தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • விண்ணகரப்பெருமாள் கோவில்
    திருநந்திபுர விண்ணகரம்
    சிறப்புக்கள்
    1. மன்னார்குடி தொடங்கி இந்த நாதன் கோயில் முடிய உள்ள
      பகுதிக்கே செண்பகாரண்யம் என்று பெயர்.

    2. விஜயரங்க சொக்கப்ப நாயக்கர் என்னும் நாயக்க மன்னர் தன்
      அன்னைக்குத் தோன்றிய காரணம் காண இயலா (குணமநோய்
      மாதிரி) நோயை நீக்க வேண்டி இப்பெருமானிடம் இரைந்து நிற்க,
      அவ்விதமே நோய் நீங்கியதால் இக்கோவிலுக்கு பல அரிய
      திருப்பணிகள் செய்தார். ஒரு ராஜா அணிய வேண்டிய சகல
      ஆபரண அணிகலன்களுடன் - நாயக்க மன்னர் தமது இரண்டு
      மனைவியருடனும், தாயுடனும் இங்கு நின்றுள்ள (சிற்பங்கள்)
      கோலம் மிகவும் அழகானதாகும்.

    3. இந்த ஊர் காளமேகப் புலவரின் பிறப்பிடம். இப்பெருமான் மீது
      அபாரமான பக்திகொண்டவர் இவர்.

    4. இங்கு உள்ள பெருமாள் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
      மற்ற திவ்ய தேசங்களில் கிழக்கு நோக்கியே உள்ள பெருமாள்
      இங்கு மேற்கு நோக்கி இருப்பதற்கான காரணத்தை தல
      வரலாற்றில் கண்டோம். இதற்கு இன்னொரு கதையும்
      சொல்லப்படுகிறது. அதாவது சிபிச் சக்கரவர்த்தி புறாவுக்கு
      அடைக்கலம் தந்து புறாவின் எடைக்குச் சமமான சதையைத்
      தனது உடம்பிலிருந்து அறுத்து வைத்தும் நிறையாமல் இறுதியில்
      தானே தராசில் அமர்ந்தார் என்பதை நாம் அறிவோம். இந்த
      அரிய தர்மத்தின் சிறந்த நிகழ்ச்சியை காணவே கிழக்கு நோக்கி
      அமர்ந்த பெருமாள் மேற்கு நோக்கி திரும்பி விட்டதாகவும்
      கூறுவர். இதற்கு ஆதாரம் இல்லை. இது கர்ண பரம்பரையாக
      அப்பகுதியில் வழங்கப்பட்டு வரும் கதையாகும்.

    5. சிவனது நந்தி இவ்விடத்து திருமாலைக் குறித்து தவமிருந்ததும்,
      நந்தியின் பெயராலேயே இத்தலம் அழைக்கப்படுவதும் சைவ
      வைணவ மத ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

    6. இந்த இடம் ஒரு காலத்தில் விண்ணைமுட்டும் மாடமாளிகைகளும்,
      கூடகோபுரங்களும் சூழ்ந்ததாகவும், சோழ மன்னர்களின்
      தலைநகரமாகவும் விளங்கியதென்பதை கல்கி அவர்கள் எழுதிய
      பொன்னியின் செல்வன் நூலால் அறியலாம். பழையூர் பம்பப்
      படையூர், அரியப் படையூர், பட்டீசுவரம் இங்கெல்லாம் பாசறை
      இருந்ததாகப் பொன்னியின் செல்வன் கூறுகிறது. இப்பெயருள்ள
      கிராமங்கள் இன்றும் இப்பகுதியில் உள்ளன.

    7. இத்தலம் வானமாமலை ஆதிக்கத்திற்கு உட்பட்டது.

    8. ஐப்பசி வெள்ளிக் கிழமையில் இங்கு தாயாருக்கு செய்யப்படும்
      அபிஷேகங்கள் சர்வகாரிய சித்தியை உண்டு பண்ணுகிறதென்று
      புராண காலத்திலிருந்து இன்றும் உள்ள நம்பிக்கை.

    9. இப்பகுதியின் மண் மிகவும் பிரசித்தமானது. இந்த மண்ணால்
      செய்யப்பட்ட மண்பாண்டங்கள் இந்தப் பகுதிகளில் மிகவும்
      பெயர் பெற்றவை. மண்பாண்டங்கள் செய்வது இந்தப் பகுதியில்
      சிறந்த குடிசைத் தொழிலாகவும் விளங்கி வருகிறது. மேலும் இந்த
      மண் நெல்விளைச்சலில் அமோக விளைவைத் தருகிறது.
      எனவேதான் மண்ணில் இது போல் நகரில்லை யென்று
      திருமங்கையாழ்வாரும் இந்த மண்ணைப் பற்றிப் பாடினார்
      போலும்.

    10. இப்பெருமான் கையில் 5 ஆயுதங்களைக் கொண்ட
      பஞ்சாயுதனாகத் திகழ்கிறார், வாள், வில், சக்கரம், தண்டாயுதம்,
      சங்கு இந்த ஐந்து ஆயுதங்களைப் பெற்றுள்ளார்

      “வாளும் வில்லும் வளையாழி கதை
      சங்கமிவை யங்கை யுடையான்”

      என்கிறார் திருமங்கையாழ்வார், ஆயுதங்கள் வைத்திருப்பதைக்
      குறிப்பிட்டதும், திருமங்கையை நோக்கி இறைவன் நீ கையில்
      வைத்திருக்கும் வேலே இந்த 5 ஆயுதங்களில் சிறந்தது. எனவே
      ஆயுதங்களை மூட்டையாக கட்டிப் போட்டு விடுகிறேன். உன்
      வேலை எனக்கு கொடு கலியுகத்தில் நீ செய்யும் செயல்களால்
      எனது ஆயுதங்களைவிட உன்வேலே சிறந்ததென்று கூறியதாக
      பெரியோர் வியாக்யானம் செய்வர்.

    11. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் மங்களாசாசனம்
      செய்யப்பட்ட ஸ்தலம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:32:03(இந்திய நேரம்)