தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

 • புருடோத்தமப்பெருமாள் கோவில் - திருக்கரம்பனூர்
  வரலாறு

  பிரம்மாண்ட புராணமே இத்தலத்தைப் பற்றி கூறுகிறது. பிரம்மன்,
  ஆகமத்தில் கூறப்பட்ட விதிகளுக்குட்பட்டு சந்தியா காலத்தில்
  திருமாலை ஆராதித்து வந்தார். பிரம்மனின் பக்தியைச் சோதிக்க
  விரும்பிய திருமால் இத்தலத்தில் ஒரு கதம்ப மரமாக உருக்கொண்டு
  நிற்க இதை யுணர்ந்த பிரம்மனும் இவ்விடத்தே வந்து தம் கமண்டல
  நீரால் கதம்ப மரத்திற்கு திருமஞ்சனம் செய்து திருமாலைத் துதிக்க,
  பிரம்மனுக்கு காட்சியளித்த திருமால் இதுபோலவே எந்நாளும்
  என்னைத் துதித்து இவ்விடத்தே வழிபடவும் என்று கூறியதால்
  பிரம்மனும் இங்கு கோவில் கொண்டார்.

  பிரம்மனின் கபாலம் கையில் ஒட்டிக் கொள்ள, அத்துடன் தீர்த்த
  யாத்திரை செய்த சிவன் இங்கு வந்து சேர்ந்ததும், சிவனுடைய பிட்சா
  பாத்திரத்தில் பிச்சையிடுமாறு மஹாலட்சுமியை திருமால் கேட்டுக்
  கொள்ள அவ்விதமே மஹாலட்சுமி பிச்சையிட்டதும் இதுவரை
  நிறையாத கபாலம் நிரம்பியது. ஆதலால் பிராட்டிக்கும் பூரணவல்லி
  தாயார் என்னும் பெயர் ஏற்பட்டது.

  தனது பிச்சை பாத்திரம் நிறைந்த காரணத்தால் சிவபெருமானும்
  இங்கு பிட்சாடன் மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

  திருமால் கதம்ப மரமாக உருவெடுத்து நின்றமையால் கதம்பனூர்
  என்றே இத்தலம் அழைக்கப்பட்டு, காலப்போக்கில் கரம்பனூர்
  ஆயிற்று, திருமங்கையாழ்வாரால் “உத்தமன்” என்று இப்பெருமாள்
  அழைக்கப்பட்டதால் உத்தமர்     கோவிலாயிற்று. பன்னிரண்டு
  ஆழ்வார்களில் திருமங்கையாழ்வாரும், ஆண்டாளுமே பெருமாளை
  உத்தமன் என்ற வார்த்தைகளால் குறிப்பிடுகின்றனர். ஓங்கி உலகளந்த
  உத்தமன் என்பது ஆண்டாளின் திருப்பாவை.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:09:26(இந்திய நேரம்)