43.  ஊர் தீயிட்டது
 

இதன்கண்: யூகி கூறியதை வயந்தகன் உதயணனுக்கு அறிவித்தலும், அதுகேட்டு உதயணன் செய்த செயலும், யூகியின் செயலும்,
அவன் மறவர் செயலும், மங்கையர் நகரில் தீக்கொளுவுதலும், தீப்பற்றிய நகரத்தே நிகழும் நிகழ்ச்சிகளும், பிறவும் கூறப்படும்.
 
              எண்ணமொடு இருந்தோன் கண்ணியது கருதி
            யாத்திரைக்கு அமைந்தன பாற்பட அடக்கிப்
            போகுபொருள் உணர்ந்து பாகுசெயற்கு எய்தி
            நயந்தெரி நாட்டத்து வயந்தகன் கூறும்
 
          5   பாகியல் உள்ளத்துப் படிமந் தாங்கிய
            யூகி சூழ்ந்த உரைப்பருஞ் சூழ்ச்சி
            வாய்திறந்து இன்றிது கோமகற்கு உரையெனக்
            கூறினன் அருளிக் குறிப்பில் கேள்மதி
            செறுநர் சிறையகப் பட்டனன் ஆயினும்
       10    உறுவலி நாகத்து ஒற்றிடம் பார்த்தல்
            அறைகடன் ஞாலத்து இறைகடன் ஆதலின்
 
              நம்மை எள்ளிய வெம்மை வேந்தன்
            சூழ்ச்சி வெள்ளத்து ஆழ்ச்சி எய்தி
            ஒன்னா தோரும் துன்னினர் ஆடும்
       15    நெடுநீர் விழவில் படைபிடித் தோரைக்
            கடிமுறை கடிவது அல்லது இல்லென
            இடுமணி யானை எருத்தம் ஏற்றி
            அடல்முரசு அறைந்தமை அறிந்தனம் ஆதலின்
 
              உத்தரா பதத்தும் ஒப்புமை இல்லாப்
       20   பத்திரா பதியைப் பண்ணமைத்து இயற்றித்
            தான்மேற் கொண்ட தன்மையன் ஆதலின்
            நூல்மேல் சூழ்ந்த நுனிப்பில் வழாமைச்
            செருஅடு வேந்தனும் பெருநடுக்கு எய்தத்
            தொகைகொள் மாடத்து அகநகர் வரைப்பின்
       25  நகைகொள் முறுவல் நம்நாட் டாட்டியர்
            புகைஎரி பொத்திய புணர்ப்புவகை உண்மையின்
 
              ஊர்வயின் கம்பலை அல்லது ஒருவரும்
            நீர்வயின் கம்பலை நினைக்குநர் இல்லை
           இல்லைஆதலின் வெல்சமம் பெருக்கி
       30   வேந்தன் கோடல் வியன்நாடு கெடுத்தல்
            ஆங்கவன் மகளை அருஞ்சிறை வௌவுதல்
            மூன்றினுள் ஒன்றே காய்ந்தவர் கடுந்தொழில்
 
              தோன்றக் கூறிய மூன்றின் உள்ளும்
            முன்னைய இரண்டும் முடியா மற்றவன்
       35   அரும்பெறல் மடமகள் அமிழ்துபடு தீஞ்சொல்
            ஏசுவது இல்லா எழில்படு காரிகை
            வாசவ தத்தைக்கு வலத்தன் ஆகிச்
            செந்தீ வெம்புகை யிம்பர்த் தோன்றலும்
            அம்தீம் கிளவியை ஆண்மையில் பற்றிக்
       40   கால்பிடி தன்னொடு ஏற்றுக ஏற்றலும்
 
              வேல்படை இளையர் நால்பெருந் திசையும்
            வாழ்க உதயணன் வலிக்கநம் கேள்எனப்
            பாழினும் முழையினும் காழில் பொத்தினும்
            ஒளித்த வெம்படை வெளிப்பட ஏந்தி
       45   மலைக்குநர் உளரெனின் விலக்குநர் ஆகித்
            தொலைக்கும் நம்படை துணிந்திது கருதுக
 
              இமைத்தோர் காணா இயற்கைத்து ஆக
            அமைக்கப் பட்ட அணிநடை மடப்பிடி
            நண்ணா மன்னன் நாடுதலை மணந்த
       50   ஐந்நூற்று ஓடுதல் ஆற்றாது ஆயினும்
            முந்நூற்று எழுபதும் முப்பதும் ஓடி
            வீழினும் வீழ்க வேதனை இல்லைக்
            கூழினும் உடையினும் குறிப்பினர் ஆகி
            நாட்டுப்புற மாக்களும் வேட்டுவத் தலைவரும்
       55   குறும்பரும் குழீஇய குன்றுடைப் பெருநாடு
            அறிந்தோர்க்கு ஆயினும் அணுகுதற்கு அரிய
            அரிய ஆயினும் உரியவை போல
            இயற்றினன் பண்டே கவற்சி நீங்கி
 
              இன்னன் என்று தன்அறி வுறீஇப்பின்
       60   குற்றப் படினும் அற்றம் ஓம்பிப்
            போதத்தின் அகன்று சாதத்தின் வழிநின்று
            அடுகளிக் குரவைசேர் ஆர்கலி யாளர்
            நடுகல் படப்பை இடுகல் சீறூர்
            கண்கூட் டிருந்த ஐம்பதிற்று இரட்டிப்
       65   புல்பரந்து கிடந்த கல்அதர் கடந்தபின்
 
 
              தமர்அல் மாக்களைத் தருக்கின் நூறும்
            அமரடு நோன்தாள் நமருளர் அவ்வயின்
            இன்னவை பிறவுந் தன்மனத்து அடக்கித்
            தான்அவண் ஒழிக மானவன் நகரில்
       70   இழுக்குடைத்து என்னும் எண்ணம்உண் டாயினும்
            வழுக்குடைத்து அதனை வலித்தல் நீங்குக
            யாவை ஆயினும் யான்துணி கருமம்
            தீயது இன்மை தெளிகஎம் பெருமகன்
 
              யூகி என்னும் பரைபரந்து ஓடப்
       75    புல்வாய் இனத்தில் புலிபுக் காங்குக்
            கொல்வாள் வீசிக் கூற்றுத்தலை பனிப்ப
            வெல்போர் வேந்தன் வீரரைச் சவட்டி
            எய்தப் போதுவல் ஏதம் ஆயினும்
            ஐயம் இன்றி யான்துணி கருமம்
       80   செய்யான் ஆயின் வையம் இழக்கும்
            மையல் யானை மன்னவன் தான்என
            இயைந்த தோழன் எண்ணிய கருமம்
            வயந்தக குமரன் வத்தவற்கு உரைப்பத்
 
              தானும் யானுந் தீதிலம் ஆயின்
       85   வானும் வணக்குவம் ஏனையது என்னென
            முறுவல் கொண்ட முகத்தன் ஆகி
            நறுநீர் விழவின் நாளணி அகலம்
            பூண்சேர் மார்பன் காண்பான் போலக்
            கடைப்பிடி உள்ளமொடு மடப்பிடி கடைஇக்
       90   கோமகள் ஆடும் பூமலி பெருந்துறை
            அகலாது அணுகாது பகலோன் விண்முனிந்து
            இருநில மருங்கின் இழிதந் தாங்குப்
            பெருநலம் திகழும் திருநலக் கோலமொடு
            செய்குறிக் கருமம் தெவ்வப் பட்டுழித்
 
         95   தாக்குநர் அசாஅய்ப்பொர நேர்க்குநர் இரிவுழி
            இருவரும் அவ்வழிப் பருவரல் தீரப்
            பெருவலிக் கிளையில் கூடுவது போல
            விண்ணக மருங்கில் கண்அகன்று உராஅய்
            மண்ணகம் மறிக்கும் மதுகைத்து ஆகிப்
      100    பாருடைப் பவ்வம் பருகுபு நிமிர்ந்த
            நீருடைக் கொண்மூ நெகிழாக் காலொடு
            எண்டிசைப் பக்கமும் எதிர்எதிர் கலாஅய்க்
            கண்டவர் நடுங்கக் கடுவளி தோன்றலின்
 
              கனவில் கண்ட கண்ஆர் விழுப்பொருள்
      105    நனவில் பெற்ற நல்குர வன்போல்
            உவந்த மனத்தின் விரைந்தெழுந்து யூகியும்
            மறையத் திரிதரு மாந்தர்க்கு எல்லாம்
            அறியக் கூறிய குறிஇற் றாகப்
            பத்திரா பதத்துப் பகையமை போர்வை
      110    உட்குவரு முரசம் உரும்உறழ்ந்து அதிரக்
            கொட்டினன் கொட்டலுங் கொள்ளென வுராஅய்
 
              எவ்வெத் தானத்தும் கவ்வை தோற்றி
            உதையண குமரனும் யூகியும் வாழ்கெனப்
            புதைவாள் உரீஇப் பூசல் விளைத்தலும்
 
        115    மட்டுஅணி மூதூர் மனைதொறும் மரீஇய
            கட்டணி கூந்தல் கள்ள மங்கையர்
            அட்டிலும் அறையும் விட்டெரி கொளுவலின்
 
              எட்டுஎனக் கூறிய திசைதிசை தொறூஉம்
            ஐந்தலை உத்தி அரவுநாண் ஆக
      120    மந்தர வில்லின் அந்தணன் விட்ட
            தீவாய் அம்பு திரிதரு நகரின்
            ஓவாது எழுமடங்கு உட்குவரத் தோன்றி
 
              அரும்புனல் ஆடாது அகவயின் ஒழிந்த
            பெரும்பரி சாரத்துப் பெண்டிர் எல்லாம்
      125    நறுநெய் தோய்ந்த நார்நூல் வெண்துகில்
            செறிமென் கச்சை சேர்ந்த வல்குலர்
            அசல மஞ்ஞையின் அணிநிறந் தழீஇப்
            பசலை பாய்ந்த திதலைத் தித்தி
            அசைந்த அவ்வயிறு அடைமத் தாழ்ந்த
      130    கொடுங்கால் குண்டிகைக் கொட்டம் ஏய்ப்ப
            அறாஅது ஒழுகும் அம்முலை ஆரம்
            பொறாஅ ஆயினும் புடைத்தல் ஆனார்
 
              ஆற்றல் வேந்தன் அற்றம் நோக்கி
            வேற்று வேந்தர் புகுந்தனர் உளர்கொல்
      135    கூற்ற வேழம் குணம்சிதைந் ததுகொல்என்று
            ஈற்றுப் பெண்டிர் இளமகத் தழீஇ
            ஊற்றுநீர் அரும்பிய உள்ளழி நோக்கினர்
            காற்றுஎறி வாழையில் கலங்கிமெய்ந் நடுங்கி
            ஆற்றேம் யாம்என்று லறினர் ஒருசார்
 
        140    போதுகொண்டு அணியின் பொறுக்கல் ஆற்றாத்
            தாதுகொண்டு இருந்த தாழ்இரும் கூந்தலர்
            கருங்கேழ் உண்கண் கலக்கமொடு அலமரப்
            பெருஞ்சூல் பெண்டிர் பேரழல் நோக்கி
            வருவோர்க் கண்டு வணங்கினர் ஒருசார்
 
        145    தவழும் புதல்வரை ஒருகையால் தழீஇப்
            பவழஞ் சேரந்த பல்காழ் அல்குலர்
            அவிழ்ந்த பூந்துகில் அங்கையின் அசைஇ
            நகைப்பூங் கோதையொடு நான்ற கூந்தற்கு
            மிகைக்கை காணாது புகைத்தீ எறிப்பப்
      150    படைத்தோன் குற்றம் எடுத்துரைஇ இறக்கேம்
            அங்கித் தேவன் அருளென வயன்மனைப்
            பொங்குநீர்ப் பொய்கை புக்கனர் ஒருசார்
 
              பறைந்தஇடை சோர்தரு பசலை வெண்நரைக்
            குறைந்த கூந்தலர் கோசிகம் போலப்
      155    புள்ளி விதிர்த்த உள்உறு மேனியர்
            பைசொரிந்து அன்ன பால்இல் தோல்முலை
            நரைமூ தாட்டியர் நடுக்கம் எய்திக்
            காலிடு தளர்ச்சியர் கண்பிறர் ஆகக்
            கோலொடு தளர்ந்து கூட்டுநர் இன்றி
     160     ஆதி முற்றத்து வேதிகை முட்டிச்
            சுழலும் நெஞ்சமொடு துயரம் எய்தி
            அழல்இல் முற்றம் அடைந்தனர் ஒருசார்
 
              சீப்புஉள் உறுத்துத் திண்எழுப் போக்கிக்
            காப்புஉள் உறுத்த கடிமதில் வாயில்
      165    கால்கடி யாளர் வேல்பிடித் தோடி
            ஆணை ஆணை அஞ்சன்மின் கரவொடு
            பேணல் செல்லாது பெருந்தீப் படுத்த
            நாணில் பெண்டிரை நாடுமின் விரைந்தென
            ஆய்புகழ் வேந்தன் அரசுத் தாணிக்
      170    கோயில் காவல் கொண்டனர் ஒருசார்
 
              எப்பால் மருங்கினும் அப்பால் அவரவர்
            பெருந்துயர் எய்திக் கரிந்துகண் புதைப்ப
            நறுநெய் பயந்த நன்நகர் முத்தீ
            மறுமைக்கு எண்ணிய மயல்அறு கிரிசை
      175    அந்தணர் சேரியும் அருந்தவர் பள்ளியும்
             வெண்சுதை மாடமும் வேந்தன் கோயிலும்
            தெய்வத் தானமொடு அவ்வழி ஒழியத்
 
              தண்நறுங் காழ்அகில் நுண்அயிர்! கூட்டி
            அம்புகை தவழ்ந்த அரக்குவினை மாடமும்
     180    வெம்புகை தவழ்ந்து வேந்துகண் புதைப்ப
            வால்வளை மகளிர் மணிநிலத்து அமைந்த
            கால்வளர் சாலி ஆய்பத அரிசிப்
            பொன்செய் கிண்கிணிப் புதல்வர் ஆடும்
            கம்பலை வெரீஇக் கவரல் செல்லா
      185    அம்பலக் கொடுங்காழ் அசைத்த யாப்பின்
            கிடையும் பூளையும் கிழியும் பஞ்சியும்
            படைஅமைத்து இயற்றிய மடைஅணிப் பள்ளியுள்
            பிணிக்குரல் பயிற்றும் பேடையைக் காணாது
            அணிக்கண் புறவின் ஐம்பால் சேவல்
      190    எரிவளை புகையிடை இறகுவிரித்து அலற
            மேலெழு பேடை மீண்டுவந்து ஆடக்
            கீழ்எழு செந்தீக் கிளைபிரித்து அழற்ற
            மாமயில் பெடையொடு மகளிர் நாப்பண்
            தூவி மஞ்ஞை தோகைவிரித்து அகவ்
 
        195    ஏற்றுரி முரசின் இறைவன் மூதூர்க்
            காற்றுத் துணையாகக் கனலெரி கவரப்
            படலணி வாயில் மடலணி வேயுள்
            இடையற வில்லா இருக்கையில் பொலிந்த
            பன்னாறு ஆயிரம் பாடிக் கொட்டிலும்
      200    முந்நூறு ஆயிரம் முட்டிகைச் சேரியும்
            ஐந்நூறு ஆயிரம் கம்மஆ லயமும்
            சேனை வேந்தன் சிறப்பினொடு இருந்த
            தானைச் சேரியும் தலைக்கொண்டு ஓடிக்
            கானத் தீயின் கடுகுபு திசைப்ப
      205    ஏனை மாடமும் எழுந்தன்றால் எரியென்