காப்புளியைக் காண்போம்.

    11. உறங்காப்புளி
      திருமங்கையாழ்வார் ஸ்ரீரங்கப்பெருமானின் மதில் கட்டும் பணியில்
      ஈடுபட்டிருந்தபோது கட்டிடப் பணிக்கு கையில் காசில்லாது
      போயிற்று. அப்போது     நாகப்பட்டினத்தில் தங்கத்தால்
      செய்யப்பட்ட புத்தர் சிலை ஒன்றுள்ளது. அந்த தங்கத்தைக்
      கொண்டுவந்தால் மதில் கட்டி விடலாமென்று இவரது சீடர்கள்
      தெரிவிக்க உடனே நாகப்பட்டினஞ் சென்று அச்சிலையைப்
      பார்த்து உனக்கு ஈயம், இரும்பு, மரம், பித்தளை, செம்பு
      போன்றவற்றால் சிலை செய்தால் ஆகாதோ பொன்னும்
      வேண்டுமோ என்று அறம் பாடின மாத்திரத்தில் சிலையின்
      வடிவம் மட்டும் அவ்வாறேயிருக்க சுற்றி வேயப்பட்ட தங்கம்
      மட்டும் பிதுங்கிக்கொண்டு வந்து விழுந்ததாம். இதோ
      அப்பாடலைப் பாருங்கள்.

      ஈயத்தா லாகாதோ இரும்பினா லாகாதோ
          பூயத்தால் மிக்கதொரு பூதத்தா லாகாதோ
      பித்தளை நற்செம்புக ளாலா காதோ
          மாயப் பொன்னும் வேண்டுமோ
      மதித்துன்னைப் பண்ணுகைக்கே.

      அதனை எடுத்துக்கொண்டு ஸ்ரீரங்கத்திற்குச் செல்ல இவ்வூரின்
      வழியாக வந்தவர் நடந்த கால்கள் நொந்ததால் சாலையோரத்தில்
      நாற்று நடுவதற்காக அடித்துப் பண்படுத்தப்பட்ட (சேறும் சகதியும்
      நிறைந்த) நிலத்தில் அத்தங்கத்தைப் புதைத்து வைத்துவிட்டு
      சாலையோரமிருந்த புளியமரத்தினடியில் சற்றே படுத்துறங்க
      எண்ணினார்.

      அப்போது அந்தப் புளிய மரத்தைப் பார்த்து “நான் அயர்ந்து
      தூங்கினாலும் நீ தூங்கிவிடக் கூடாது” என்று கூறிவிட்டு அயர்ந்து
      தூங்கி விட்டார். மறுநாள் விடிந்தபொழுதில் வயலுக்குச்
      சொந்தக்காரன் ஏர்கட்டி உழ ஆரம்பிக்க, இப்புளிய மரம் தனது
      இலைகள் முழுவதையும் திருமங்கையாழ்வார் மேல் உதிர்த்து
      விட்டதாம். சற்றே     புல்லரித்த     நிலையில்     எழுந்த
      திருமங்கையாழ்வார்     அப்புளிய     மரத்தைப்     பார்த்து
      உறங்காப்புளியே நீ வாழ்க என்று கூறினாராம்.

      இந்த உறங்காப்புளி இப்போது திருக்கண்ணங் குடியில் இல்லை.
      அவ்விடத்தில் வயலும் சிறு மேடும்தான் உள்ளது. ஆனால்
      உறங்காப்புளி இருந்த இடத்தை இன்றும் காணலாம். இவ்வூரில்
      உள்ள புளியமரங்கள் வித்தியாசமானதாகவும் சற்றே வேறுபட்ட
      நிலையிலும் தெரிவது கண்கூடு.

    12. தோலா வழக்கு
      உறங்காப்புளியே நீ வாழ்க என்று கூறிய திருமங்கை
      நிலச்சொந்தக்காரனைப் பார்த்து, ஏய், நீ உழுகக்கூடாது இது
      எனது நிலம் என்று சொல்ல, அவனோ பரம்பரை பரம்பரையாக
      இது எனது நிலமாயிற்றே நீ யார் என்று கேட்க, திருமங்கையும்
      நானும் அதைத்தான் கேட்கிறேன் இது எனது நிலம் நீ யார்
      என்று திருப்பிக் கேட்டார்.

      வாதம் முற்றி ஊர்ப் பஞ்சாயத்தாரிடம் வழக்காக வந்து நின்றது.
      நிலத்துச்     சொந்தக்காரன் தனது     உரிமைப்பட்டாவை
      பஞ்சாயத்தாரிடம் காட்டினான். இப்போது என்ன சொல்கிறீர்
      என்று பஞ்சாயத்தார் திருமங்கையிடம் கேட்க. எனக்கு பட்டா
      ஸ்ரீரங்கத்தில் உள்ளது. இன்று ஒரு நாள் அவகாசம் கொடுங்கள்
      இங்கு தங்கியிருந்துவிட்டு நாளை சென்று நானும் உரிமைப்
      பட்டயம் கொண்டு வருகிறேன் என்றார்.

      ஊர்ப் பஞ்சாயத்தும் இதை ஆமோதித்தது.

      அன்று முதல் இன்றுவரை இந்த ஊரில் எந்த வழக்கு
      ஏற்பட்டாலும் சரியான தீர்ப்பில்லாமல் தேரா வழக்காகவே
      (தோலா வழக்காகவே, தீராத வழக்காகவே) முடிவில்லாத
      வழக்காகவே இருந்து கொண்டே வருகிறது. இன்றும் இங்குள்ள
      பெரியவர்கள் இது எங்களுக்கு வழக்கமாகிவிட்டது. எந்த வழக்கு
      ஆரம்பித்தாலும் சாமான்யத்தில் முடிவதில்லை என்று ஒத்துக்
      கொள்கின்றனர்.

      எனவே தேரா வழக்குத் திருக்கண்ணங்குடி என்றும் இவ்வூரைக்
      கூறுவதுண்டு.

    13. ஊராக்கிணறு
      இன்று ஒரு நாள் இங்கு தங்குவதற்கு அவகாசம் கொடுங்கள்
      என்று கேட்ட திருமங்கையாழ்வாருக்குச் சில மணி நேரம் சென்று
      தாகம் எடுக்கவே, அந்த ஊர்க் கிணற்றடியில் நீர் இறைத்துக்
      கொண்டிருந்த பெண்களிடம் ஒரு பெண்ணிடம் தாகத்திற்கு
      தண்ணீர் கேட்டார்.

      இவன் நிலத்திற்கு தாவா செய்தது போல் நம்பானைக்கும் தாவா
      செய்துவிடுவானோ என்று எண்ணிய அப்பெண் தண்ணீர்
      தரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.

      இந்த ஊரின் கிணறுகளில் தண்ணீர் ஊராமல் போகக் கடவது
      என்று திருமங்கை சபித்து விட்டார்.

      இன்றும் இந்த ஊர்க் கிணறுகளில் தண்ணீர் சரியாக
      ஊறுவதில்லை. அப்படியே தண்ணீர் இருந்தாலும் அதுவும்
      உப்பாகத்தான் உள்ளது. இதை இன்றும் நேரடியாகச் சென்றால்
      காணலாம்.

      அரசாங்கத்திலிருந்து வெகு ஆழமாகத் தோண்டி நல்ல
      தண்ணீருக்காக ஓவர் டேங் அமைக்க அதுவும் உப்பாய்
      போய்விட்டது.

      இப்போது உள்ள கோவிலுக்குள் இறைவனின் திருமஞ்சனத்திற்காக
      தண்ணீர் எடுக்கப்படும் மடப்பள்ளி கிணற்றில் மட்டும் சற்று
      நன்னீர் உள்ளது. விடிந்தால் எல்லோரும் இங்கு வந்து தண்ணீர்
      எடுத்துச் செல்லும் நிலையை இன்றும் காணலாம்.

      எனவே ஊராக்கிணறு திருக்கண்ணங்குடி என்பது சாலவும்
      பொருந்தும்.

    14. காயா மகிழ்
      ஊராக் கிணறாகக் கடவது என்று சபித்துவிட்டு மிகுந்த பசி
      மயக்கத்தோடு அங்கிருந்த மகிழ மரத்தடியில் அயர்ந்து
      அமர்ந்தார் திருமங்கை. அப்போது ஸ்ரீமந் நாராயணனே தீர்த்தப்
      பிரசாதத்தோடு வந்து இவரைத் தட்டியெழுப்பி, நீவிர் யாவர்
      என்று கேட்க, நானொரு வழிப்போக்கன் என்றார் திருமங்கை.

      வழிப்போக்கரா சரி, பசி மயக்கத்தோடு இருப்பது போலத்
      தெரிகிறதே, முதலில் இதைச் சாப்பிடும் என்று தன்னிடம் இருந்த
      உணவைக் கொடுக்க தன்னை மறந்த நிலையில் உணவுண்டுவிட்டு
      ஏறிட்டுப் பார்த்தார் திருமங்கை.

      தனக்கு உண்டி கொடுத்தோனை எங்கும்     காணாது
      பேராச்சர்யப்பட்டு, எல்லாம் அவன் திருவுள்ளம் என்றென்னி
      தனது பசியைப் போக்கி களைப்பும் நீங்கக் காரணமாக இருந்த
      மகிழ மரத்தைப் பார்த்து நீ என்றும் காயாமகிழ மரமாக (பசுமை
      உடையதாகவும், இளமை குன்றாமலும்) இருக்க வாழ்த்தினார்.

      இந்தக் காயா மகிழ்ச் சமீப காலம் வரை இருந்து புயலில்
      அழிந்துபட்டதாம். இப்போது அந்த இடத்தில் புதியதாக மகிழ
      மரம் ஒன்றை நட்டு வைத்துள்ளனர். அது வளர்ந்து பார்ப்பதற்குப்
      பசுமையோடு காயா மகிழமாக இருந்து கொண்டிருக்கிறது.
      கோவிலுக்குப் பின்புறமே திருமங்கையின் வரலாற்றை நினைவு
      கூறும் அழியாச் சின்னமாக நின்று கொண்டிருக்கிறது.

      இத்தல வ்ருட்சமான காயா மகிழின் விதைகளைப் போட்டால்
      முளைப்பதில்லையாம் இதனாலும் காயா மகிழ் என்ற
      பெயருண்டாயிற்று என்பர்.

      காயாமகிழின் கீழிருந்து பசி தீர்த்த திருமங்கை இரவோடிரவாக
      தங்கத்தை எடுத்துக் கொண்டு ஸ்ரீரங்கமோடி விட்டார்.

      திருக்கண்ணங்குடியை விட்டுச் செல்லும் போதும், தனது பசி
      தீர்த்தவன் யார் என்ற ஐயம் திருமங்கையின் நெஞ்சை
      வருடிக்கொண்டேயிருக்க நடுவழியில் இவரை ஒருவன் மறிக்க,
      யார் என்று திருமங்கையாழ்வார்கேட்க, நான் “தலையாரி”
      என்றவன் சொல்ல அருகில் வந்து சற்றே உற்று நோக்கிய
      திருமங்கைக்கு அவனிடம் சங்கும், சக்கரமும் தெரிந்து மறைய,
      வழிப்போக்கன் என்று நாம் கூறியதால் வழிப்போக்கனாகவே
      வந்து கண்ணங்குடி யானே காட்சி கொடுத்தான், உண்டியும்
      இவனே கொடுத்தான் என்று தெரிந்து, தெளிவிசும்பு சேர்வா
      ரொப்ப தேஜசுடன் தென்னரங்கம் வந்தடைந்தார் திருமங்கை.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:08:09(இந்திய நேரம்)