சிறுபஞ்சமூலம்
பாடல் கருத்து
Theme of Poem
கண்ணுக்கு அழகாவது மற்றவர் மீது இரக்கம் கொள்ளுதல்; காலுக்கு அழகாவது மற்றவரிடம் யாசிக்கச் (பிச்சை எடுக்க) செல்லாமை; ஆராய்ச்சிக்கு அழகாவது இன்னது இவ்வாறு முடியும் என்று அறுதியிட்டு உரைப்பது; இசைக்கு அழகாவது கேட்டவர் ‘நன்று’ என்று கூறுவது; அரசர்க்கு அழகாவது நாட்டு மக்கள் வருந்தும்படி ஆட்சி செய்யமாட்டான் என்று புகழ்ந்து கூறுவதாகும்.
கண்வனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை
எண்வனப்(பு) இத்துணையாம் என்றுரைத்தல் - பண்வனப்புக்
கேட்டார்நன்(று) என்றல் கிளர்வேந்தன் தன்னாடு
வேட்டான் நன்(று) என்றல் வனப்பு.

பிறர் செய்த பிழையைப் பொறுத்துக் கொள்ளுதல் பெருமையாகும். பிறர் செய்த பிழையை எண்ணிக்கொண்டே யிருப்பது சிறுமையாகும். பிறர் மீது கொண்டுள்ள பகையை விட்டு நட்புக் கொண்டு வாழ்வது நல்லது. நற்பண்புகள் கொண்ட பெரியவர்கள் பலர் (சான்றோர்கள்) இகழ்ந்து நகைக்காதவாறு வாழ்வதும் நன்மை தரும்.
பிழைத்த பொறுத்தல் பெருமை சிறுமை
இழைத்த தீங்(கு) எண்ணி யிருத்தல் - பிழைத்த
பகைகெட வாழ்வதும் பல்பொருளா பல்லார்
நகைகெட வாழ்வதும் நன்று.
பூக்காமல் காய்க்கின்ற மரங்களும் உள்ளன; அதுபோல நன்மையை அறிபவர் வயதால் முதியவர் அல்லர் ஆயினும், அறிவினால் மூத்தவர்களுக்கு ஒப்பாவார். நூற்கல்வி பெற்ற சான்றோர்களும் இளவயதினர் என்றாலும் மூத்தவர்களுக்கு ஒப்பாவர். பாத்தி கட்டி விதைக்காமலே முளைக்கின்ற விதைகளும் உள்ளன. அதுபோலவே அறிவுடையவர்களுக்குப் பிறர் அறிவிக்காமலேயே அறிவு தோன்றும்.
பூவாது காய்க்கும் மரமுள நன்றறிவார்
மூவாது மூத்தவர் நூல்வல்லார் - தாவா
விதையாமை நாறுவ வித்துள மேதைக்(கு)
உரையாமைச் செல்லும் உணர்வு.

எல்லாவற்றையும் அறிந்த ஒருவனும், யாதொன்றும் அறியாதவனும் இந்த உலகத்தில் இல்லை. ஒருவன் எல்லா நற்குணங்களும் பொருந்திக் குற்றமில்லாதவனும், எல்லாவற்றையும் கற்ற ஒருவனும் இல்லை.
ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும்
ஒருவன் அறியா தவனும் - ஒருவன்
குணனடங்கக் குற்றமி லானும் ஒருவன்
கணனடங்கக் கற்றானும் இல்.