தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

 • மகர நெடுங்குழைக்காதப் பெருமான்
  கோவில் - தென்திருப்பேரை
  வரலாறு

  பிரமாண்ட புராணமே இதைப் பற்றியும் தெரிவிக்கிறது. ஒரு சமயம்
  ஸ்ரீமந் நாராயணன் திருமகளை விடுத்து பூமாதேவியிடம் அதிக ஈடுபாடு
  கொண்டு பூவுலகில் பூமாதேவியிடம் லயித்திருந்த காலையில்
  திருமகளாகிய இலக்குமி தன்னைக் காண வந்த துர்வாச முனிவரிடம்,
  தனது தனித்த நிலைமையைத் தெரிவித்து பூமாதேவியின் நிறமும்
  அழகும் தனக்கு வரவேண்டுமென்று வேண்டினாள்.

  துர்வாசர் பூமிப்பிராட்டியின் இருப்பிடம் அடைந்தார். துர்வாசர்
  வந்திருப்பதை அறிந்தும் அறியாது போல் இருந்த பூமாதேவி,
  எம்பெருமானின்     மடியைவிட்டு     எழுந்திராமல்     இருக்கவே,
  கடுஞ்சினங்கொண்ட துர்வாசர் பூமாதேவியை நோக்கி “நீ இலக்குமியின்
  உருவத்த பெறுவாய்” என்று சபிக்க அதுகேட்ட பூமாதேவி தனது
  குற்றத்தை உணர்ந்து மிகவும் வருந்திய நிலையில், தனது குற்றத்தை
  பொறுக்குமாறு வேண்டிக்கொண்டு எனது “கரிய நிறம் பெறும் காலம்”
  எப்போது வருமென்று கேட்க, தாமிரபரணியின் தென் கரையில் உள்ள
  கரிபதம் என்ற சேத்திரத்தில் நதியில் நீராடி தவம் புரிந்தால் உனது
  பழயை உருவம் சித்திக்கும் என்று கூறியருளினார்.

  இதன் பிறகு துர்வாச முனிவர் இவ்விபரத்தை இலக்குமியிடம்
  சொல்ல இலக்குமியும் ஆனந்தித்திருந்தாள்.

  துர்வாசர் கூறியபடி பூமாதேவி ஸ்ரீபேரை (இலக்குமியின் உடல்)
  என்ற பெயருடன் அஷ்டாச்சர மந்திரத்தை ஜெபித்து ஒரு பங்குனி
  மாதம் பௌர்ணமியன்று நீராடி தர்ப்பணம் செய்ய முயற்சிக்கும்போது,
  அந்நதியில் மீன் வடிவமுள்ள இரண்டு குண்டலங்களைக் கண்டு
  அவைகளைக் கையிலெடுத்ததும் திருமால் பிரத்யட்சமாக அம்மகர
  குண்டலங்களைத் திருமாலுக்கே     உகந்தளித்தாள்.     அதனால்
  எம்பெருமானுக்கும் “மகர நெடுங்குழைக் காதர்” என்ற திருநாமம்
  உண்டாயிற்று அத்தீர்த்தத்திற்கும் மத்ஸய தீர்த்தம் என்றே
  பெயருண்டானது. தேவர்கள் பூச்சொரிய அழகுத்திருமேனியாக
  விளங்கின திருமால் பூமாதேவியின் விருப்பப்படியே மகர நெடுங்குழைக்
  காதராகவே அங்கு எப்போதும் காட்சியளிக்கச் சம்மதித்தார்.

  ஸ்ரீபேரை (லக்குமியின் உடல்) என்ற பெயரில் பூமிப் பிராட்டி இங்கு
  தவம்     செய்ததால் திருப்பேரை என்றே     இத்தலத்திற்குப்
  பெயருண்டாயிற்று.

  108 வைணவதிவ்ய தேசங்களில் சோழநாட்டில் திருச்சிக்கு
  அண்மையில் திருப்பேர் நகர் என்ற திவ்ய தேசமொன்றிருப்பதால்
  இத்தலத்தை தென் திருப்பேரை என்று அழத்தனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:39:49(இந்திய நேரம்)