தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • கூடலழகர் கோவில் - திருக்கூடல்
    சிறப்புக்கள்
    1. திருமால் “திரிவிக்ரம” அவதாரம் எடுக்கும் போது வளர்ந்த
      அவரது ஒரு பாதம் சத்திய லோகம் வரை செல்ல, பிரம்மன்
      அக்கமல பாதங்களை தனது கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தால்
      அலம்ப அதனின்றும் தெரித்த நீர்த்துளிகள் இவ்வையத்தில்
      வீழ்ந்து புனிதமாக்கியது. அதுவே இவ்வையத்தில் (வைகை)
      ஆனது. இவ்வையை இருகூறு ஆகப் பிரிந்து மதுரை நகருக்கு
      மாலை போல் ஆயிற்று. ஒரு பிரிவு வையை எனவும் மறு பிரிவு
      கிருதமால் எனவும் பெயர் பெற்றது. கிருதமாலா நதியின் கரையில்
      இப்பெருமாள் எழுந்தருளினார். இங்கு விழுந்ததைப் போலவே
      திருமாலிருஞ்சோலையில் விழுந்த ஒரு நீர்த்துளிதான் சிலம்பாறு
      ஆயிற்று. வையை இருபெரும் பிரிவாய் பிரிந்து ஓடியமைக்கு
      சங்க இலக்கியங்களில் சான்றுகள் ஏராளம்.

    2. முன்னொரு யுகத்தில் சத்திய விரதன் என்னும் பாண்டியன் கூடல்
      அழகர்பால் மிக்க அன்புகொண்டு திருவாராதன தீர்த்தம் மட்டும்
      பருகி கடும் விரதம் மேற்கொண்டிருந்தான். ஒரு நாள் அவன்
      அந்தி வேளையில் ஜல தர்ப்பணம் செய்கையில் அவன் அஞ்சலி
      செய்யும் நீரில் மீனுருவமாக (மச்சாவதாரமாய்) வந்த திருமால்
      அவனுக்கு அருமறைப் பொருளை உபதேசித்தார், என்று ஸ்ரீமத்
      பாகவதம் கூறுகிறது. எனவேதான் பாண்டிய மன்னர்கள்
      திருமாலிடம் பெரும் பக்தி பூண்டது மட்டுமன்றி தமது
      கொடிகளிலும் மீன் உருவத்தையே தங்கள் சின்னமாய்
      பொறிக்கலாயினர்.

    3. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
      கூடலழகருக்குப் பல திருவிழாக்கள் எடுத்து மகிழ்ந்தான்.
      ஆவணித் திருவோண நன்னாளில் சிறப்பான பல வழிபாடுகள்
      செய்தான். அதனை “மாயோன் மேய ஓண நன்னாள்” என்று
      தமது மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனார் கூறுகிறார்.

    4. துவரைக் கோமான் என்ற பெயரில் கூடழலகரே சங்கப்புலவராக
      வீற்றிருந்தார் என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். கூடல் அழகர்
      என்ற இச்சொல்லைத்தான் “வ்யூக சுந்தரராஜன்” என்று
      வடநூலார் மொழியாக்கஞ் செய்து கொண்டனர்.

    5. சங்க காலத்தில் இப்பெருமானுக்கு “இருந்த வளமுடையார்’ என்ற
      திருநாமம் இருந்தது. கூடழலகர் இருந்த திருக்கோலத்தில்
      எழுந்தருளிய     ஸ்தல     மென்பதால்     சிலப்பதிகார
      அரும்பதவுரைகாரரும்     இருந்த வளமுடையார் என்றே
      இப்பெருமானுக்கு பெயர் சூட்டியுள்ளார்.

      பரிபாடலில்,
      “வானார் எழிலி மழைவளம் நந்தத்
          தேனார் சிமய மலையின் இழி தந்து
      நான் மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா
          மருந்தாகும் தீநீர் மலிதுறை மேய
      இருந்தையூர் அமர்ந்த செல்வாநின்
          திருந்தடி தலையுறப் பரவுதும் தொழுதே”

      என்ற அடிகளில் இருந்தையூர் அமர்ந்த செல்வா என்று
      இப்பெருமான் போற்றப்படுகிறார். இத்தலமிருந்த பகுதி
      இருந்தையூர் என சங்க காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது.
      இப்பகுதியில் இருந்தையூர் கருங்கோழி மோசி என்னும் தமிழ்ப்
      புலவர் இருந்தமையை நக்கீரனின் இறையனார் களவியல் உரை
      பேசிப் போகிறது.

    6. திருமங்கையாழ்வாராலும்,திருமழிசையாழ்வாராலும் மங்களாசாசனம்
      செய்யப்பட்ட ஸ்தலம். பெரியாழ்வார் இம்மதுரையில் பல்லாண்டு
      பாடியதால்     திருப்பல்லாண்டால்     இப்பெருமானையும்
      மங்களாசாசனம் செய்தாரென்பர்.

    7. மணவாள மாமுனிகள் இப்பெருமானை மங்களாசாசனம்
      செய்துள்ளார்.

    8. கி.பி. 1307இல் திருவாய் மொழிப் பிள்ளை என்ற ஆசிரியர்
      மதுரைக்கு அருகே உள்ள குந்தி நகரத்தில் (கொந்தகை)
      அவதரித்தார். இவர் பாண்டி நாட்டின் முதலமைச்சராய் இருந்தவர்.
      முஸ்லீம்களின் படையெடுப்பின் போது இத்தலத்திற்கு எவ்வித
      ஊரும் நேராவண்ணம் பாதுகாத்துவந்தவர். இவரது சீடரே
      மணவாள மாமுனிகளாவர்.

    9. இராமானுஜரால் இத்தலம் பெரிதும் உவப்பாக பேசப்பட்டுள்ளது.
      பல்லாண்டு பாடப்பட்ட ஸ்தலமாதலால் இதனை பரமபதத்திற்கு
      ஈடாக அவர் கருதினார்.

    10. பாண்டிநாட்டுத் தலங்களில் பெருமாள் மாடி வீட்டில்
      குடிகொண்டுள்ளார் என்று கூறுவதற்கொப்ப இத்தலம் 3
      அடுக்குகளாலானது. முதல் அடுக்கில் (தளத்தில்) வீற்றிருந்த
      திருக்கோலத்தில் வீயூக சுந்தரராசன் என்ற பெயரில்
      அமர்ந்துள்ளார். 2வது அடுக்கில் சூரிய நாராயணன் என்ற
      பெயரில்     நின்ற     திருக்கோலத்தில்     காட்சியருளுகிறார்.
      நவக்கிரகங்களும் இந்தக் கோவிலின் உள்ளே பிரதிஷ்டை
      செய்யப்பட்டிருப்பது இதன் மற்றோர் சிறப்பம்சமாகும்.

    11. ஒரு சமயம் பூமியெங்கும் பெருமழை பொழிய மழை
      நிற்பதற்கான அறிகுறிகள் யாதும் தென்படாத நிலையில் பக்தர்கள்
      மழை நிற்க வேண்டுமென்று இப்பெருமானைப் பிரார்த்திக்க,
      பக்தர்கள் வேண்டுகோளை ஏற்ற பகவான் நான்கு மேகங்களை
      ஏவ, அவை மாடங்கள் போல் ஒன்று கூடி மழையைத்
      தடுத்தமையால் இந்நகருக்கு “நான் மாடக்கூடல்” என்று
      பெயருண்டாயிற்று என்பர்.

    12. வைகானஸ ஆகமம் என்ற ஆராதனைக் கிரம முறைக்கு
      உட்பட்டது இத்தலம்

    13. சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக இயங்கும் அஷ்டாங்க
      விமானங்கொண்ட இத்தலம் மூன்று தளங்களும் 5 சிகரங்களும்
      கொண்டு (அஷ்ட அங்கம்) மிக்க எழிலுடன் தோன்றுகிறது.
      அஷ்டாங்க விமானத்தின் நிழல் தரையில் விழுவதில்லை.
      இவ்விமானத்தை     45 நாட்கள் தொடர்ந்து தினமும்
      பதினொருமுறை சுற்றினால் எண்ணியகாரியம் கைகூடும் என்பது
      இங்கு அனுபவ உண்மையாகும்.

    14. கூடலழகரை வேண்டிப் பேறு பெற்றவர்களை

      வில்லாண்ட வடவரையான் மணம் புணர
          அட்டாங்க விமான மென்னும்
      இல்லாண்டு புயன் கனகன் காசிபனார்
          பிருகு அம்பரீடன் கூடல்
      தொல்லாண்ட புருரவசு மலயகேதனன்
          முதலலோர் தொழப் புத்தூரான்
      பல்லாண்டு பாடவந்த மல்லாண்ட
          தோளனடி பணிதல் செய்வாம்.

               என்ற பாடலால் தெரியலாம்

    15. பெரியாழ்வார் திருமாலே பரமபதம் அளிக்கும் சக்தி வாய்ந்தவர்
      என்று பரதத்துவ நிர்ணயம் செய்ததை பாண்டியன் கொண்டாட
      என்ற பாடலால் அறியலாம்.

    16. வைகை நதி வேகமாக ஓடியதால் வேகவதி என்றொரு பெயரும்
      உண்டு. விண்ணின்று வையம்நோக்கி வந்ததால் வையை என்றும்
      பெயர் பெற்றதென்பர். இது இரு பிரிவாய்ப் பிரிந்து மதுரை
      நகருக்கு மாலையிட்டது போல் வந்ததால் “கிருதமாலை” என்று
      இதனைப் புராணம் கூறும்
      வேகமாதலின் வேகவதி என்றும்
          மாகம் வாய்ந்ததனால் வையை என்றும் - தார்
      ஆகலால் கிருதமலையதாம் என்றும்
          நாகர் முப்பெயர் நாட்டு நதியரோ”

    17. இங்குள்ள பெருமாளை நெடுநீர் வையை பெருமாள் என்று
      சிலம்பு செப்புகிறது. சிலம்பில் (சிலப்பதிகாரத்தில்) வரும் மாதுரி
      என்னும் இடைப்பெண் ஆய்ச்சியர் குரவை முடிந்ததும்
      நெடுமாலைப் பூசிப்பதற்கு சென்றார் என்பதை.
      ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்
          பூவூம் புகையும் புனைசாந்தும் கண்ணியும்
      நடுநீர் வையை நெடுமால் அடியேத்தத்
          தூவித் துறை படியப் போயினாள்.
                  என்று இளங்கோவடிகள் பகர்கிறார்.

    18. பெரியாழ்வார் பரதத்துவ நிர்ணயம் செய்தசபை இருந்த இடத்தை
      மெய்காட்டும்     பொட்டல்     என்பர். அதுவே இன்று
      மேங்காட்டுப்பொட்டலாயிற்று. இதனால் இன்றும் மாழ்கழி
      மாதத்தில் பகற்பத்து முதல் நாளில் கூடலழகர் கருட வாகனத்தில்
      மேங்காட்டுப் பொட்டலுக்கு எழுந்தருள்கிறார்.

    19. மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களால் இத்திருத்தலத்திற்கு
      எண்ணற்ற திருப்பணிகள் செய்யப்பட்டது. இக்கோவிலில் உள்ள
      கல்வெட்டுக்கள் 557,558,559,     நாயக்க மன்னர்களின்
      திருப்பணியைப் பற்றித் தெரிவிக்கிறது.

    20. ஸ்ரீ பாகவதம் 11வது அத்தியாயத்தில்,
      கிருதாதி ஷீ நராராஜன் கலாவிச் சந்தி
          மஹராஜ் திராவிடே ஷீ சபூவிச
      தாம்ரபர்ணீ நதியத்ர “க்ருதமாலா பயஸ்வநீ”
      என்ற பாடலில் தாமிரபரணியாற்றங்கரையிலும் கிருதமாலா நதி
      தீரத்திலும் பெரும் பேருடன் விளங்கி வைணவத்தை ஸ்தாபிக்கும்
      மஹான்கள் அவதரிக்கப்போகிறார்கள் என்று சொன்னாற்போல்
      தாமிரபரணி நதிக்கரையில் நம்மாழ்வாரும், கிருதமாலாவில்
      பெரியாழ்வாரும் பிரேவேசித்தார்கள்.

    21. ஒரு வகையில் ஸ்ரீ ரங்கத்தைப் போல இத்திருத்தலம் இரண்டு
      நதிகளுக்கு     இடைப்பட்டதாகும். அரங்கம்     காவிரிக்கும்
      கொள்ளிடத்திற்கும் இடைப்பட்டது. கூடல் வையைக்கும்
      கிருதமாலாவிற்கும் இடைப்பட்டது.

    22. ஆகமங்களில் கூறியுள்ள முறை வழுவாத அர்ச்சாரூபியே இங்கு
      எழுந்தருளியிருப்பதால்     இத்தலம்     ஆர்ஷிதம்     என்ற
      வகைக்குட்பட்டதாகும்.

    23. இக்கோவிலின் உட்புறம் சுவர்களில் 108 திவ்ய தேசத்து
      எம்பெருமான்கள் அந்தந்த ஸ்தலங்களில் எவ்வித ரூபமாய்
      எழுந்தருளியுள்ளரோ அந்த மாதிரியே வர்ண ஓவியங்களால்
      தீட்டப்பட்டிருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

    24. இங்கு இருக்கும் ஆண்டாள் திருச்சன்னதி மிகவும் சக்தி
      வாய்ந்ததாகும். தம் தகப்பனாரால் பல்லாண்டு பாடப்பெற்ற
      தலமாதலால் தனது தனிப்பெருமானை மகள் நிலைநாட்டிக்
      கொள்வதில் தடை என்ன இருக்க முடியும்.

    25. இந்த மதுரையில் ஒரு காலத்தில் வைணவம் தழைத்தோங்கி
      இருந்தது. இங்கு கருடாழ்வாருக்கும் பலராமனுக்கும் கோவில்கள்
      இருந்ததைச் சிலப்பதிகாரம் செப்புகிறது.

      “உவனச் சேவல் உயர்த்தோன் நியமமும்
      மேழிவலவன் உயர்த்த வெள்ளை நகரமும்”

      மதுரைமாநகரில் உவணச் சேவல் கருடக் கொடியினை உடைய
      திருமாலின்     கோவிலும், மேழிவலவன் - பலராமனின்
      கோவிலுமிருந்த வெள்ளை நகரம் - அதாவது வெண்மை
      நிறமான மேகங்கள் (நான்மாடக்கூடல் போன்று) எந்நேரமும்
      சூழ்ந்திருப்பதால் வெள்ளை நகரம் எனவும் சிறப்பிக்கப்படுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:15:59(இந்திய நேரம்)