2. அற இலக்கியம்

நான்மணிக்கடிகை

பாடல் கருத்து
Theme of Poem


கள்ளி மரத்தினுள் அகில் கட்டையானது தோன்றும். மானின் வயிற்றில் ஒளியுள்ள அரிதாரம் பிறக்கும். பெரிய கடலுக்குள் மிக்க விலை மதிப்புடைய முத்துக்கள்தோன்றும். ஆகவே, நற்குணம், நற்செயல்களையுடைய குடியை முன்பே அறிய வல்லவர் யாவர்? எவரும் இல்லை.

கள்ளி வயிற்றில் அகில்பிறக்கும் மான்வயிற்றில்

ஒள்ளரி தாரம் பிறக்கும் - பெருங்கடலுள்

பல்விலைய முத்தம் பிறக்கும் அறிவார்யார்

நல்லாள் பிறக்கும் குடி. - (4)

ஒருவன் தனக்கு இழிவை விரும்பினால் இரப்பதற்காகப் புறப்படுவானாக. இந்த உலகத்தில் நிலை பெற்றிருக்க விரும்பினால் புகழை நிலைபெறச் செய்க. மறுமைக்குத் தன்னுடன் துணையாக வர விரும்பினால் அறங்களைச் செய்க. வெற்றிபெற விரும்பினால் சினத்தைக் கைவிடுக

இன்னாமை வேண்டின் இரவெழுக இந்நிலத்து

மன்னுதல் வேண்டின் இசைநடுக - தன்னொடு

செல்வது வேண்டின் அறஞ்செய்க வெல்வது

வேண்டின் வெகுளி விடல். - (17)

பழிபாவங்களுக்கு அஞ்சாதிருக்கும் தன்மைக்கு அஞ்சுவாய்! தன்னால் முடிந்த அளவிற்குப் பிறருக்கு உதவி செய்யும் நல்ல குணத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டா. மனமறிய நேர்மை தவறி ஒரு பக்கம் சாயாமையாகிய ஒழுக்கத்தைக் கொள்வாய். பெருஞ்செல்வத்தைப் பெறுவதாயினும், நண்பரிடம் ஒப்படைத்த செயலை ஆராயாமல் இருப்பாயாக

அஞ்சாமை அஞ்சுதி ஒன்றின் தனக்கொத்த

எஞ்சாமை எஞ்சல் அளவெல்லாம் - நெஞ்சறியக்

கோடாமை கோடிபொருள்பெறினும் நாடாதி

நட்டார்கண் விட்ட வினை. - (25)

செல்வத்தைப் போல ஒருவனுக்கு வலிமையுடையது வேறு இல்லை. கற்ற அறிவைப் போல் உற்ற நேரத்துக்கு உதவுவது வேறு இல்லை. வறுமையைப் போல் துன்பம் உடையது வேறு இல்லை. இரப்பவர்க்கு இல்லை என்னாத மன உறுதியைப் போல வேறு இல்லை.

திருவின் திறலுடைய(து) இல்லை ஒருவற்குக்

கற்றலின் வாய்த்த பிறஇல்லை - எற்றுள்ளும்

இன்மையின் இன்னாத(து) இல்லைஇல் என்னாத

வன்மையின் வன்பாட்ட(து) இல். - (29)