தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

 • கோவிந்தராசப் பெருமாள் கோவில்
  திருச்சித்திரக்கூடம்
  வரலாறு

  பிரம்மாண்ட புராணத்தில் சேத்ர காண்டத்தில் 14 அத்தியாயங்களில்
  2437 ஸ்லோகங்களில் பிரம்மதேவன் நாரதருக்கு உரைத்ததாக இத்தல
  வரலாறு பேசப்படுகிறது. கிருஷ்ணாரண்யம் என்று அழைக்கப்படும்
  ஆரண்யத்தின்     மத்தியப்பகுதியில்     அழகுற     அமைந்துள்ள
  இத்திருத்தலத்தின் எல்லைகளைக் கீழ்க்கண்டவாறு பிர்ம்மாண்ட
  புராணம் கூறுகிறது.

  காவிரிக்கு வடக்கு, வெள்ளாற்றுக்குத் தெற்கு, கீழ்கடலுக்கு மேற்கு,
  ஸ்ரீமுஷ்ணத்திற்கு கிழக்கு.

  முனிவ, எவ்வுலகிலுஞ் சிறந்தது பூவுலகம். அதில் நாவலந்தீவு
  என்னும் பரதக்கண்டஞ்சிறந்தது. அதில் தமிழ்நாடு சிறந்தது. அதில்
  வடகாவேரியில் வடதிசை சிறந்தது. அதில் தில்லைவனஞ்சிறந்தது.
  அதில் புண்டரீகபுரம் சிறந்தது. அதில் சித்ரகூடஞ் சிறந்தது. அந்தச்
  சித்திரக் கூடத்தில் திருவனந்தன் மேல் அறிதுயிலமர்ந்த தேவாதி
  தேவனை நானும் சிவபெருமானும் இந்திரனுள்ளிட்டோரும் போற்றி
  இஷ்டசித்திகள் பெற்றுள்ளோம்.

  என்று பிரம்மன் நாரதருக்குச் சொல்கிறான் (பிர்ம்மாண்ட புராணம்)

  தகரவித்தை, மதுவித்தை, புருஷோத்தம வித்தை ஆகியன அகர
  வித்தைக்குள்ளேயடங்கும்     (அகரவித்தையென்பது     சிருஷ்டியின்
  தொடக்கத்தை உணர்த்துவது) அந்த அகர வித்தையின் சிகரத்திற்கு
  சிற்சபை எனப்பெயர். அதில் அட்டாக்கரப்படியின் (அஷ்டாச்சர
  மந்திரத்தின்) சிகரத்தில் எம்பெருமான் சயனங் கொண்டுள்ளார்.
  (பிர்ம்மாண்ட புராணம்)

  கலிங்க நாட்டு மன்னன் கவேரன் என்பவனுக்கு நெடுங்காலம்
  புத்திரபாக்கியமின்றியிருக்க, கவேரனும் அவனது மனைவியும் கடுந்தவம்
  மேற்கொண்டு அதன் பயனால் காவேரியே அவர்களுக்கு
  குழந்தையாகப் பிறந்தாள். பிறகு காவேரி அகத்தியனால் நதியாக ஆன
  பின்பு காவேரியின் தாயும் தந்தையும் அதில் நீராட வரும்போது,
  உன்னைப்போல் நாங்களும் சாகா வரம் பெற்று எந்நாளும் வாழும்
  பேறு வேண்டுமென்று கேட்க அதற்கு வரமளிக்கும் சக்தி திருமால்
  ஒருவனுக்குத்தான் உண்டெனவும், எனவே அருகாமையில் இருக்கும்
  தில்லைவனஞ் சென்று கோவிந்தா, கோவிந்தா என்று கூறி
  தவமிருக்குமாறு காவேரி கூறியனுப்பினாள்.

  அவ்வண்ணமே தவமிருக்க எம்பெருமான் பிரதயட்சமாகி
  அவ்விருவருக்கும் மோட்சமளித்தார். அஷ்டாச்சர மந்திரத்தை விட
  கோவிந்தா என்னும் நாமத்தால் இவ்விடத்தே பக்தர்கட்கு மோட்சம்
  கிட்டியமையால் எம்பிரானுக்கும் கோவிந்தராஜன் என்னும் திருநாமமே
  எல்லை கட்டி நின்றது.

  இஃதிவ்வாறிருக்க, பராசரன் என்னும் ஒரு முனிவர் திருமாலைக்
  குறித்து தவஞ் செய்கையில் தஞ்சகன், கஜமுகன், தண்டகாசுரன்
  என்னும் 3 அரக்கர்கள் அத்தவத்தைக் கலைக்க, முனிவரின்
  வேண்டுதலின்படி மகாவிஷ்ணு கருடப்பறவை மீதேறி வந்து தஞ்சகன்,
  கஜமுகன் ஆகிய இருவரையும் சம்ஹாரம் செய்ய தண்டகாசுரன்
  மட்டும் அங்கிருந்த பிலத்தின் வழியாக ஓடி பாதாளத்தில் ஒளிய
  அவனைப் பின்தொடர்ந்த எம்பெருமான் தனது முகக்கோட்டால்
  அவனைக் கீறிக்கிழித்துப் போட்டு பாதாளத்திலிருந்து பூமியைப் பிளந்து
  கொண்டு (ஸ்ரீமுஷ்ணத்தில் பூமியைப் பிளந்து கொண்டு வந்த
  வராகனாக) பூவராகப் பெருமாளாக எழுந்தருளினார். (- மூன்று
  அரக்கர்களை வதம் செய்ததை தஞ்சை மாமணிக்கோயில் ஸ்தல
  வரலாற்றில் விரிவாய் காணலாம்)

  இவ்வரக்கர்களுக்கு சில்லி, தில்லி என்னும் இரு சகோதரிகள்
  இருந்தனர். அவ்விருவரும் தம் சகோதரர்களை சம்ஹாரம் செய்த
  பூவராகப் பெருமானை சரணடைந்து எங்களுக்கு நல்வழி காட்டுங்கள்
  என்று கேட்க, நீங்கள் விரும்பியதைக் கேளுங்கள் அவ்வண்ணமே
  தருகிறேன் என்றார் பூவராகன்.

  சில்லியானவள் உமக்கே யான் காவல் பூணக் காத்துள்ளேன் என்று
  சொல்ல அவ்வண்ணமே ஆகுக என்று சொல்ல - சில்லி
  ஸ்ரீமுஷ்ணத்தில் கோவிற்கடையில் காவல் காத்து வருகிறாள்.

  தில்லி திருநாடு கேட்க, அவ்வண்ணமாயின் அருகில் உள்ள
  (இரண்டு யோசனை தூரமுள்ள) புண்டரீகபுரம் சென்று அங்குள்ள
  தீர்த்தத்தில் நீராடி தன்னைக் குறித்து தவமிருக்குமாறு சொல்ல
  அவ்வண்ணமே செய்தாள். அவ்விடத்தே புள்ளேறி வந்த
  எம்பெருமானைத் தரிசித்த தில்லி தானும் தன் சகோதரியைப் போல
  எம்பெருமானின் வீட்டிடத்தே மரமாக இருப்பதாகச் சொல்ல
  எம்பெருமானும் சரியென்றார். (புண்டரீகபுரத்தைச் சுற்றி) தில்லி
  அழகான தில்லைக் காந்தார விருட்சமாக விரிந்து பரந்து நின்றாள்.
  திருமால் தில்லைக் கோவிந்தனாகப் பள்ளி கொண்டார்.

  இஃதிவ்வாறிருக்க பரமசிவனும் பார்வதியும் ஒரு சமயம் மிக்க
  மனக்களிப்புடன் ஒருவரையொருவர் விஞ்சி நடனம் புரிகையில்
  அங்கிருந்த முருக விநாயகரை நோக்கி யாரின் நடனம் சிறப்பாக
  இருந்தது என்று வினவ அவ்விருவருடன் அங்கு குழுமியிருந்தோறும்
  சேர்ந்து உமையவளின் நடனமே மிகவும் சிறந்ததாய் இருந்தது என்று
  கூற சிவன் மிகவும் கோபமுற்று நீவிர் இருவரும் சிறுவர்கள் உமக்குத்
  தீர்ப்புச் சொல்ல தகுதி போதாது என்று கூறி பிரம்மனிடம் சென்று
  நடந்த வ்ருந்தாந்தத்தைச் சொன்னார்.

  உடனே பிரம்மன், அவ்வாறாயின் திருவேங்கடத்திற்கு தெற்கில் 3
  யோசனை தூரத்தில் காஞ்சிபுரத்திற்கு வாயு திசையில் ஆலங்காட்டில்
  (திருவாலங்காடு) வந்து நடனமிடுங்கள் நான் வந்து தீர்ப்பளிக்கிறேன்
  என்றார்.

  அவ்விதமே அவ்விடத்தில் பரமசிவனும், பார்வதியும் பயங்கர
  நடனம் புரிந்து நிற்க, நாமகளுடன் வந்த பிரம்மனும் பிற தேவர்களும்
  என்ன சொல்வது எவ்வாறு தீர்ப்பளிப்பது என்று புரியாமல் இருவரின்
  ஆட்டத்தையும் வியந்து வியந்து பேசி ஒருவர் முகத்தை ஒருவர்
  பார்த்த வண்ணம் இருந்தனர்.

  சபை நடுவே எழுந்த பிரம்மன் இதற்குத் தீர்ப்பு சொல்லும் சக்தி
  தனக்கு இல்லையென்றும், திருமால் ஒருவரால் தான் இதற்குத்
  தீர்ப்பளிக்க முடியுமென்று சொல்ல எல்லோரும் வைகுந்தம் சென்று
  நடந்ததை விளம்பி நின்றனர்.

  திருமால் (தன் மனதுக்குள் உகந்த) தில்லை வனத்திற்கு வந்து
  நடனமாடுமாறும் அப்போது தீர்ப்பு வழங்குகிறேன் என்று சொல்லித்
  தெய்வத்தச்சனான விஸ்வகர்மாவை நோக்கினார்.

  உடனே விஸ்வகர்மா அரக்கர்களின் தச்சன் மயனையும்
  உடனழைத்துக்கொண்டு தில்லைவனத்தில் நடுமையத்தே சித்ர கூடத்தை
  அமைத்தான். ஐந்து பூதங்களை ஐந்து கலசமாக்கி நான்கு
  வேதங்களையும் நான்கு கோபுரமாக்கினான். 36 ஸ்மிருதி சூத்ரங்களை
  36 வாயில்களாகவும் 5 எக்கியங்களை 5 மதில்களாகவும், ஆறு
  அங்கங்களை 6 வாயில்களாகவும் 6 தரிசனங்களை 6 கதவுகளாகவும்,
  மூன்று வியாகிருதிகளை மூன்று மாடங்களாகவும், நூறு யாக
  யூபத்தம்பங்களை நூற்றுக்கால்     மண்டபமாகவும், அமைத்து
  சித்ரக்கூடத்தை கனகசபை, ரத்தின சபை, நாகசபை, தேவசபை,
  ராஜசபை, ஆகியன சூழ தோற்று வித்தான்.

  - அமைப்புப் பொருந்திய சபையில் நடனம் ஆரம்பித்தது யார்
  நன்றாடினார், யார் வெண்றாடினார் என்று கூறமுடியா வண்ணம்
  தேவகணங்களும், தேவருலக நடன மாதரசிகளும், சர்வ லோகமும்
  திகைத்து மெய்மறந்து நினைவிழந்து நிற்க உக்கிரமடைந்த ருத்ரன்
  தனது இடதுகாலைத் தரையில் ஊன்றி வலதுகாலைத் தலைமேல் தூக்கி
  நிறுத்தி நிற்கலுற்றான். பெண்மைக்குரிய நாணத்தால் தான் அவ்வாறு
  செய்ய இயலாது வெட்கித்தலை குனிந்து நின்றாள் உமையவள்.
  நடராசனே வென்றான், என்று சபையோரனைவரும் தீர்ப்புக் கூற,
  திருமாலும் அதற்கு இசைவு தெரிவித்து மாயப்புன்னகை புரிய
  உமையவள் காளியாக மாறி தில்லைவனத்தைச் சுற்றித் தாண்டவமாடி
  அந்த வனத்திற்குத் தென்பாற்போய் அதற்கே ஒரு காவல்தெய்வமாய்
  நின்றாள். சிவன் திருமாலை நோக்கித் தாங்களும் இதே
  திருக்கோலத்தில் இவ்விடத்தே எழுந்தருளி பக்தர்கட்கு அருள்பாலிக்க
  வேண்டுமென்று கேட்க அவ்வண்ணமே ஒப்புக்கொண்டார் திருமால்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:18:59(இந்திய நேரம்)