தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • சத்தியகிரிநாதப்பெருமாள் கோவில் திருமெய்யம்
    ஸத்திய மகரிஷியின் வரலாறு

    இமயத்தின் வடபுரத் தாழ்வரையில் புஷ்ப பத்திரை என்னும்
    நதியோடுகிறது. அதன் கரையில் சித்ரசிலை என்ற பாறை இருக்கிறது
    அந்தப் பாறையினருகில் பத்ரவடம் என்ற ஒரு ஆலமரம் இருந்தது.
    அதனடியில் ஸத்திய தவர் என்னும் முனிவர் தவமியற்றினார். இவர்
    மகா தபசி. இவரது தவத்தை மெச்சி காட்சி கொடுத்த எம்பெருமான்
    என்ன வரம் வேண்டுமென்று கேட்க அதற்கு ஸத்தியத்தவர் எனக்கு
    வரம் எதுவும் வேண்டாம். ஆயின் நான் நினைக்கும் போதெல்லாம்
    தாங்கள் எழுந்தருள வேண்டும் என்றார். மகாவிஷ்ணுவும் சரி என்று
    ஒப்புக்கொண்டார். பின்னர் அம்முனிவரைப் பார்த்து இவ்விடத்தில்
    (இமயச்சாரலில்)பின்னொரு யுகத்தில் யாம் இன்னொரு திருவிளையாடல்
    புரிய சித்தமாயுள்ளோம். ஆகவே நீங்கள் தவம் செய்ததற்கு பிறிதொரு
    இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். உம் விருப்பப்படி நீங்கள்
    நினைத்த மாத்திரத்தில் வரக்கடவோம் என்றார் மஹாவிஷ்ணு.

    இதைச் செவிமடுத்து மிகவும் சந்தோஷித்த ஸத்தியதவர் திருமாலை
    நோக்கி அவ்வாறாயின் யான் தவம் செய்தற்குத் தகுந்த இடத்தை
    தாங்களே     திருவாய்மலர்ந்தருளும்படி வேண்டினார். உடனே
    மஹாவிஷ்ணு சந்திரனும், அனந்தனும் தன்னைக் குறித்து தவமிருந்த
    இந்தச் சேத்திரத்தில் (சத்திய ஷேத்திரத்தில்) சென்று தவமியற்ற
    அருளினார்.

    தமக்கு கிடைத்த பெரும் பேற்றை எண்ணிய ஸத்தியதவர் மீண்டும்
    மஹாவிஷ்ணுவை நோக்கி அவ்வாறாயின் இவ்வளவு காலம் என்னோடு
    ஒன்றிப் போய்விட்ட புஷ்ப பத்திரா என்னும் நதி, சித்திரசிலை என்னும்
    பாறை, பத்ரவடம் என்னும் ஆலமரம், என்னும் இம்மூன்றும் எனக்குத்
    தாய், தந்தை, தோழன், போன்றன. எனவே இவைகளை விட்டுப்
    பிரிவதும் மிகவும் கஷ்டமாயுள்ளது என்றார். உடனே மஹாவிஷ்ணு
    அவரின் நன்றியறிதலை மெச்சி அவ்வாறாயின் இந்த மூன்றையும்
    அந்தச் சேத்திரத்திற்கே அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி
    ஐராவதத்திற்கு உத்தரவிட அம்மூன்றும் இங்கு வந்து சேர்ந்தன.
    புஷ்பத்திரா நதி புஷ்கரணியாயிற்று. சித்திர சிலை என்னும் பாறையே
    தற்போதுள்ள மெய்ய மலையாயிற்று. பத்ரவடம் என்னும் ஆலமரமே
    தற்போது அரசமரமாகக் காட்சியளிக்கிறது. இந்த ஆலமரம்,

    கிரேதாயுகத்தில் பத்ரவடமாகவும்
    திரேதாயுகத்தில் அஸ்வத்தமாகவும்
    துவாபரயுகத்தில் புத்திரதீபமாகவும்
    கலியுகத்தில் பநஸ என்ற பெயரில்
    அரச மரமாகவும் திகழ்கிறது.

    ஸத்திய முனிவரும் இங்கு வந்து கடுந்தவஞ் செய்ய, ஓர் நாள்
    வைகாசி சுக்ல பட்சம், பஞ்சமி ஞாயிறன்று சிம்ம லக்கினத்தில்
    எம்பெருமானை நினைக்க உடனே பிரத்யட்சமாகி யாது வேண்டுமென்று
    கேட்க ஸத்திய முனிவர் மோட்சம் வேண்டுமென்றார். அதற்கு திருமால்
    ஸத்திய முனிவரை நோக்கி இன்னும் கொஞ்சகாலம் இங்கேயே தவம்
    புரிந்து கொண்டிருக்குமாறும் புருரவச் சக்கரவர்த்தி இவ்விடம் வந்து
    சேர்ந்தவுடன் இருவருக்கும் மோட்சம் அளிப்பதாகவும் கூறியருளினார்.

    நவக்கிரகங்களில் ஒருவனான புதனின் மைந்தன் புருரவச்
    சக்கரவர்த்தி, இக்காலத்தில் இவன் மதுரையை தலைநகரமாகக் கொண்டு
    ஆட்சி செய்துவந்தான். இவன் விஷ்ணு பக்தியில் அளவற்ற ஈடுபாடும்
    பேராற்றலும் பெற்றவன். இவனுக்கு அருள்பாலிக்கும் பொருட்டு
    அடிக்கடி பிராட்டியால் வேண்டப்பட்ட எம்பெருமான் தன்
    பரிவாரங்களையெல்லாம் வராகங்களாக்கி தானும் வராக ரூபங்கொண்டு
    மதுரைக்கு எழுந்தருளினார்.

    வைகைக்கு வடக்கு பக்கமாகவும், வெள்ளாற்றுக்கு தெற்கு
    பக்கமாகவும் உள்ள செழிப்பான பகுதியில் இந்த வராகங்கள் புகுந்து
    வயல்களை நாசம் செய்ய கிராம மக்களால் இவைகளை அடக்க
    முடியாமல் போக மதுரைக்கு மன்னனான புருரவச் சக்கரவர்த்தியிடம்
    முறையிட்டனர் (பிர்ம்மாண்ட புராணம் ஸ்லோகம் 217)

    மன்னன் தன் சேனைகளை அனுப்ப அவர்கள் தோற்றுப் போய்வர,
    இதைக்கண்டு திகைத்த மன்னன் தானே நேரில் யுத்தத்திற்கு சென்று
    வராகக் கூட்டங்களின் மீது சரமாரியாக அம்புகளை எய்து
    கொண்டிருக்கையில் தலைமை வராகம் மட்டும் (விஷ்ணு) புருரவச்
    சக்கரவர்த்தியின் முன்பு வந்து அவன் கைகளில் வைத்திருந்த
    வில்லையும் அம்பையும் பறித்துக் கொண்டு ஓட இவன் துரத்த
    இறுதியில் இந்த சத்தியகிரிவரை ஓடிவந்த அந்த வராகம்
    ஆலமரத்தடியில் தவம் செய்து கொண்டிருந்த ஸத்திய முனிவருக்கு
    முன்னால் ஒரு மனிதன் பேசுவது போல் இதோ புருரவன்
    வந்துவிட்டான், புருரவன் வந்துவிட்டான் என்று இரண்டு முறை
    சப்தமிட்டுவிட்டு மறைந்துவிட்டது.

    சப்தத்தைக் கேட்டு தவத்திலிருந்து கண்விழித்த ஸத்திய முனிவரும்
    புருரவச் சக்கரவர்த்தியும் யாரையும் காணாது திகைத்து நிற்க
    அவ்விருவருக்கும் சக்ரதாரியாக காட்சி தந்து சத்திய முனிவருக்கு
    மோட்சம் கொடுத்துவிட்டு, புருரவனை நோக்கி நீ இன்னும் 3
    ஆண்டுகள் இங்கு தங்கியிருந்து இந்த ஆலயத்தை நல்லவிதத்தில்
    கட்டி முடித்து அதன்பின்பு என்னைச் சேர்வாயாக என்று அருளி
    மறைந்தார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:22:25(இந்திய நேரம்)