தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பின்

  • விசயராகவப்பெருமாள் கோவில் - திருப்புட்குழி
    சிறப்புக்கள்
    1. ஜடாயுவுக்கு மோட்சமளித்த ராமன் இங்கு ஜடாயு தீர்த்தத்தை
      உண்டாக்கினார் என்று சொல்லப்படுகிறது. இங்கு கோவிலுக்கு
      எதிர்ப் புறத்தில் ஜடாயுவுக்கு சன்னதியுள்ளது. மூலவர் தமது
      தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு ஸமஸ்காரம்
      செய்யும் பாவணையில் அமர்ந்துள்ளார். இந்த தாபத்தைத் தாங்க
      முடியாமல் இடம், வலமாகமாறி எழுந்தருளியுள்ளார்.

      வலப்பக்கத்தே இருக்க வேண்டிய ஸ்ரீதேவி இடப்பக்கத்தே
      இருப்பது இங்கும் திருவிடவெந்தையில் மட்டுமே.

    2. இங்கு பெருமாள் வெளியே புறப்பட்டு திருவீதி கண்டருளும்
      போதெல்லாம் ஜடாயுவுக்கும் சகல மரியாதைகளும் உண்டு.

    3. இங்கு எழுந்தருளியுள்ள     விஜயராகவப்     பெருமாளுக்கு
      வடமொழியில் ஸமர புங்கவன் என்பது பெயர். இதைத்தான்
      போரேறு என்று தமிழ்படுத்தினார் ஆழ்வார்.

    4. இந்த ஊரில் உள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி இரவில் மடியில்
      (பெண்கள்) வறுத்த பயறு கட்டிக்கொண்டு படுக்க மறுநாள்
      விடிந்தவுடன் அப்பயறு முளைத்திருக்குமாயின் அவர்கட்கு
      குழந்தைப்பேறு உண்டாகும். இங்கு இது அனுபவரீதியாகக்
      காணப்படும் உண்மையாகும். இதனாற்றான் இந்தத் தாயாருக்கு
      வறுத்த பயறு, முளைவிக்கும் மரகதவல்லித் தாயார் என்று பெயர்
      பிரசித்தம்.

    5. இவ்வூரில் வாழ்ந்த யாதவப் பிரகாசர் என்பவரிடமே இராமானுஜர்
      அத்வைத பாடங்களைப் பயின்றார். இராமானுஜர் படித்த
      மண்டபம் இன்றும் உள்ளது. இராமானுஜர் கல்வி கற்றதை
      விளக்கும் சிற்பமும் இக்கோவிலில் உள்ளது. (இராமானுஜரோடு
      எம்பாரும் இங்குதான் கற்றார்.)

    6. நம்பிள்ளையாரின் சீடரான பின்பழகிய பெருமாள் ஜீயர்
      அவதரித்த தலம் ஆகும்.

    7. இக்கோவிலில் அதிக அளவிற்கு கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
      இதன் மூலம் பாண்டிய மன்னர்களும் விஜயநகரப் பேரரசும்
      இத்தலத்திற்கு ஆற்றிய தொண்டினைப் பற்றி அறிந்துகொள்ள
      முடிகிறது. இங்குள்ள     கல்வெட்டுக்கள்     இக்கோவிலைப்
      ‘போரேற்றுப் பெருமாள் கோவில்’ என்றும் ‘சித்தன்னவேலி
      திருப்புட்குழி நாயனார்     கோவில்’ என்றும் பலவாறு
      குறிப்பிடுகின்றன. மன்னு மரகதத்தை புட்குழியெம் போரேற்றை
      என்பார் திருமங்கையாழ்வார்.

    8. இங்குள்ள குதிரை வாகனம் மிகவும் அதிசயமானதாகும். கல்
      குதிரை என வழங்கப்படும் இக்குதிரை உண்மையான குதிரை
      போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது. இதைச் செய்த
      தச்சன் இதுமாதிரி இனி யாருக்கும் செய்துகொடுப்பதில்லை
      என்று உறுதியோடு இருந்து உயிர்துறந்தானாம். இவனது
      உறுதிக்கும் பக்திக்கும் பாராட்டுத் தெரிவித்து பெருமாள் 8ஆம்
      உத்சவத்தன்று அவனது வீதிக்கு எழுந்தருளுகிறார்.

    9. இராமானுஜரும்,     மணவாள     மாமுனிகளும்     பன்முறை
      எழுந்தருளியுள்ளனர்.

    10. நூற்றெட்டுத் திருப்பதி யந்தாதியில் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
      கூறுகிறார்.

      பிரகலாதனைக் கொல்வதற்காக இரண்யன் பெரிய மத
      யானைகளை (மால்வேழம்) அனுப்பினான். பாம்புகளை ஏவினான்.
      எண்ணற்ற மாயைகளைச் செய்ய வைத்து அச்சுறுத்தினான். மலை
      மீதிருந்து உருட்டச் செய்தான். கை கால்களைக் கட்டி கடலில்
      எறியச் செய்தான். படைக்கலன்களால் தாக்கச் செய்தான் பெற்ற
      அன்னையின் கரத்தாலேயே விஷத்தையும் கொடுக்கச் செய்தான்.
      இவையெல்லாம் பயனன்றிப் போய் விட்டது. இறுதியில் தீக்குழி
      அமைத்து எறிகின்ற தணலில் இறக்கினான். ஆனால் அப்போதும்
      அந்நெருப்பு அவனுக்கு இதமான குளிர் போன்றிருந்தது.
      இத்தனைக்கும் என்ன காரணம் என்ன பலம் பெற்றிருந்தான்
      பிரகலாதன். அவன் பெற்றிருந்த பலம் நாராயணா என்னும்
      மந்திரம் மட்டுமே. இதையெல்லாம் கேட்டும் நாராயணன் நாம
      மகிமையை அறியாமல் உள்ளனரே இந்த மானிடர்கள். அன்று
      நெருப்புக்குழியை குளிர்ந்த தடாகம் போன்று ஆக்கிய
      நாராயணன் அன்றோ திருப்புட்குழியில் உள்ளான். இவனின்
      சீர்மைகள் எளிதில் சொல்லத் தக்கவோ?

      திருப்புட்குழியில் எழுந்தருளியுள்ள எம்பெருமானை வடமொழியில்
      போரேறு என்றான் (போர்க்களத்தே பாயும் சிங்கம் என்றனரோ)
      அந்தப் போரேறு போன்ற விஜயராகவன் திருமலரடியை
      நாடுங்கள் என்று இத்தலத்திற்குப் பெருமை சூட்டுகிறார்.

      “மால்வேழ்கு மரவும் மாயையும் வெற்பும் கடலும்
      மேல் வீழப் படையும் விட்டுப் போய்ப் - பாலன்
      நெருப்புட்குழி குளிர நின்றதும் கேட்டதோர்
      திருப்புட்குழி யமலன் சீர்”
              - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:37:41(இந்திய நேரம்)