Primary tabs
-
வைத்தமாநிதி பெருமாள்கோவில் திருக்கோளூர் 1சிறப்புக்கள்
இழந்த செல்வத்தைப் பெற இப்பெருமானை வழிபட்டால் இயலும்
என்ற நம்பிக்கை உண்டு. பிரம்மாண்ட புராணத்திலேயே
இதற்கொரு கதை பேசப்படுகிறது.வியாச வம்சத்தில் வந்த தர்ம குப்தன் என்பவன் 8 ஆண்
குழந்தைகளையும், இரண்டு பெண் குழந்தைகளையும் பெற்று
மிகுந்த தரித்திரனாக ஆகி, வறுமையினின்றும் மீள முடியாத
நிலையேற்பட தமது குலகுருவாகிய நர்மதா நதிக்கரையில்
தவஞ்செய்து கொண்டிருந்த பரத்வாஜ முனிவரைச் சரணடைய,
தமது ஞானக்கண்ணால் நடந்ததையறிந்து, தர்மகுப்தனை நோக்கி,
முற்பிறவியில் பெருஞ் செல்வத்திற்கு அதிபதியான ஒரு
அந்தணனாகப் பிறந்த நீ, யாருக்கும் ஒரு தர்மமும் செய்யாது,
பணத்தாசை பிடித்து அலைந்து திரிபவனாயிருந்தாய், உன் ஊர்
அரசன் உன்னிடம் வந்து உனக்குள்ள செல்வம் எவ்வளவு
யென்று கேட்க, நீ ஒன்றுமில்லை என்று பொய் கூறினாய்
இதனால் உன் செல்வம் முழுவதும் கள்வர்களால்
அபகரிக்கப்பட்டு, மன நோயால் பீடிக்கப்பட்டு இறந்தாய்.பிராமணனாகவே இப்பிறவியில் பிறந்தாலும் உன் பழவினை
உன்னைத் தொடர்கிறது. இதற்கு ஒரே மார்க்கம், நவநிதிகளும்
சரணடைந்துள்ள, திருக்கோளுர் வைத்தமாநிதியைத் தொழுதால்
உனது சாபந் தீருமென்று கூறினார்.தர்ம குப்தனும் அவ்விதமே வந்து (தன் குடும்பத்துடன்) வெகு
காலம் இப்பெருமானைச் சேவித்து எண்ணற்ற பணிவிடைகளைச்
செய்து கொண்டிருக்க, ஒரு நாள் நீராடச் செல்லுங்காலை
மாதனங் கண்டெடுத்து, மீளவும் பெருஞ் செல்வந்தனாகி
நெடுங்காலம் சுகவாழ்வு வாழ்ந்திருந்தான்.குபேரனும், தர்ம குப்தனும் இழந்த செல்வத்தைப் பெற்றதால்
இழந்த பொருளை மீட்டுத் தரும் சக்தி வாய்ந்த திருத்தலமாக
இது கருதப்படுகிறது.இத்தலத்துப் பெருமாள் (வைத்த மாநிதிப் பெருமாள்) தலைக்கு
மரக்கால் வைத்துப் படுத்தார் இதற்கு காரணம் இப்பெருமாள்
செல்வத்தைப் பாதுகாத்துச் செல்வமளந்ததால் மரக்காலைத்
தலைக்கு வைத்து கையில் அஞ்சனம், மை, போன்றன தடவி
நிதி எங்கிருக்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்கிறார் என்றும்
கூறுவர். மரக்கால் வைத்து எம்பெருமான் பள்ளி கொண்டுள்ளது
இங்கும் சோழ நாட்டுத் திவ்ய தேசமான திரு ஆதனூரில்
மட்டுமே.இவ்வூரில் கல்வி கேள்விகளில் சிறந்த “விஷ்ணுசேநர்” என்ற
முன்குடுமிச் சோழிய ஸ்ரீவைஷ்ணவர் வாழ்ந்து வந்தார். வைத்த
மாநிதிப் பெருமாளிடம் மாறாத அன்பு பூண்டிருந்த இவருக்கு
சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் அன்று அவதரித்த
தவப்புதல்வரே மதுர கவியாழ்வார் ஆவார்.ஆழ்வாரின் திருவதாரஸ்தலமாக இத்தலம் விளங்குதல் இதன்
மேன்மைக்கோர் எடுத்துக்காட்டாகும். நம்மாழ்வாரான சூரிய
உதயத்திற்கு “அருணோதயம்” (விடிகாலைப் பொழுதைப்)
போன்றது இவர் அவதாரம் என்று பெரியோர் கூறுவர்.திருப்புளிங்குடி நிகழ்ச்சியைப் போலவே, இராமானுஜர் இவ்வூரை
அணுகியதும், வைணவ இலச்சினையுடன் எதிர்ப்பட்ட ஒரு
பெண்ணை வணங்கி நீ யெங்கு நின்று புறப்பட்டாய் என்று
கேட்க, திருக்கோளுரிலிருந்து விடை கொண்டேன் என்று அவள்
சொல்லவும் அவளை நோக்கி, இராமானுஜர் “ஒருவா கூறை
யெழுவருடுத்துக் காய் கிழங்கு சாப்பிட்டு, திண்ணமென்னிள
மான்புகுமூர் திருக்கோளுரே என்று” எல்லோரும் புகும் ஊர்
உனக்குப் புறப்படும் ஊராயிற்றா என்றார்.அதற்கவள் (இவ்வூரில் பிறந்து வடதேச யாத்திரை சென்று காய்,
கனி, கிழங்குகளைப் புசித்துவந்த மதுரகவியாழ்வார் ஜோதி
தெரிந்து மீண்டும் இவ்வூருக்கே வந்து நின்றதை மனதிற்
கொண்டே இராமானுஜர் இங்ஙனம் கூறுகின்றாறெண்ணி) பல
அருஞ்செயல்கள் செய்த அடியவர்களைப் போல யானேதும்
அருஞ்செயல்செய்தேனோ, முதல் புழுக்கைவயலில் கிடந்தென்,
வரப்பிலே கிடந்தென் என்று பதிலளிக்க, இதைக்கேட்ட
இராமானுஜர் இவளதறிவு கண்டு வியந்து, இவளில்லத்தில்
விருந்துண்டு சென்றார்.நம்மாழ்வார் மட்டும் 12 பாக்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்.
ஸ்ரீஸ்வாமி தேசிகன் தனது ப்ரபந்த ஸாரத்தில் இத்தலத்தினையும்
மதுரகவியாழ்வாரின் அவதாரத்தையும் பின் வருமாறு கூறுகிறார்.“தேறிய மாஞானமுடன் திருக்கோளுரில்
சித்திரையில் சித்திரை நாள் வந்து தோன்றி
ஆறிய நல்லன்புடனே குருகூர் நம்பிக்கு
அனவரத மந்தரங்க வடிமை செய்து
மாறனையல்லால் என்றும் மறந்தும் தேவு
மற்றறியே னெனும் மதுரகவியே நீ முன் கூறிய
கண்ணி நுண் சிறுத்தாம்பதினிற் பட்டுக்
குலவு பதினொன்று மெனக்குதவு நீயே”
என்பர்மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்துள்ளார்
மதுர கவியாழ்வாரின் அவதாரதினத்தையும் திருக்கோளுரையும்
ஸ்ரீ மணவாள மாமுனிகள் பின்வருமாறு கூறுகிறார்.“ஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்துதித்த
சீராரும் சித்திரையில் சித்திரைநாள்
பாரு லகில் மற்றுள்ள
ஆழ்வார்கள் வந்துதித்த நாள்களிலும்
உற்ற தெமக்கென நெஞ்சே ஓர்” - என்கிறார்.
சீராரும் வில்லிபுத்தூர் செல்வத் திருக்கோளுர்
ஏரார் பெரும் புதூர் என்னுமிவை பாரில்
மதி யாகும் ஆண்டாள் மதுரகவியாழ்வார்
எதிராசர் தோன்றிய ஊர் -
என்பது உபதேசரத்தினமாலை.