தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பின்

  • கண்ணன் நாராயணன் கோவில் - திருவெள்ளக்குளம்

    வரலாறு

    திருவெள்ளக்குளம் என்ற    சொல்    இத்தலத்தின் முன்புறம்
    அமைந்துள்ள ஸ்வேத புஷ்கரணியால் உண்டாயிற்று. ஸ்வேதம் என்றால்
    வெண்மை. எனவே    ஸ்வேத    புஷ்கரணி வெள்ளைக்குளமாகி,
    வெள்ளக்குளமாயிற்று.

    முன்னொருகாலத்தில் சூர்யவம்சத்தைச் சார்ந்த துந்துமாரன் என்னும்
    மன்னனுக்கு சுவேதன் என்றொரு புத்திரன் இருந்தான். அவனுக்கு 9
    வயதில் மரண கண்டமென்றும் அதிலிருந்து மீள முடியாதென்றும்
    சாஸ்திர வாதிகளால் தெரிந்த மன்னன் அதற்குப் பிராயசித்தம் காண
    தன்குல குருவான வசிட்டரை அணுகினான். அவர் இவ்விடத்திற் சென்று
    (ஆயுள் விருத்தி) மந்திரஞ் ஜெபித்து மரண கண்டத்தை வெல்லுமாறு
    கூறினார்.

    எனவே இவ்விடம் வந்த சுவேதன், இங்கு தவம் செய்து
    கொண்டிருந்த மருத்த முனிவரின் ஆஸ்ரமத்தை அடைந்து மந்திரப்
    பயிற்சிப் பெற்று தடாகத்தின் தெற்கில் வில்வ மரத்தடியில் வடக்கு
    முகமாயமர்ந்து ஆயுள் விருத்தி மந்திரத்தை ஜெபித்து (ஐப்பசிமாதம்
    வளர்பிறை தசமி முதல், கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி வரை
    ஒரு மாதம்) கடுந்தவமியற்ற சிறுவனின் தவத்தை மெச்சிய
    மஹாவிஷ்ணு அவனுக்கு காட்சி கொடுத்து மரண கண்டத்தை
    இல்லாததாக்கி மார்க்கண்டேயனைப் போல நீடித்த ஆயுளை நல்கினார்.

    இவ்விதம் சுவேதன் பகவானின் அருள் பெற்றதால் ஸ்வேத
    புஷ்கரணி என்றாகி தமிழில் வெள்ளக்குளம் ஆயிற்று.

    ச்வேத வத்ஸ சிரஞ்சீவிந் ஜிதோ ம்ருத்யுஸ்தவயா அதுநா
    ம்ருக்யுஞ்ஜயேன மந்த்ரேண ப்ரிதோஸ்மி தவஸி வ்ரத
    தீர்க்கமாயு ப்ரதாஸ்யாமி கல்பாந்தஸ் தாயி தேந்நாப
    விநோசோ ந பவேத்தாத மார்க்கண்டேயே ஸமோவப
                    - என்பது புராணம்.

    திருமங்கையாழ்வார் வேங்கடவனையே இத்தலத்தில் காண்கிறார்.
    வேங்கடவனே இத்தலத்தில் எழுந்தருளியிருப்பதாகவும், திருப்பதி
    ஸ்ரீனிவாசனுக்கு இப்பெருமானை அண்ணன் எனவும் விளிக்கிறார்.
    திருமங்கையாழ்வார் தமது துன்பங்களைப் போக்குமாறு கீழ்க்கண்டவாறு
    வேங்கடவனை வேண்டுகிறார்.

    கண்ணார் கடல் சூழி லங்கை இறைவன்றன்
        திண்ணாகம் பிளக்கச் சரஞ்செல வுய்த்தாய்
    விண்ணோர் தொழும் வேங்கட மாமலை மேய
        அண்ணா, அடியேனிடரைக் களையாயே - 1038

    என்று திருப்பதி வேங்கடவனை அண்ணா என்றழைத்து தன்
    துன்பத்தைப் போக்குமாறு வேண்டுகிறார்.

    திருவெள்ளக்குளத்துப் பெருமாளை வேண்டும்போது கண்ணார் கடல்
    போல் என்ற சொற்றொடராலேயே மங்களாசாசனத்தை ஆரம்பித்து
    இப்பெருமாளையும் அண்ணா அடியேனிடரைக் களையாயே என்கிறார்.

    இதோ அப்பாடல்,
    கண்ணார் கடல்போய் திருமேனி கரியாய்
    நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னு நாங்கூர்
    திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக்குளத்துள்
    அண்ணா, அடியேனிடரைக் களையாயே - 1308

    திருவேங்கிடமுடையானிடத்தில் அடியேனிடரைக்களையாயே என்று
    முன்னமே    தன்னால்    வேண்டப்பட்டது    திருவெள்ளக்குளத்து
    ஸ்ரீனிவாசனால்    நிறைவேறினமையால்    அவருக்கு    இவர்
    அண்ணாவாயிற்றார்.

    திருமங்கை    வேறு    எந்தப் பெருமாளையும் அண்ணா
    என்றழைத்தாரில்லை. முதலில் திருமலைவேங்கடவனை அண்ணா என்று
    விட்டு அதற்குப் பிறகு இப்பெருமாளை அண்ணா என்றதால் அவருக்கு
    இவர் அண்ணனானார். அதாவது வேங்கடவனை அண்ணா என்றழைத்த
    இவர் அதற்குப் பிறகு தமது மங்களாசாசனம் முற்றிலும் வேறு
    எவரையும் அண்ணா என்றழைக்கவில்லை. திருவேங்கடத்திற்குப் பிறகு
    இவரை மட்டுமே அண்ணா என்றதால் அந்த அண்ணாவுக்கு இவர்
    அண்ணனானார்.

    அண்ணன் குடி கொண்ட கோவில் அண்ணன் கோவிலல்லவா.
    அதனால் தான் திருவெள்ளக்குளத்திற்கு அண்ணன் கோவில் என்றும் பெயருண்டாயிற்று. அண்ணன் கோவில் என்னும் சொல்லே இங்கு
    பிரதானமாக விளங்கி வருகிறது.

    அவர்மேல் மங்கையுறை மார்பா என்று நம்மாழ்வார் வேங்கடவனை
    விழிக்கிறார். திருமங்கையாழ்வார் இப்பெருமானை பூவார் திருமகள்
    புல்கிய மார்பா    என்றழைக்கிறார்.    அதாவது    வேங்கடத்து
    ஸ்ரீனிவாசனுக்கும் பிராட்டிக்கும் உள்ள தொடர்பை வெள்ளக்குளத்து
    அண்ணாவுக்கு வழங்குகிறார்.    அம்மட்டுமன்றி இப்பெருமாளைத்
    திருமங்கையாழ்வார் வேடார் திருவேங்கடமேய விளக்கே என்று
    விளித்து வேங்கடவனுக்கும் இவருக்கும் உள்ள தொடர்பை
    விரிவுபடுத்துகிறார்.

    மேலும் வேங்கடவனை மங்களாசாசனம் செய்து முடிக்கும்போது
    “கலியன் சொன்ன மாலை வல்லாரவர் வானவராகுவார் தாமே” என்று
    சொல்லி முடித்தார். இவ்வூரிலிருக்கும் அண்ணாவைச் சொல்லும்போது
    “கலியன் சொன்ன மாலை வல்லரென வல்லவர் வானவர் தாமே” என்று
    கூறி அவருக்கிவர் அண்ணா என்றே தலைக்கட்டி விடுகிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:47:46(இந்திய நேரம்)