தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • கோவிந்தராசப் பெருமாள் கோவில்
    திருச்சித்திரக்கூடம்
    சிறப்புக்கள்
    1. பதஞ்சலி, கண்ணுவர், ஆகிய முனிவர்களும் இங்கு பெருமானைக்
      குறித்து தவம் செய்தனர்.

    2. இங்கு 12 தீர்த்தங்கள் உண்டு.

      1. புண்டரீக தீர்த்தம் 2. அமுத கூபம்
                  (எம்பெருமான் நடனம் காண
                  வந்தபோது எம்பெருமான்
                  உண்பதற்காக கருடன்
                  அமுதங்கொணர்ந்து வைத்த இடம்)
      3. திருப்பாற்கடல்,     4. சேஷ தீர்த்தம்
      5. கருட தீர்த்தம்    6. காவேரி தீர்த்தம்
      7. சுவேத நதி தீர்த்தம் 8. இயமபாகச் சேதன தீர்த்தம்
      9. இந்திர தீர்த்தம்     10. அக்கினி தீர்த்தம்
      11. நிர்ஜரா தீர்த்தம்     12. சாமி தீர்த்தம்

    3. முன்னொரு காலத்தில் இங்கு சிவன் கோவிலும், பெருமாள்
      கோவிலும் தனித்தனியே இருந்தது. தில்லைத் திருச்சித்ரக்கூடம்
      என்று பெருமாள் கோவிலை ஆழ்வார்களும். சிற்றம்பலம் என்று
      நடராஜர்     கோவிலை சைவர்களும் வழங்குவதிலிருந்து
      முற்காலத்தே இவையிரண்டும் தனித்தனியே இருந்தன என்பது
      தெளிவு.

      சிறு அம்பலம் (சிறுகோவில்) என்பதே சிற்றம்பலமாயிருக் கையில்
      நடராஜர் கோயில் சிறிய கோவிலாகவும், சித்ரக்கூடம் எனப்பட்ட
      பெருமாள் கோயில் பெரிய கோவிலாகவும் இருந்திருக்கின்றன
      என்றும், நடராஜர் கோவிலை விரிவுபடுத்துவதற்காக சோழவரசன்
      பெருமாள் கோவிலை இடித்து வளைத்துக் கட்டிய பின்பே
      பெருமாள்     கோயில் பிற்காலத்தே (கி.பி. ஒன்பதாம்
      நூற்றாண்டளவில்)சிவன் கோவிலுக்குள் அகப்பட்டுவிட்டதென்றும்
      வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவர்.

    4. தில்லையில் திருமாலும் சிவனும் ஒரு சேரக் கோவில்
      கொண்டிருப்பதைக் கண்ட சைவ விருப்பும் வைணவ வெறுப்பும்
      கொண்ட சோழன் ஒருவன் திருமாலை நீலக்கடலுக்கே
      அனுப்பிவிட எண்ணினான். அனுப்பியதாகவே ஒட்டக்கூத்தர்
      பாடுகிறார்.

      மூன்றில் கிடந்த தடங்கடல்
          போய் முன்னைக் கடல்புக
      பிள்ளைத் தில்லை மன்றிற்கு
          இடங்கொண்ட கொண்டல்

      சோழ மன்னன் ஒருவனால் கடலில் எறியப்பட்ட பெருமாள்
      மீண்டும் தில்லை மன்றத்தில் இடம் கொண்ட இந்நிகழ்ச்சியை
      (சோழன் கடலில் அமிழ்த்திய பிறகு அதனால் சீற்றமுற்றவர்கள்
      அப்பெருமானை எழப் பண்ணி இப்போதிருக்கும் இடத்தில்
      பிரதிஷ்டை செய்தனர் என்றும் பிற்காலத்தே இவ்விரண்டும்
      சேர்ந்து ஒரே கோவிலாக     பிறிதொரு     சோழனால்
      கட்டப்பட்டதென்றும் கூறுவர்.)

    5. தில்லை நகர், திருச்சித்ர கூடம், புண்டரிக புரம், என்பதுவும்
      இத்தலத்திற்கு அமைந்த திருப்பெயர்கள்.

    6. குலசேகராழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம்
      செய்த ஸ்தலம்.

    7. சிவபெருமானின் நடனத்தைக் காண திருமால் வந்துற்றதை
      மாணிக்க வாசகர் தமது திருக்கோவையாரில்

      “புரங்கடந்தான் அடிகாண்
      பாண்............................
      ..............தில்லையம்பல
      மூன்றில் அம்மாயவனே”
          என்ற வரிகளால் உணரலாம்.

    8. பல்லவ மன்னன் படையுடன் வந்து பைம்பொன்னும் முத்தும்
      மணியும் இத்தலத்திற்கு அளித்துத் தொழுது நின்றான் என்பதை,

      “பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து
          படைமன் னவன் பல்லவர்கோன் பணிந்து
      செம்பொன் மணிமாடங்கள் சூழ்ந்த தில்லைத்
          திருச்சித்ர கூடஞ் சென்று சேர்மின்களே”
              என்கிறார் திருமங்கையாழ்வார்.

    9. இராமன் சித்ரகூட மலையில் மிகவும் மகிழ்வோடு இருந்தான்.
      அதே இராமன்தான் கோவிந்தராஜன் என்ற பெயரில் இந்த
      திருச்சித்ர கூடத்திலே திகழ்கிறான் என்பதை குலசேகராழ்வாரும்
      திருமங்கையாழ்வாரும் தமது பாக்களில் பாடிப் பரவுகின்றனர்.

    10. முதலாம் நந்திவர்மனை (சைவ, சமண மதங்களின் மேல்
      பற்றாயிருந்தவனை) திருமங்கையாழ்வார் வைணவத்தின் பால்
      ஈர்த்தார்.

      இந்த நந்திவர்ம பல்லவனைத்தான் பைம்பொன்னும் முத்தும்
      கொணர்ந்து பணிந்த பல்லவன் என்று திருமங்கையாழ்வார் தம்
      பாடலில் குறிக்கின்றார்.

    11. கி.பி. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முதலாம் பராந்தகசோழன்
      தில்லைக் கோவிலுக்கு பொன் வேய்ந்தான்.

    12. தன் எதிரில் நடராஜப் பெருமான் நடனமாடியதை பெருமாள்
      ரசித்ததாகவும்,     எம்பெருமான் பள்ளிகொண்ட அர்ச்சா
      விக்ரகத்திற்கு அருகில் இன்றும் நடராஜன் நடனமாடும்
      கோலத்தில் இருப்பது காண்டற்குரியதாகும்.

    13. கோவில் புஷ்கரணியில் வடக்கேயுள்ள புஷ்கரணியில் (புஷ்கர
      ஷேத்ரம்) உள்ளதுபோல் மீன்கள் தரையில்     வந்து
      யாத்ரீகர்களிடம் பொரி கடலை வாங்கிச் சாப்பிடும் நிகழ்ச்சி
      கண்கொள்ளாக் காட்சியாகும்.

    14. தில்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரவர் இப்பெருமானைத்
      துதிக்க வந்தனர் என்பதை,

      “தில்லை நகர் திருச்சித்ர கூடந் தன்னுள்
          அந்தணர்களொரு மூவாயிரவ ரேத்த
      அணிமணி யாசனத் திருந்த வம்மான் றாணே”

      என்று குலசேகராழ்வாரும்

      “மூவாயிரநான் மறையாளர் நாளும்
          முறையால் வணங்க அணங்காய சோதி
      தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத்
          திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே”

      என்று திருமங்கையாழ்வாரும் குறிப்பதிலிருந்து அறியலாம்.

    15. உலகில் உள்ள எல்லாவித நடனங்களையும் இங்குள்ள சிற்பச்
      சாலையில் காணலாம்.

    16. மிகப்பெரும் மாடமதில்களையும், உயர்ந்த கோபுரங்களையும்
      எதிரிகளும் அஞ்சக்கூடிய நெடிய வாசல்களையும் பெற்றதாய்த்
      தில்லை வளங்குவதை

      “தெவ்வரஞ்சு நெடும்புரிசை யுயர்ந்த பாங்கர்த்
      தில்லைநகர் திருச்சித்ர கூடந்தன்னுள்”

      என்று குலசேகராழ்வார் சொல்வதிலிருந்து தில்லையின் தொன்மை
      மாண்பை சிறப்புற உணரலாம்.

    17. சிதம்பர ரகஸ்யம் என்பது நடராஜர் சன்னதியில் மூலஸ்தானத்தில்
      உள்ளது.

    18. நாதமுனிகளின் அவதார ஸ்தலமான காட்டுமன்னார் கோவில்
      இங்கிருந்து மிகச் சமீப தொலைவில் உள்ளது.

    19. இங்கு ஆண்டுதோறும் பெருமாள் சன்னதியில் பிர்ம்மோத்ஸ்வம்
      நடைபெற்றது, இதனை,

      “கைதொழ வீதி வருவான் சித்திரக் கூடத்துள்ளானே
      தெய்வ புள்ளேறி வருவான் சித்திரக் கூடத்துள்ளானே
      தெருவில் திளைத்து வருவான் சித்திரக் கூடத்துள்ளானே"
      என்று திருமங்கையாழ்வாரின் சொற்கள் உணர்த்துகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:19:25(இந்திய நேரம்)