தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோவில்
    திருவெஃகா

    சிறப்புக்கள்
    1. பொய்கையாழ்வார் அவதாரம் செய்த தலமாகும் இது. இங்குள்ள
      பொய்கையொன்றின் பொற்றாமரையில் அவதாரம் செய்தமையால்
      பொய்கையாழ்வாரானார்.

    2. எல்லா ஸ்தலங்களிலும் சயன திருக்கோலமானது இடமிருந்து
      வலமாக அமைந்திருக்கும், ஆனால் இங்கு மட்டும் பெருமாள்
      வலமிருந்து இடமாகச் சயனித்துள்ளார். இதற்கு காரணங்கள்
      சொல்லப்படுகின்றன.

      அ) திருமழிசையாழ்வார் இத்திவ்யதேசத்தில் சில காலம் தங்கி
      இருந்தார். அவருக்கு கணிகண்ணன் என்னும் சீடன் ஒருவன்
      இருந்தான். பேராற்றலும் பெரும் பக்தியும் கொண்ட கணிகண்ணன்
      எம்பெருமான் மீது நித்தமும் கவிதை மழை பொழிந்து
      கொண்டிருந்தான். இவரைப் பற்றிக் கேள்விப்பட்ட மன்னன்
      தன்னைக் குறித்து ஒரு பாடல் புனையுமாறு கணிகண்னைக் கேட்க திருமாலைத் தவிர்த்து பிற தெய்வத்தைப் பாடாத    நான்
      மானிடரைப் பாடமுடியுமா.    இச் செந்நாவின் இன் கவி
      பெருமாளுக்கு மட்டுமே, நான் மானிடரைப் பாடமாட்டேன்
      என்றார். இதைக் கேட்டு சினந்த மன்னன் கணிகண்ணனை
      நாடுகடத்த உத்திரவிட்டான்.

      கணிகண்ணனுக்கு    நேர்ந்ததைச்     செவிமடுத்த
      திருமழிசையாழ்வார் தாமும் கடக்கத் தயாரானார். இருவரும் நாடு
      கடந்து செல்ல எத்தனிக்கையில்பெருமாளை மட்டும் விடுத்துப்
      போவரோ, நீங்க வொன்னா இன்பம் பூண்ட பெருமாளிடம்
      வந்தார் திருமிழிசை.

      பெருமானின் எதிரில் நின்று கச்சி மணிவண்ணா, கனி கண்ணன் போகின்றான். எனவே நானும் உடன் செல்லத் துணிந்தேன். நீயும்
      இங்கு கிடக்க வேண்டாம். விஷமுடைய பாம்பினை படுக்கையாகக்
      கொண்டு படுத்திருப்பவனே நீயும் உந்தன். (பாம்பும்) பாயைச்
      சுருட்டிக்கொள் என்றார்.

      கணி கண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
      மணிவண்ணா நீ கிடக்க வேண்டா - துணிவுடைய
      செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
      பைந்நாகப் பாய் சுருட்டிக்கொள்
                   - என்றார்

      எம்பெருமானும் சரேலென தமது பாயைச் சுருட்டிக் கொண்டு
      தொண்டர்களைப் பின் தொடர்ந்தார்.

      இம்மூவரும் ஊரின் எல்லையைக் கடந்ததும் மன்னனின்
      அரசவையில்    துர்நிமித்தங்கள்    தோன்ற    ஆரம்பித்தன.
      அரண்மனையில் அதிர்வுகள் தோன்ற ஆரம்பித்தன. நகரமே
      இருண்டு போனது. உடனே மன்னன் மந்திரி பிரதானிகளை
      அழைத்து வினவ நிலைமை இதுவென்று தெரிந்தது.

      உடனே தவறுணர்ந்த மன்னன் அவர்கள் சென்ற திக்கினைக்
      கேட்டுப்பின்    தொடர்ந்து    ஓடலுற்றான்.    ஓரிடத்தில்
      மூவரையுங்கண்டு தெண்டணிட்டு விழுந்து மன்னிப்புக் கேட்டு
      மீண்டும் காஞ்சிக்கே எழுந்தருள வேண்டுமென்று மன்றாடினான்.

      இந்நிகழ்ச்சி எல்லாம் நடைபெற்றுமுடிய ஓர் இரவும் ஒரு பகலும்
      ஆயிற்று.

      சித்தம் மாறிய கணிகண்ணன் திருமழிசையைப் பணிந்து நின்றான்.
      பக்தனின் பொருட்டு பெருமாள் எதையுமே செய்வார். என்றறிந்த திருமிழிசை மீண்டும் தம்முடன் வந்த பகவானை நோக்கி கணி
      கண்ணன். போவதை விட்டுவிட்டான். நானும் அவ்வாறே
      ஆனேன். நீயும் போக்கொழிந்து உன் பாய் விரித்துக்கொள்ள
      வேண்டுமென்றார்.

      கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
      மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய
      செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
      பைந் நாகப் பாய் விரித்துக்கொள்
                  என்று சொன்னதும்

      எம்பெருமான் மீண்டும்    காஞ்சிக்கு    வேகமாக திரும்பி
      சயனித்துக்கொண்டான். அவசர    நிமித்தத்தில் வலமிருந்து
      இடமாகச் சயனித்துவிட்டார் என்று காரணங் கூறுவர்.

      ஆ) ஒரு முறை இடம் பெயர்ந்து மீண்டும் அதே இடத்திற்கு
      எழுந்தருளியதால் வலமிருந்து இடமாக மாறிச் சயனித்தார் என்றும்
      கூறுவர்.

      இ) வேகவதியாக சரஸ்வதி மாறி விரைந்தோடி வரும்போது அந்த
      நதியைத் தடுக்க தாமும் வேகமாக வந்த பெருமாள் சடக்கென
      சயனிக்க எத்தனித்த நிலையில் தம்நிலை மாறிச் சயனித்தர்
      என்றும் கூறுவர்.

    3. திருமழிசையாழ்வாருடனும், கணிகண்ணனுடனும் பெருமாள் ஒரு
      இரவு தம் யாக்கையை கிடத்தி இருந்த இடம் ஓரிரவு யாக்கை
      என்ற பெயராலேயே பன்னெடுங் காலமாக அழைக்கப்பட்டு
      வந்தது. தம்மிஷ்ட்டத்திற்குத் தமிழை திரிப்பவர்கள் தலைதூக்கிய
      காலத்தில் ஓரிரவு யாக்கை என்னும் இந்த அழகிய காரணப்
      பெயர் ‘ஓரியாக்கை’ என்றாக்கப்பட்டது. காஞ்சிக்கு சமீபத்தில்
      இந்த ஊர் இன்றும் ஓரியாக்கை என்றே வழங்கப்பட்டு வருகிறது.

    4. திருமழிசையாழ்வாருடன் பெருமாள் புறப்பட்ட இந்நிகழ்ச்சி இங்கு
      ஆண்டு தோறும் தை மாதம் மகம் நட்சத்திரத்தினன்று
      உற்சவமாக    நடைபெறுகிறது. அப்போது    எம்பெருமானும்
      ஆழ்வாரும் வேகவதி யாற்றங்கரை வரை சென்று மீள்வர்.

    5. பக்தர்களும், ஆச்சார்யர்களும் மண்டிக்கிடந்த ஸ்தலமாகும் இது.
      பொய்கையாழ்வார்    இங்குதான்    அவதாரம்    செய்தார்.
      திருமழிசையாழ்வார் நெடுங்காலம் இங்கு தங்கி இருந்தார்.
      கணிகண்ணன் இப்பெருமாளுக்கு கைங்கர்யம் செய்து உய்ந்தவர்.
      திருமங்கை உட்பட ஐந்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்து
      பாமாலையிட்டுள்ளனர். மணவாள மாமுனிகள் இங்கு ஒருவருட
      காலம் தங்கியிருந்து பகவத் விஷயமாக இங்கு உபன்யாசம்
      நிகழ்த்தியுள்ளார். பிள்ளை லோகாச்சார்யர் இங்கு பெரும்போது
      போக்கியுள்ளார். இவருக்கு இங்கு தனிச் சன்னதி உள்ளது

    6. பேயாழ்வார் 4 பாசுரங்களாலும் நம்மாழ்வாரும், பொய்கை
      யாழ்வாரும் தலா ஒவ்வொரு பாசுரத்தாலும், திருமழிசை 3
      பாசுரங்களாலும்    திருமங்கையாழ்வார்    6    பாசுரங்களாலும்
      இப்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.

    7. நடந்த கால்கள் நொந்தனவோ என்று    திருமழிசையாழ்வார்
      குடந்தை    ஆராவமுதனை    மங்களாசாசனம் செய்தமைக்கு
      இத்தலத்திற்கருளிய தலைப்பிலிட்ட பேயாழ்வாரின் பாடலே
      முன்னோடியாக இருந்ததென்றும் கூறலாம்.

    8. சங்ககாலத்திலும் இத்தலம் மிகப்புகழ்பெற்று இருந்தது. சங்க
      இலக்கியங்களில் இத்தலம் குறிக்கப்படுகிறது.

    9. நம்மாழ்வார் தமது முதல் பிரபந்தமான திருவிருத்தத்தில் கோயில், திருமலை, திருவெஃகா, ஆகிய 3 திவ்ய தேசங்களை மட்டும் பாடியிருப்பதால் பெருமாள் கோயில் என்பது இத்தலத்தையே
      குறிக்கும் என்று ஆய்வாளர்கள் சிலர் கருத்துக்கொண்டுள்ளனர்.

    10. தொன்மை மிக்க    இத்தலத்தையும் இங்கு எழுந்தருளிய
      பெருமாளையும் கிடந்தான் என்ற சொல்லாலே ஆழ்வார்கள்
      மங்களாசாசனம் செய்துள்ளனர். அதாவது கிடந்தான் என்னும்
      சொல் இப்பெருமாளைக் குறிப்பதாகவே பூச்வாச்சார்யர்கள்
      பொருள் கொண்டுள்ளனர். தலத்தின் பெயரைக் (திருவெஃகாவை)
      குறிப்பிடாமல் கிடந்தான் என்ற சொல்லுக்கே இப்பெருமாளையும்
      இத்தலத்தையும்     மங்களாசாசனம்    செய்துள்ளதாகக்
      கொண்டுள்ளனர்.

    11. உ-ம்

      அ) நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாரும்
          நினைப்பிரியன ஒன்றலா அருவாய உருவாய
      நின் மாயங்கள் நின்று நின்று நினைக்கின்றேன்
          உனையெங்ஙணம் நினைக்கிற்பேன் - பாவியேற்கு
      ஒன்று நன்குரையாய் உலகுண்ட வொன் சுடரே
               -திருவாய்மொழி 5.10-6

      கிடந்தவாரும் என்பதற்கும் திருவெஃகாவிலே கிடந்தபடியுமாதல்
      என்பது நம்பிள்ளை ஈடு.

      ஆ) பிச்சச் சிறு பீலி சமன் குண்டர் முதலாயோர்
          விச்சைக் கிறையென்னும் அவ்விறையைப் பணியாதே
          கச்சிக் கிடந்தவனூர்க் கடல்மல்லைத் தலசயனம்
          நச்சித் தொழுவாரை நச்சென்றன் நணி நெஞ்சமே
                  -பெரிய திருமொழி 2-6-5

      கச்சிக் கிடந்தவன் என்ற இச்சொல்லுக்கு வ்யாக்யானச்
      சக்ரவர்த்தி பெரிய வாச்சான் பிள்ளை பின்வருமாறு கூறுகிறார்.

      ‘ஆச்சரிதர்க்காகத் திருவெஃகாவிலே படுக்கை மாறி கைம்மாறிக்
      கிடந்தவனை’ அடடா எத்துனை     ஆதாரப் பூர்வமாக
      விவரித்துள்ளார்.

      இ) அன்றிவ்வுலக மளந்த அசைவே கொல்
          நின்றிருந்து வேளுக்கை நீணகர் வாய் - அன்று
          கிடந்தானைக் கேடில் சீரானை - முண் கஞ்சைக்
          கிடந்தானை நெஞ்சமே காண்

      என்ற பேயாழ்வாரின் மூன்றாந்திருவந்தாதியில் 34 ஆம் பாடலில்
      கஞ்சைக் கிடந்தான் என்பது திருவெஃகா கிடந்தவனே என்றே
      பூர்வாச்சார்யர்கள் எடுத்தாண்டுள்ளனர்.

    12. அஷ்ட பிரபந்தம் இத்தலம் பற்றிப் பின்வருமாறு கூறுகிறது.

    13. உரைகலந்த நூலெல்லா மோதி யுணர்ந்தாலும்
      பிரைகலந்த பால்போல் பிறிதாம் - தரையில்
      திருவெஃகா மாயனுக்கே சீருறவார், தங்கள்
      உருவெஃகா வுள்ளத்தினோர்க்கு.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:47:20(இந்திய நேரம்)