தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • பெருமாள்கோவில் - ஆழ்வார்திருநகரி


    சேஷ ஷேத்திரம்

    இராமவதாரம் முடிவதற்கு மூன்று நாள் இருக்கும்போது
    பெருமானைப் பார்க்க எமதர்மராஜன் வந்தான். அப்போது இராமர்
    இலக்குவனை நோக்கி தம்பி, யாரையும் இனிமேல் உள்ளே
    அனுமதியாதே என்றார். சில நாழிகை கழித்து கடைசியாக ஒரு முறை
    இராமனைக் கண்குளிரக் கண்டுவிடுவோமென துர்வாச முனிவர்
    வந்தார். இவரைத் தடுத்தால் முனிவரின் சாபத்திற்கு ஆளாகநேரிடும்
    என்றெண்ணி இலக்குமணன் தடுக்கவில்லை. துர்வாசரை உபசரித்து
    அனுப்பிவைத்த ராமன் என் ஆணையை மீறி மரமாக நின்றமையால் நீ
    மரமாக இருக்கக் கடவாய் என்றார். இலக்குமணன் இராமனின்
    இரண்டு கால்களையும் பற்றிக்கொண்டு நான் நின்னைவிட்டு
    பிரிந்திருப்பது இயல்போ அண்ணா, இது உமக்கே தெரியாதோ என்று
    மண்டியிட்டு நின்றான்.

    இலக்குமனை எடுத்து ஆரத் தழுவிய இராமன் நான் இந்த
    இராமாவதாரத்தில் சீதையை காட்டில் வாழச் செய்த பாவத்தை
    போக்க 16 ஆண்டுகள் அசையா பிம்பமாய் பிறக்க வேண்டியுள்ளது.
    அப்போதும்     நான் உன் மடி மீது அமர்ந்துகொள்ள
    ஆசைப்பட்டுத்தான் உன்னை மரமாக நிற்கச் சொன்னேன். அந்த
    மரப்பொந்தில் நான் வந்து அமர்வேன் என்றார்.

    இங்கிருந்து நீ புறப்பட்டு தாமிரபரணியின் தென்கரையில் உள்ள
    வராக ஷேத்திரத்தை அடைந்து ஒரு புளியமரமாக மாறப் போகிறாய்.
    இன்னும் கொஞ்சகாலத்தில் காசிப முனிவர் காரி என்ற பெயரில்
    அங்கு குறுநில மன்னராகப் பிறப்பார். அவரது மனைவியான
    ஆத்மவிதி என்பாளும் உடைய நங்கை என்ற பெயரில் பிறந்து
    இருவரும் புத்திரப்பேறு வேண்டி குருகூர்வந்து விரதம் இருக்கப்
    போகிறார்கள். அவர்களின் புத்திரனாக நான் அவதரிக்க போவதன்
    காரணம், துவாபரயுகத்தில் கிருஷ்ணாவதாரத்தில் வசுதேவரும்,
    தேவகியும் தமக்குப் பிள்ளையாகப் பிறந்த என்னை நோக்கிமோட்சம்
    வேண்டுமென்று கேட்க அது கலியுகத்தில் சித்திக்கும் என்று நான்
    ஏற்கனவே வரம் கொடுத்துள்ளேன். அவர்களே தற்போது
    புத்திரப்பேறுவேண்டி நிற்பர். அவர்கட்குப் புத்திரனாக அவதரித்ததும்
    நான் மிக உகந்த ஆதிநாதன் திருத்தலத்தில் என்னை
    வந்துவிட்டவுடன் நான் தவழ்ந்துவந்து நினது மடிமேல் ஏறி 16
    ஆண்டுகள் யோக நிஷ்டையில் அமர்ந்து அதன்பின் வேதம்
    தமிழ்செய்து நாத்திகமழித்து ஆத்திகம் வளர வழிகாட்டுவோம் என்று
    சொல்லி தனது விரலில் இருந்த கணையாழியைக் கழற்றிக் கொடுத்து
    இது எந்த இடத்தில் உனது கையை விட்டு நழுவுகிறதோ அந்த
    இடத்தில் புளியமரமாக நில் என்று ஆசீர்வதித்து அனுப்பினார்.
    ஆதிசேடனான     இலக்குமணனே     இங்கு     புளியமரமாக
    எழுந்தருளியிருப்பதால் இதற்கு சேஷ ஷேத்திரம் என்றும் பெயர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:24:35(இந்திய நேரம்)