தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • பெருமாள்கோவில் - ஆழ்வார்திருநகரி


    தாந்த ஷேத்ரம் (புராண வரலாறு)

    சாளக்கிராமத்தில் வேதம் பயின்ற அந்தணச் சிறுவர்களில்
    “மந்தன்” என்பவன் சரிவர வேதம் பயிலாதது மட்டுமன்றி வேதத்தை
    இகழ்ந்துரைக்கவும் பழிச்சொல் பேசவும் செய்யலானான். இதனால்
    வெகுண்ட அவனது ஆசிரியர் நீ இழிஞனாய் மறுபிறப்பில் இழி
    குலத்தில் பிறக்கக் கடவாய் என்று சபித்தார். ஆனால் மந்தன் சற்றும்
    மனந்தளராது அங்கிருந்த விஷ்ணு கோவில்களில் புல்லை செதுக்கி
    சுத்தப்படுத்திவந்தான்.

    இவனது கைங்கர்யத்தால் மனமகிழ்ந்த மகாவிஷ்ணு இவனை
    ஆட்கொள்ள நினைத்தார். தனது அந்திமகாலத்தில் பூதவுடல் நீத்த
    மந்தன் மறுபிறவியில் தாந்தன் என்றபெயரில் கீழ்க்குலத்தில் பிறந்து
    நல்ல ஒழுக்கத்தில் சிறந்தவனாக விளங்கி நல்லோர் வழிகாட்ட
    விந்திய மலைக்கு வந்தான். அங்கு விண்ணில் பேரொளி தோன்ற
    அதைத் தொடர்ந்து தண்பொருணல் ஆற்றங் கரையில் உள்ள
    சங்கணித்துறைக்கு வந்து குருகூர் அடைந்து ஆதிநாதனை
    வழிபட்டுவந்தான்.

    அங்கிருந்த     அந்தணரும்     திருமாலின்     அருள்பெற
    வழிபாடியற்றியவர்களும் இவன் கீழ்க்குலத்தான் என்று கருதி
    வெறுத்து ஒதுக்க தாந்தன் அங்கிருந்து வடகிழக்கே சென்று கூப்பிடு
    தூரத்தில் பொருணலின் வடகரையில் ஆதிநாத வேதியை அமைத்து
    வழிபட்டான்.

    திடீரென்று தாந்தனை வெறுத்தொதுக்கிய அந்தணர்கட்கு
    கண்தெரியாது போகவே இதற்கு யாது காரணமென அவர்கள்
    பெருமாளை இறைஞ்சி நிற்க பரமபக்தனான தாந்தனை வெறுத்தற்கு
    இதுவே தண்டனை யென்றும் அவனிடம் சென்று மன்னிப்பு கேட்க
    வேண்டும் என்று அசரீரியாய் ஒளியுடன் ஒரு சப்தம் கேட்கவே
    அனைவரும் அப்படியே சென்று தாந்தன் இருப்பிடம் அடைந்ததும்
    கண்ணொளி பெற்றனர்.

    தாந்தனுக்குத் தம் தேவியோடு காட்சியளித்து ஆட்கொண்டார்
    பகவான். இன்றும் இங்குள்ள அர்த்த மண்டபத்தில் முதற்படிக்கட்டில்
    தாந்தன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அவன் ஆதிநாதனை
    வழிபட்ட ஸ்தலம் அப்பன் கோவில் என்று வழங்கி வருகிறது. இதைச்
    செம்பொன் மாடத் திருக்குருகூர் என்றும் வழங்குவர். இவன்
    மகத்துவத்தால் இத்தலம் தாந்த ஷேத்ரமென்று புராணங்களில்
    புகழ்ந்துரைக்கப்பட்டுள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:24:07(இந்திய நேரம்)