முகப்பு தொடக்கம்
 


42. நங்கை நீராடியது
 

  இதன்கண்; வாசவதத்தை நீராட வருதலும் அவள் மணையில் சேர்த்தலும் மஞ்சனமாட்டலும் ஒப்பனை செய்தலும் அவள் நீராடலும் உதயணன் செயலும் பிறவுங் கூறப்படும்.  
     
 

            நீராட்டு அரவம்நெடுநகர் வரைப்பகம்
            ஆராட்டு அரவமொடு அமர்ந்துவிழைவு அகற்றிய
            பெருநிலை நிதியம் பேணாது வழங்கி
            இருநில மடந்தைக்கு இறைவன் ஆகிப்
        5   பெருஞ்சின மன்னர் அருஞ்சமம் வாட்டித்
            தம்மொழிக் கொளீஇ வெம்முரண் வென்றியொடு
            வழுவில் கொள்கை வானவர் ஏத்தும்
            கழிபெருங் கடவுளை வழிபடின் அல்லது
            வணக்கம் இல்லா அணித்தகு சென்னித்
       10    திருச்சேர் அகலத்துப் பிரச்சோ தனன்மகள்

உரை
 
              அரிமான் அன்னதன் பெருமான் அகலத்துத்
            திருவுநிறை கொடுக்கும் உருவுகொள் காரிகை
            வால்வளைப் பணைத்தோள் வாசவ தத்தையைக்
            கோல்வளை மகளிர் கொட்டையைச் சூழ்ந்த
       15   அல்லியும் இதழும் போல நண்ணிப்
            பல்வகை மரபின் பசும்பொன் குயின்ற
            ஊர்தியும் பிடிகையும் சீர்கெழு சிவிகையும்
            வையமும் தேரும் வகைவெண் மாடமும்
            பொறுப்பவும் ஊர்பவும் செறித்துஇடம் பெறாஅர்
உரை
 
         20   நேமி வலவன் ஆணை அஞ்சிப்
            பூமி சுவர்க்கம் புறப்பட் டாங்குத்
            தீட்டமை கூர்வாள் கூட்டொடு பொலிந்த
            வேல்திறல் ஆளரும் மிலைச்சரும் சிலதரும்
            கோல்தகை மாக்களும் நூற்றுவில் அகலம்
       25   குறுகச் செல்லாச் செறிவுடைக் காப்பில்
            பெருங்கடி மூதூர் மருங்குஅணி பெற்ற
            அருங்கடி வாயிலொடு துறைதுறை தோறும்
உரை
 
              அம்பணை மூங்கில் பைம்போழ் நிணவையும்
            வட்டமும் சதுரமும் முக்கோண் வடிவமும்
       30   கட்டளை யானையும் மத்தக வுவாவும்
            வையப் புறத்தொடு கைபுனைந்து இயற்றிப்
            பூத்தூர் நிலையோடு யாப்புற மைத்துக்
            காமர் பலகை கதழவைத்து இயற்றி
            வண்ணம் கொளீஇய நுண்ணூல் பூம்படம்
       35   எழுதுவினைக் கம்மமொடு முழுதும்முதல் அளைஇ
            மென்கிடைப் போழ்வைச் சந்திய வாகி
            அரிச்சா லேகமும் நாசியும் முகடும்
            விருப்புநிலைத் தானமும் பிறவும் எல்லாம்
            நேர்ந்துவனப்பு எய்திய நீரணி மாடம்
       40   சேர்ந்த வீதியுள் சிறப்பொடு பொலிந்த
உரை
 
              எவ்வெவ பண்டமும் அவ்வயின் போத்தந்து
            ஒலியுஞ் சேனை இணைதனக்கு ஒவ்வா
            மலிநீர் மாடத்துப் பொலிவுகொள் மறுகின்
            வெயில்அழல் கவியாது வியலக வரைப்பின்
       45   உயிரழல் கவிக்கும் உயர்ச்சித் தாகிப்
            பூந்தார் அணிந்த ஏந்தல் வெண்குடை
            வேந்தன் மகளே விரையாது என்மரும்
உரை
 
              பண்டை மகளிர் படிமையில் பிழையாது
            தண்டம் தூக்கித் தலைப்புனல் விழவினைக்
       50   கொண்டுவந்து ஆடுங் கொழுமலர்த் தடம்கண்
            பொங்குமலர்க் கோதாய் போற்றுஎன் போரும்
            நின்னை உவக்கும்நின் பெருமான் ஏந்திய
            வெல்வேல் கடுக்கும் வெம்மை நோக்கத்துப்
            பொன்னே போற்றி பொலிகஎன் போரும்
       55   பொருவேள் பேணிப் பொலியும் சேனையுள்
            பெருவேண் மறைந்து பெரும்புனல் ஆடும்
            திருவே மெல்லச் செல்கஎன் போரும்
உரை
 
              பொங்குதிரை ஞாலத்து மயக்கம் நீக்கும்
            திங்கள் அன்னநின் திருமுகம் சுடரத்
       60   துன்பப் பேரிருள் துமிக்கத் தோன்றிய
            நங்காய் மெல்ல நடஎன் போரும்
            வல்லவன் எழுதிய பல்பூம் பத்திக்
            கட்டெழில் சேர்ந்த வட்டணைப் பலகைப்
            பளிக்குமணிச் சிவிகையுள் விளக்குறுத் ததுபோல்
       65   தோன்றும் மாதரைத் தோன்ற ஏத்திப்
உரை
 
              பைங்கேழ்ச் சாந்தும் குங்குமக் குவையும்
            மலர்ப்பூம் பந்தும் தலைத்தளிர்ப் போதும்
            மல்லிகைச் சூட்டும் நெல்வளர் கதிரும்
            இனிக்குறை இல்லை யாமும் ஆடுகம்
       70   எனத்துணிந்து இளையோர் ரிருநூல் பெய்த
            அனிச்சக் கோதையும் ஆய்பொன் சுண்ணமும்
            அந்தர மருங்கின் வண்டுகை விடாஅச்
            சுந்தரப் பொடியும் சுட்டிச் சுண்ணமும்
            வித்தகர் கொடுத்த பித்திகைப் பிணையலும்
       75   மத்தநல் யானை மதமும் நானமும்
            வாசப் பொடியொடு காயத்துக் கழும
            அந்தரத்து இயங்குநர் மந்திரம் மறப்ப
            நறுந்தண் நாற்றம் உடையவை நாடி
            எறிந்துந் தூவியும் எற்றியும் தெளித்தும்
       80   பல்லோர் பல்சிறப்பு அயர்வனந் ஏத்தி
உரை
 
              வெல்போர் வேந்தன் மடமகள் விரும்பி
            நில்லாத் தண்புனல் நெடுங்கோட்டு ஒருசார்த்
            துறையமைத்து இயற்றிய குறைவில் கூடத்து
            அம்புகை மருங்கில் செஞ்சுடர் மழுங்கச்
       85   சீயமும் ஏறும் பாய்பரிப் புரவியும்
            யானையும் புலியும் அன்னமும் அகன்றிலும்
            ஏனைய பிறவும் ஏஎ ருடையன
            புனைவுகொண்டு ஏற்றி வினைவலர் இயற்றிய
            கனல்சேர் புயைகஇல் ஏந்திய கையின்
       90   மூதறி பெண்டிர் காதலொடு பரவி
உரை
 
              நீர்கால் கழீஇய வார்மணல் எக்கர்
            முத்தும் மணியும் பொற்குறு சுண்ணமும்
            வெள்ளியும் பவழமும் உள்விழுந்து இமைப்ப
            வண்ண அரிசியொடு மலரிடை விரைஇ
       95   நுண்ணிது நரித்த வண்ண னகர்வயின்
            தமனியத் தடத்துப் பவழப் பாய்கால்
            திகழ்மணி வெள்ளிப் புகழ்மணை சேர்த்திக்
உரை
 
              கதிர்நகை முறுவல் காரிகை மாதரை
            எதிர்கொண்டு வணங்கி இழித்தனர் நிறீஇக்
      100    காஞ்சன மாலையும் செவிலியும் பற்றி
            எஞ்சலில் கம்மத்து இணைதனக்கு இல்லாப்
            பஞ்ச வண்ணத்துப் பத்திபல புனைந்த
            பொங்குமலர்த் தவிசில் பூமிசை ஆயினும்
            அஞ்சுபு மிதியாக் கிண்கிணி மிழற்ற
      105    வேழத் தாழ்கைக் காழொடு சேர்த்த
            கண்டப் பூந்திரை மண்டபத்து இழைத்த
            நன்னகர் நடுவண் பொன்மணை ஏற்றிப்
உரை
 
              பெருந்திசை நோக்கி யிருந்தவண் இறைஞ்சி
            யாத்த காதலொடு ஏத்தல் ஆற்றாள்
      110    அடித்தலம் முதலா முடித்தலங் காறும்
            மொய்யுறத் தோய்ந்த நெய்தயங்கு பைந்தாள்
            மங்கலப் புல்அவர் இன்புறப் பெய்தபின்
            நீராடு பல்கலம் நெரிய ஏற்றி
            ஆராடு தானத்து ஐந்நூறு ஆயிரம்
      115    பசும்பொன் மாலையுந் தயங்குகதிர் முத்தமும்
            இரவல் மாக்கட்குச் சொரிவன நல்கித்
            தீங்கருங் காதல் செவிலியும் தோழி
            காஞ்சன மாலையும் கையிசைத்து ஏந்த
            அளற்றுஎழு தாமரை அள்ளிலை நீரில்
      120    துளக்குறு நெஞ்சின் நடுக்கமொடு விம்மித்
            தோழியர் சூழ ஊழூழ் ஒல்கித்
            தலைப்புனல் மூழ்குதல் இலக்கணம் ஆதலின்
            மணலிடு நிலைத்துறைத் துணைவளை ஆர்ப்பக்
            குடைவனள் குலாஅய்க் குறிப்புநனி நோக்கிப்
      125    படையேர் கண்ணியர் பணிந்துகை கூப்பிப்
உரை
 
              புடைவீங்கு இளமுலைப் பூண்பொறை ஆற்றாது
            இடையே மாக்குமென்று அடைவனர் விலக்கிச்
            சீலத்து அன்ன தெய்வம் கவினிக்
            கோலம் கொண்ட கூந்தலொடு குளித்துப்
      130    பிடிக்கையின் வணரும் முடிக்குரல் ஆற்றாள்
            செருக்கயல் அன்ன சேயரி நெடுங்கண்
            அரத்தகம் பூப்ப அலமந்து எழலும்
            வாழியர் எம்மனை வருந்தினை பெரிதென
            மொழிஅறி மகளிர் தொழுதனர் வணங்கி
      135    அத்துமுறை யுரிஞ்சி ஆயிரத்து எண்குடம்
            முத்துஉறழ் நறுநீர் முறைமையின் ஆட்டி
உரை
 
              அங்கு அல்குவு அல்நங்கைக்கு இன்றிவை
            மங்கல மண்ணுநீர் ஆவன என்று
            நெஞ்சம் நெகிழ்ந்துவந்து ன்புகலந்து தாடியல்
      140    அரவில் பரந்த அல்குல் மீமிசைக்
            கலாஅய்க் கிடந்த குலாத்தரு கலிங்கம்
            நிலாவிடு பசுங்கதிர்க் கலாவம் ஏய்ப்ப
            நீரணி கொண்ட ஈரணி நீக்கிக்
            கதிர்நிழற்கு அவாஅப் பதுமநிறம் கடுக்கும்
      145    புதுநூல் பூந்துகில் அருமடி உடீஇக்
உரை
 
              காரிருங் கூந்தல் நீரற வாரி
            வனப்பொடு புணர வகுத்தணி முடிமிசை
            நீர்ப்பூம் பிணையல் சீர்ப்பமை சிகழிகை
            முல்லையம் கோதை சில்சூட்டு அணிந்து
      150    தண்ணறும் சாந்தம் நுண்ணிதின் எழுதிப்
            பதினோர் ஆண்டினுள் பாற்படக் கிளந்த
            விதிமாண் உறுப்பிற்கு வேண்டுவ வேண்டுவ
            கதிர்மாண் பல்கலம் கைபுனைந்து இயற்றி
            உறுப்பெடுக் கல்லா உடம்பினள் ஆயினும்
உரை
 
        155    சிறப்பவை ஆதலின் சீர்மையொடு இருந்து
            காமர் கோலம் கதிர்விரித்து இமைப்பத்
            தாமரை உறையுள் மேவாள் போந்த
            தேமலர்க் கோதைத் திருமகள் போலக்
            கோமகள் போதுங் குறிப்புநனி நோக்கி
உரை
 
        160    அரணி கான்ற அணிகிளர் செந்தீக்
            கிரிசையின் வழாஅ வரிசை வாய்மை
            அளப்பரும் படிவத்து ஆன்ற கேள்வித்
            துளக்கில் நெஞ்சத்துத் துணிந்த வாய்மொழி
            சால்வணி யொழுக்கின் நூலியல் நுனித்த
      165    மந்திர நாவின் அந்தண மகளிரும்
             வரும்புனல் ஆடற்குப் பரிந்தனர் வந்த
            விரைபரி மான்தேர் அரைச மகளிரும்
            அறிவினுஞ் செறிவினும் பொறியினும் புகழினும்
            எறிகடல் தானை இறைமீக் கூறிய
      170    செம்பொன் பட்டத்துச் சேனா பதிமகள்
            நங்கை தோழி நனிநா கரிகியும்
உரை
 
              அருந்திணை ஆயத்து அவ்வயின் வழாஅத்
            திருந்திய திண்கோள் பெருந்திணை மகளிரும்
            செண்ணம் அமைத்த செம்பொன் பட்டத்து
      175    வண்ண மணியொடு முத்திடை விரைஇய
            கண்ணி நெற்றிக் காவிதி மகளிரும்
            காலினும் கலத்தினும் சாலத் தந்த
            மாநிதிச் செல்வத்து வாணிக மகளிரும்
            நிலத்தோர் அன்ன நலத்தகு பெரும்பொறை
      180    அருங்கடி மூதூர்ப் பெருங்குடி மகளிரொடு
            எண்ணல் ஆகத்துப் பெண்ணுலகு ஏய்ப்பக்
            கன்னி மகளிர் கதிர்த்த கோலமொடு
            நன்மணி ஐம்பால் நங்கையொடு போந்தோர்
உரை
 
              நீர்தலைக் கொண்ட நெடும்பெருந் துறைவயின்
      185    போர்தலைக் கொண்டு பொங்குபு மறலிக்
            கொங்கலர் கோதை கொண்டுபுறத்து ஓாச்சியும்
            அம்செம் சாந்தம் ஆகத்து எறிந்தும்
            நறுநீர்ச் சிவிறிப் பொறிநீர் எக்கியும்
            முகிழ்விரள் தாரை முகநேர் விட்டும்
      190    மதிமருள் திருமுகத்து எதிர்நீர் தூவியும்
            பொதிபூம் பந்தின் எதிர்நீர் எறிந்தும்
உரை
 
              சிவந்த கண்ணினர் வியர்ந்த நுதலினர்
            அவிழ்ந்த கூந்தலர் நெகிழ்ந்த ஆடையர்
            ஒசிந்த மருங்குர் அசைந்த தோளினர்
      195    நல்கூர் பெரும்புனல் கொள்க என்றுதம்
            செல்வம் எல்லாம் சேர்த்துஇறைத்து அருளி
            இளையா விருப்பில்தம் விளையாட்டு முனைஇக்
            கயம்பாடு அவியப் புறங்கரை போந்து
உரை
 
              பொறிமயில் தொழுதி புயல்கழி காலைச்
      200    செறிமயிர் உளர்த்தும் செய்கை போல்தம்
            நெறிமயிர்க் கூந்தல் நீரற வாரிச்
            செழும்பூம் பிணையல் அடக்குபு முடித்துக்
            குழங்கற் சாந்தம் அழுந்துபட அணிந்து
உரை
 
              பைங்கூற் பாதிரிப் போதுபிரித் தன்ன
      205    அங்கோ சிகமும் வங்கச் சாதரும்
            கொங்கார் கோங்கின் கொய்மலர் அன்ன
            பைங்கேழ்க் கலிங்கமும் பட்டுத் தூசும்
            நீலமும் அரத்தமும் வாலிழை வட்டமும்
            கோலமொடு புணர்ந்த வேறுவேறு இயற்கை
      210    நூலினும் உலண்டினும் நாரினும் இயன்றன
            யாவை யாவை அவைஅவை மற்றவை
            மேவன மேவன காமுற அணிந்து
            கம்மியர் புனைந்த காமர் பல்கலம்
            செம்மையின் அணியுஞ் செவ்விக் காலத்துச்
உரை
 
        215    சிந்தையின் ஒழிக்கும் செலவிற்று ஆகி
            அந்தர விசும்பின் அமரர் பொருட்டா
            மந்திர முதல்வன் மரபில் படைத்த
            இந்திரன் களிற்றொடு இணைந்துடன் பிறந்த
            இரும்பிடி தானும் இதற்கிணை அன்றென
      220    அரும்பிடி அறிவோ ஆராய்ந்து அமைத்தது
            காலினும் கையினும் படைத்தொழில் பயின்றது
            கோலினும் வேலினும் மறலினுங் குமைத்தது
            தட்பமும் வெப்பமுந் தாம்படின் தீர்ப்பது
            பகலினும் இருளினும் பணியில் பயின்ற
      225    திகலிருங் கும்பத்து ஏந்திய சென்னியது
உரை
 
              மேலின் தூயது காலில் கடியது
            மத்தக மாலையொடு நித்திலம் அணிந்த
            துத்தரா பதத்தும் ஒப்புமை இல்லாப்
            பத்திரா பதிமிசைப் பனிக்கடல் பிறந்த
      230    வெஞ்சூர் தடிந்த அஞ்சுவரு சீற்றத்து
            முருகவேள் அன்ன உருவுகொள் தோற்றத்து
            உதையண குமரன் புதைவாள் அடக்கிச்
உரை
 
              சிறைஎனக் கொண்ட மன்னவன் செல்வமும்
            துறைவயின் நாடுநர் துதைந்த போகமும்
      235    நெய்பெய் அழலில் கைஇகந்து பெருகிப்
            புறப்படல் செல்லா ஆகி மற்றவை
            மனத்திடை நின்று கனற்றுபு சுடுதலின்
            மாற்றுச் செய்கை என்னும் நீரால்
            ஆற்ற வெவ்வழல் அவிப்பக் கூடுதல்
      240    வயிரத் தோட்டி அன்றியும் பயிரின்
            சொல்லியது பிழையாக் கல்விக் கரணத்துப்
            பிடியொடு புணர்ந்த இப்பகல் ஆயினும்
            முடியும் என்னும் முயற்சியன் ஆகிப்
உரை
 
              பாப்புரி அன்ன மீக்கொள் தானை
      245    இருபுடை மருங்கினும் வருவளிக்கு ஒசிந்து
            வீச்சுறு கவரித் தோற்றம் போல
            மிக்குவாய் கூரும் மீட்சி வேட்கையன்
            கொக்குவாய் யன்ன கூட்டமை விரலினன்
            நண்ணா மன்னனை நலிவது நாடும்
      250    எண்ணமோடு இருந்தனன் இரும்படி மிசைஎன்.
உரை

   
மேல்