தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பின்

  • அழகிய மணவாளப் பெருமாள் கோவில்
    திருக்கோழி
    வரலாறு

    இந்த உறையூரில் தர்மவர்மாவின் வம்சத்தில் பிறந்த நந்தசோழன்
    என்னும் மன்னன் மிகச் சிறந்த பக்திமானாக அரங்கனுக்குத் தொண்டு
    செய்வதில் பேரவா கொண்டவனாயிருந்தான் புத்திரப்பேறில்லாத
    பெரும் கவலை மட்டும் அவன் நெஞ்சைவிட்டு நீங்கா திருக்கவே
    இதற்கும் ஸ்ரீரங்கநாதனே பதில் சொல்லட்டும் என்று காத்திருந்தான்.

    பக்தனுக்கருளும் பரந்தாமன் வைகுண்டத்தில் இலட்சுமி தேவியைக்
    கடைக்கண்ணால் நோக்கி நந்தசோழனுக்கு புத்திரியாகுமாறு அருள,
    உறையூரில் தாமரை ஓடையில் தாமரைப் பூவில் குழந்தையாக
    அவதரிக்க வேட்டைக்குச் சென்ற நந்த சோழன் அம்மகவைக்
    கண்டெடுத்தான். கமல மலரில் கண்டெடுத்தமையால் கமலவல்லி என்று
    பெயரிட்டு அன்புடன் வளர்த்து வர நாளொருமேனியும் பொழுதொரு
    வண்ணமுமாக வளர்ந்த கமலவல்லி திருமணப் பருவம் எய்தினாள்.
    ஒருநாள் ஸ்ரீரெங்கநாதன் குதிரை மீதேறி பலாச வனத்தில் வேட்டைக்கு
    வந்ததுபோல் உலாவர, தோழிமாருடன் அப்பக்கம் வந்த கமலவல்லி,
    எம்பெருமான் பேரழகைக்கண்டு யார் இவர் என வியந்தனள். தன்
    பேரழகை முழுவதும் எம்பெருமான் கமலவல்லிக்கு காட்டிமறைய,
    காதல் மோகத்தில் பக்தி வெள்ளத்தில் கலக்கலானாள் கமலவல்லி.

    மகளின் நிலைகண்டு என்னசெய்வதென்று தெரியாது மன்னன்
    திகைத்து சிந்தனையில் மூழ்கியிருக்க, அவன் கனவில் வந்த பெருமான்
    குழந்தைப் பேறில்லா நின் குறை தீர்க்கவே யாம் திருமகளை
    அனுப்பினோம். என் சன்னதிக்கு அழைத்துக் கொண்டுவா, ஏற்றுக்
    கொள்கிறோம் என்று சொல்ல, மிகவியந்து மகளை பலவாறாய் துதித்துப்
    போற்றி நகரை அலங்கரித்து கமலவல்லியைத் திருமணக்கோலத்தில்
    ஸ்ரீரங்கம் அழைத்துவர, கோவிலினுள் நுழைந்ததும் கமலவல்லி
    மண்ணில்புக்கு மறைந்து அரங்கனோடு இரண்டறக் கலந்தாள். சேனை
    பரிவாரங்களுடன் இந்தக் காட்சியைக் கண்ட மன்னன் தான் பெற்ற
    பெரும் பேற்றை எண்ணி வியந்து ஸ்ரீரங்கத்திற்கு எண்ணற்ற
    திருப்பணிகள் செய்து உறையூர் வந்து கமலவல்லி அழகிய மணவாளன்
    திருமண நினைவாக மாபெரும் கோவில் எழுப்பினான். ஸ்ரீரங்கநாதனே
    அழகொழுகும் மாப்பிள்ளையாக வந்து திருமணம் செய்து கொண்டதால்
    அழகிய மணவாளன் ஆனார். (இவரே மீண்டும் ஒரு முறை வயலாளி
    மணவாளன் ஆவார். அதனை திருவாலி திருநகரி ஸ்தல வரலாற்றில்
    காணலாம்)

    இந்நிகழ்ச்சி நடைபெற்றது துவாபரயுகத்தின் முடிவிலென்பர்.
    கலியுகத்தில் ஒரு சமயம் இந்த உறையூரில் மண்மாரி பெய்து பட்டனம்
    முழுகிப்போக அதன்பின் சோழ மன்னர்கள் கங்கை கொண்டானைத்
    தலைநகர் ஆக்கி ஆண்டுவருங்காலை இந்த உறையூரில் ஒரு சோழ
    மன்னனால் கட்டப்பட்ட கோவிலைத்தான் இப்போது நாம்
    காண்கிறோம். இவன் இக்கோவிலில் அழகிய மணவாளனையும்
    (ஸ்ரீ ரங்கநாதனின் திருமணக்கோலம்) கமல வல்லியையும் பிரதிட்டை
    செய்தான். இம்மன்னனின் பெயர் இன்னதென்றறியுமாறில்லை.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:18:08(இந்திய நேரம்)