தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பின்

  • நம்பி பெருமாள் கோவில் - திருநறையூர்
    வரலாறு

    பிரம்மாண்ட புராணத்தில் சௌநக சம்வாதம் என்னும் பகுதியில் 12
    அத்தியாயங்களில் இத்தலம் பற்றி பேசப்பட்டுள்ளது.

    பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின் நம்பி மேக விடுதூது என்னும்
    நூலும் திரு.டி நரசிம்மாச்சாரியின் திருநறையூர் இரட்டை மணி மாலை
    என்னும் நூலும் திருமங்கையாழ்வாரின் பாசுரங்களும் இத்தலத்தைப்பற்றி
    பரக்கப் பேசுகின்றன.

    திரு+நறையூர் என்ற இச்சொல்லைக் குறித்து திருவாகிய இலக்குமி
    தேவிக்கு தேன்போல் இனிக்கும் இருப்பிடமாயிற்று என்று பொருள்
    கூறுவர். இதே பொருளைத் தரும் சுகந்தகிரி என்னும் பெயராலேயே
    வடமொழியில் இத்தலம் பேசப்படுகிறது.

    தேன் நிறைந்த பூக்களும், மணம் கமழும் பொய்கையும் சூழ்ந்து
    சுகந்தம் கமழ்தலான் சுகந்த கிரியாயிற்று. (நறை - என்றால் தமிழில்
    தேன், மணம் என்னும் இருபொருள்களும் உண்டு)

    சுகந்தகிரி, சுகந்தவனம் என்றழைக்கப்பட்ட இவ்வூரில் புராண
    காலத்தில் மேதாவி என்னும் முனிவர் திருமகளே தனக்கு மகளாக
    வந்து வாய்க்க வேண்டுமென்று மணிமுத்தா நதிக் கரையில் கடும் தவம்
    இருந்தார். இவரின் தவத்தை மெச்சிய திருமகள் பாற்கடலை விட்டு
    நீங்கி, ஒரு பங்குனி மாதம் வெள்ளிக்கிழமை உத்திர நன்னாளில் (பின்பு
    கலியுகத்தில் திருவில்லிபுத்தூரில் ஆண்டாள் அவதரித்ததுபோல)
    அவ்வாற்றங் கரையிலிருந்த வஞ்சுளமரத்தின் கீழ் அவதரித்து நிற்க, தம்
    தவவலிமையால் இவளே திருமகள் என்று ஓர்ந்த முனிவர் தம்
    குடிலுக்கு எடுத்து வந்து, வஞ்சுள மரத்தடியில் இருந்தமையால் வஞ்சுள
    வல்லி என பெயரிட்டு வளர்த்து வரலானார்.

    திருமகளை நீங்கி தனித்துயில் அமர்ந்த எம்பெருமான் தேவியை
    சேரும் தருணம் வர பூவுலகிற்கு எழுந்தருளி தனது வ்யூக நிலையில்
    (சங்கர்ஷணன்,     பிரத்யுமணன், அனிருத்தன், புருஷோத்தமன்,
    வாசுதேவன் என்னும் ஐந்து நிலைகள்) தேவிக்கு சகல சக்தியும்
    அளித்து மணந்து கொண்டார் என்பது வரலாறு.

    இத்தலம் உள்ள பகுதி கிருஷ்ணாரண்யம் என்று வழங்கப்படுகிறது.
    திருநறையூர்தான்     கிருஷ்ணாரண்யத்தின்     துவக்கமாகும்.
    கிருஷ்ணாரண்யம் என்னும் இந்த கிருஷ்ணன் காடு திருநறையூரில்
    ஆரம்பித்து திருச்சேறை, திருக்கண்ணமங்கை, திருக் கண்ணபுரம் வரை
    சென்று திருக்கண்ணங்குடியில் முடிகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:32:29(இந்திய நேரம்)