தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பின்

  • விண்ணகரப்பெருமாள் கோவில்
    திருநந்திபுர விண்ணகரம்
    வரலாறு

    பவிஷ்ய புராணம் (பவிஷ்யேர்த்ரபுராணம்) 7 அத்தியாயங்களில்
    பிரம்ம நாரதஸம்வாதம் என்ற பகுதியில் பிரம்மனுக்கும் நாரதனுக்கும்
    நடந்த உரையாடலாக இத்தலவரலாறு பேசப்படுகிறது.

    இந்த நந்திபுர விண்ணகரம் துவாபர யுகத்திலேயே நாதன் கோவில்
    என்றே அழைக்கப்பட்டது. “நாதன் உறைகின்ற நந்திபுர விண்ணகரம்”
    என்பதே திருமங்கையாழ்வாரின் பாடலிலும் பயின்று வந்துள்ளது.

    பாற்கடலில் எம்பெருமானின் பாதாரவிந்தங்களையே பற்றிக்
    கொண்டிருந்த பிராட்டிக்கு தேஜஸ் பொருந்திய எம்பெருமானின்
    திருமார்பைக் கண்டு, அவ்விடத்திலேயே எப்போதும் நித்ய வாசம்
    செய்ய வேண்டுமென எண்ணங் கொண்டு திருப்பாற்கடலின்றும்
    புறப்பட்டு, செண்பகாரண்யம் என்னும் இவ்விடத்தில் கடுந்தவம் செய்ய,
    தேவியின் பிரிவாற்றாமையைத் தாங்க முடியாத பெருமாள் ஒரு ஐப்பசி
    மாதம் சுக்கில பட்ச வெள்ளிக்கிழமை அன்று தேவிக்குப்
    பிரத்யட்சமாகி எண்ணப்படியே நெஞ்சில் திருமகளை ஏற்றுக்
    கொண்டார்.

    கிழக்கு நோக்கி தவஞ்செய்த நிலையிருந்த பிராட்டியை பெருமான்
    எதிர்கொண்டு ஏற்றுக்கொண்டமையால் இத்தலத்தில் எம்பெருமான்
    மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். செண்பகாரண்யத்தில் தேவி தவம்
    செய்தபடியால் செண்பகவல்லி என்றே திருநாமம். உற்சவரின் பெயர்
    ஜெகந்நாதன். எனவேதான் உற்சவரின் பெயரைவைத்தே இவ்வூர் நாதன்
    கோவில் என்றாயிற்று. திருமகளின் எண்ணத்திற்கு இசைந்து பிராட்டியை
    நெஞ்சில் ஏற்றுக்கொண்டதால் பெருமானுக்கு போக ஸ்ரீனிவாசன்
    என்பது பெயர்.

    அதிகார நந்தி என்றும், நந்திகேஸ்வரர் என்றும் அழைக்கப்படும்
    சிவபெருமானின் வாகனமான நந்தி, ஒரு சமயம் மஹா
    விஷ்ணுவைக்கான வைகுண்டத்திற்கு வந்தபோது காவலில் நின்ற துவார
    பாலகர்களையுங் கேளாது உள்ளே புக முயன்றபோது துவார பாலகர்கள்
    தடுத்து, தங்கள் அனுமதி பெறாமல் செல்ல எத்தனித்த காரணத்தால்,
    காரணம் காணா அளவுக்கு உன் உடம்பில்     உஷ்ணம்
    எரிந்துகொண்டிருக்கக்கடவது என்று சபித்துத் திருப்பியனுப்பினர்.

    தன்நிலையை சிவபிரானிடம் நந்தி உரைக்க, விஷ்ணுவின் துவார
    பாலகர்கள் இட்ட சாபம், விஷ்ணுவின் சாபத்திற்குச் சமமானதாகும்.
    இதைத் தீர்ப்பதற்கு ஒரே உபாயந்தான் உண்டு.

    யாரும் காணவியலா மஹாவிஷ்ணுவின் நெஞ்சில் இடம் பிடிக்க
    திருமகள் தவம் புரிந்த செண்பகாரண்யம்தான் காரணம் காணா
    இவ்வியாதியைப் போக்க நீ தவமிருக்க சிறந்த இடமாகும். எனவே
    அங்கு சென்று திருமாலைக் குறித்து தவமிருந்து சாபத்தைப்
    போக்கிக்கொள் என்றுரைக்க, அவ்விடம் யாண்டுளது என நந்தி
    வினவியதற்கு,

    அச்செண்பகாரண்யம் என்பது பூலோகத்தில் சக்ரபடித் துறைக்கு
    (குடந்தைக்கு) தென்பால், மன்னார்குடிக்கு வடபாலும், விண்ணகரத்திற்கு
    (உப்பிலியப்பன்) மேற்கேயும், அரங்கத்திற்கு தெற்கேயும் உள்ளதெனத்
    தெரிவிக்க நந்தியும் அவ்விடத்தே வந்து நெடுங்காலம் கடுந்தவம்
    செய்ய உடனே மஹாவிஷ்ணு தோன்றி சாபந்தீர்த்து வேண்டிய வரம்
    கேள் என்று சொல்ல இத்தலம் எனது பெயராலேயே விளங்க
    வேண்டும் என்று சொல்ல அன்று முதல் நாதன் கோவிலாய் இருந்த
    இத்தலம் நந்திபுரவிண்ணகரமாயிற்று.

    தற்போது நந்திபுரவிண்ணகரம் ஒரு மிகச் சிறிய கிராமமாகத்
    திகழ்ந்தாலும் ஒரு காலத்தில் புகழ்பெற்றிருந்த தன்மையைப் பார்த்த
    மாத்திரத்தில் உணரமுடிகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:31:38(இந்திய நேரம்)