தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

 • பெருமாள்கோவில் - ஆழ்வார்திருநகரி


  சங்கன் வீடுபெற்றது

  கொலைத் தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் வேடன் ஒருவன்
  விந்திய மலையில் தாந்தன் தங்கியிருந்த ஆலமரத்தடியில்
  கொஞ்சநேரம் வாசம் தங்கியதால் மறுபிறப்பில் சங்கன் என்னும்
  முனிவனாகப் பிறந்து கடுந்தவம் செய்து கொண்டிருந்தான். அப்போது
  அங்குவந்த நாரதர் இந்தக் கடுந்தவத்தின் காரணத்தை வினவ, “நான்
  எட்டுத் திக்கும் காவல் புரியும் காவலர்களில் ஒருவனாக ஆவதன்
  பொருட்டே இந்த தவத்தை மேற்கொண்டுள்ளேன்” என்று கூற.
  நாரதர் அவனை நோக்கி, அதைவிட மேலான பதமளிக்கும்
  நாராயணனைக் குறித்து தவமிருந்து பிறவா நிலைபெறுவாய் என்று
  தெரிவித்தார். அதற்கு நான் என்ன செய்ய வேண்டுமென சங்கன்
  வினவ நீ இப்போது தாங்கியிருக்கும் இதே பெயரைக்கொண்ட சங்காக
  உவர்க்கடலில் பிறந்து தண்பொருநல் நதிகடலில் கலக்கும்
  இடத்திலிருந்து ஒரு காத தூரத்தில் உள்ள குருகூரில் ஏறி ஆதிநாத
  வேதியை 1000 ஆண்டுகள் சூழவந்து அவன் அருள் வாய்க்கப்
  பெறுவாயாக என்று வாழ்த்தியருளினார்.

  அப்படியே சங்கனும் தன் நோன்பின் வலிமையால் சங்காகி
  தாமிரபரணி நதிவழிவந்து வடகரையில் உள்ள திருப்பதியைக் குருகூர்
  என்று எண்ணி வழிபட மீண்டும் அங்குவந்த நாரதமுனிவர் இது
  தாந்தன் வழிபட்ட இடமென்றும் சற்று தெற்கே தள்ளியிருப்பது தான்
  ஆதிநாதர் கோவில் என்றும் எடுத்துரைத்து தினந்தோறும் பகலில்
  வந்து ஆதிநாதரை பூஜித்து இரவில் கடலிற் சென்று சங்காக வாழும்
  வாழ்க்கையை மேற்கொண்டிருந்தான். ஒருநாள் இந்த சங்கவரசன்
  தனது இனங்களுடன் வந்து கொண்டிருக்கும் போது ஒரு திமிங்கலம்
  எதிர்ப்பட்டுச் சங்கங்கள் வராது தடுக்கவே, சங்கன் ஆதிநாதரை
  மனமுருகி வேண்ட ஒரு மானிடன் கடலில் தோன்றி அந்தத்
  திமிங்கலத்தை விழுங்கிச் சென்றான்.

  இதன்பின் எவ்வித தடையுமின்றி சங்கன் வந்து சென்று 1000
  ஆண்டுகள் கழியவே எம்பெருமான் கருட வாகனத்தில் தமது
  தேவியருடன் காட்சி கொடுத்து சங்கனின் தவத்தை மெச்சி
  சங்கனுக்கும் உடனிருந்த சங்கங்களுக்கும் மோட்சம் நல்கினார்.

  சங்கினங்களுடன்     சங்கன்     ஏறிவந்த     துறைக்கு
  “திருச்சங்கணித்துறை” என்று இன்றும் பெயர் வழங்குகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:24:21(இந்திய நேரம்)