தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பின்

  • பரமபரநாதன் கோவில் - திருப்பரமேச்சுரவிண்ணகரம்
    சிறப்புக்கள்
    1. மாமல்லபுரத்தைப் போன்று கவினுறு சிற்பங்கள் இக்கோவிலின்
      உட்புறச்     சுவற்றில்     செதுக்கப்பட்டுள்ளமை மிகவும்
      வியத்தற்குரியதாகும்.

    2. பல்லவ மன்னர்களின் குடவரைக் கோவில் அமைப்பின்படி
      இத்தலத்தின் மூலவரும் அதைச் சுற்றியுள்ள பிரகாரம் மற்றும்
      தூண்கள் யாவும் ஒரே பாறையில் குடையப்பட்டதாகும்.

    3. பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மன் தனது அரசு சம்பந்தப்பட்ட
      சகல காரியங்களுக்கும், தான் போர் மேற் செல்வதற்கும்,
      இப்பெருமாளையே குருவாகக் கொண்டு வெற்றிமேல் வெற்றி
      கண்டான். இவன் பாண்டியனை வென்றதை திருமங்கையாழ்வார்
      தனது பாடலில்.

      தேர்மன்னு தென்னவனை முனையில் செறுவில்
          திறல் வாட்டிய திண் சிலையோன்
      பார் மன்னு பல்லவர் கோன் பணிந்துவரும் - பர
          மேச்சுர விண்ணக ரமதுவே - என்கிறார்.

      திருமங்கையாழ்வார். தமது பாக்களில் எல்லாம் பல்லவர் கோன்
      பணிந்த பரமேச்சுர விண்ணகரம் என்று அம்மன்னனுக்கும்
      இத்தலத்திற்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக் காட்டுகிறார்.

    4. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களில் மங்களாசாசனம்
      செய்யப்பட்டுள்ளது.

    5. பிள்ளைப் பெருமாளையங்கார், மணவாள மாமுனி, இராமானுஜர்
      ஆகியோரும் இத்தலத்திற்கு எழுந்தருளி உள்ளனர்.

    6. பரமேசுவரவர்மனின் பிறப்பைச் சித்திகரிக்கும் சிற்பங்கள்
      அவனுக்கு பெருமாள் சாஸ்திரங்களைப் போதித்த நிலையிலான
      சிற்பங்கள் போன்றன இத்தலத்தின் உட்பிரகாரத்தில் வெகு
      நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன.

    7. இக்கோவிலின் மேல் மாடியில் இரண்யவதம் செய்த நரசிம்ம
      அவதாரம் நரஹாசுர வதம் செய்த கிருஷ்ணவதாரம், வாலி வதம்
      செய்த இராமவதாரம், போன்ற - காட்சிகள் தத்ரூபமாய்
      செதுக்கப்பட்டுக் கல்லும் கதை பேசும் என்பதை மெய்ப்பித்துக்
      காட்டிக் கொண்டுள்ளது.

    8. இங்குள்ள மூலவர் சன்னதிக்கும், முன் மண்டபத்திற்கும்
      இடைப்பட்ட பகுதியில் (இடைகழியில்) சுரங்கப் பாதை இருப்பதை
      அறிந்த வெள்ளையர்கள் அதனைத் தோண்டிக்காண முனைந்த
      போது, இவ்வூர் பொதுமக்களும், இப்பெருமான் மீது பேரன்பு
      கொண்ட இஸ்லாமிய பக்தர் அலி முகம்மதுகான் என்பவரும்,
      இச்சுரங்கத்திற்கு கோவிலிலிருந்து செல்லக்கூடிய வழியினை மூடி
      அதன்மேல் படிக்கட்டுக்கள் அமைத்து மூலவர் சன்னதிக்கு
      நடந்து செல்லக் கூடிய பாதையாக மாற்றிவிட்டனர். இவ்வாறு
      மூடப்பட்டு கல்பாலம் இடப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்.
      சுரங்கப் பாதையைத் தோண்ட வந்த வெள்ளையன் இங்கு
      அவ்வாறு சுரங்கப் பாதை யாதும் இல்லையெனக் கூறிச் சென்று
      விட்டதாகக் கூறுவர்.

    9. இங்கிருந்து மாமல்லைக்கும், கைலாச நாதரின் கோவிலுக்கும்
      பரமேஸ்வரவர்மனின் அரண்மனைக்கும் சுரங்கப்பாதை இருந்ததாக
      ஐதீஹம்.

    10. கிருஷ்ண தேவராயர் இத்தலத்திற்கு ஆற்றிய பெருந்தொண்டின்
      நினைவாக இங்கு அவருக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது.

    11. இக்கோவிலில் நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றம் செய்ய இரண்டு
      (ராஜ தர்பார்கள்) நடன சாலைகள் இருந்தன. அவைகள் இன்று
      சாதாரண மண்டபங்களாக விளங்குகின்றன.

    12. இந்த வைகுண்டப் பெருமாள் அடியார்கள் மேல் ஆழ்ந்த
      பற்றுக்கொண்டவன்.     தன்னை     நேசிப்பவர்களையும்,
      பூசிப்பவர்களையும் கண்டு மனது நெகிழ்கின்றவன். அவர்களைத்
      தன்பால் ஈர்த்துக் கண்காணித்துக் கொள்பவன். தன் அடியார்கள்
      மீது அன்பு செலுத்தச் செய்து பிறகு தனக்கடிமை
      ஆக்கிக்கொள்ளும் தகவினன். நானும் அவ்வாறே செய்தேன்.
      அவன் கனிந்த தமிழில் என்னை பாடுமாறு வைத்தான். அவன்
      பதமே தஞ்சமென்று உள்ள அடியார்கட்கு என்னை
      ஆட்படுத்திவைத்தான். இவன்தான் நன்மையே செய்யும்
      பரமேச்சுர விண்ணகரத்தான் என்று பிள்ளைப் பெருமாளய்யங்கார்
      தமது நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் துதிக்கிறார்.

      பதத்தமிழால் தன்னையே பாடுவித்து என்னைத்தன்
          பதத்தடியார்க்கே யாட்படுத்தான் - இதந்த
      பரமேச்சுர விண்ணகரான் பலவான்
          வரமேச்சுர லணைந்த மால்

      இப்பெருமானின் ஸ்தல வரலாற்றுப் பண்புகளோடு இது
      பொருத்தி வருவதும் ஈண்டு நோக்கத் தக்கதாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:35:03(இந்திய நேரம்)