9. யூகி சாக்காடு

இதன்கண் : யூகி புட்பக நகர் செல்லும் வழியின் தன்மையும், அவன் புட்பக நகரை அடைதலும், இடபகனைக் காணலும்,அவன்பால் உதயணன் செய்தியை வினாதலும், யூகி இடபகனுக்கு முன்பு நிகழ்ந்தவற்றை ஓதுதலும், இடபகன் யூகியைப்   புகழ்ந்து பாராட்டுதலும்,உதயணன் செய்தியை இடபகன் யூகிக்கு ஓதுதலும், யூகி மூர்ச்சித்து வீழ்ந்து தெளிதலும், சாங்கியத் தாயைக் கண்டு யூகி பின் நிகழ்த்த வேண்டியவற்றை உணர்த்துதலும், நண்பர் கடமை இன்ன என்பதும், யூகி தான்  இறந்துவிட்டதாக நடித்து அயலாரை நம்பச் செய்தலும், சாங் கிய மகள் சயந்தி நகரம் புகுதலும் பிறவும் கூறப்படும்.
 




5




10

 புறநகர் போந்த பின்றைச் செறுநீர்
 அள்ளல் படப்பை அகல்நிலம் தழீஇப்
 புள்ஒலிப் பொய்கையொடு பூந்துறை மல்கி
 வான்கண்டு அன்ன வனப்பின ஆகி
 மீன்கண் டன்ன வெண்மணல் விரிந்த
 கானும் யாறும் தலைமணந்து கழீஇ
 அரும்புஅணி புன்னையும் சுரும்புஇமிர் செருந்தியும்
 இலைஅணி இகணையும் இன்னவை பிறவும்
 குலைஅணி கமுகொடு கோள்தெங்கு ஓங்கு
 பழனம் அடுத்த கழனிக் கைப்புடைப்
 போர்மாறு அட்ட பூங்கழல் மறவர்
 தேர்மாறு ஓட்டித் திண்ணிதின் அமைத்த
 கோட்டம் இல்லா நாட்டு வழிவயின்

 

15




20

 ஆணி வையம் ஆரிருள் மறையப்
 பூணி இன்றிப் பொறிவிசைக் கொளீஇ
 உள்ளிய எல்லை ஓட்டிக் கள்ளமொடு
 ஒடுங்கும் தானமும் கடும்பகல் கரக்கும்
 ஆள்அவி காடும் அருஞ்சுரக் கவலையும்
 கோள்அவிந்து ஒடுங்கிய குமூஉக்குடிப் பதியும்
 வயவர் நாடும் கயவர் கானமும்
 குறும்பும் குன்றமும் அறிந்துமதி கலங்காது
 பகலும் இரவும் அகலப் போக்கி
 இருநூற்று இருபது இரட்டி எல்லையுள்
 அருநூல் அமைச்சன் அயல்புறம் நிறீஇ

 
25




30




35

 நட்புடைத் தோழன் நன்கமைந்து இருந்த
 புட்பக தன்னைப் பொழுதுமறைப் புக்குப்
 புறத்தோர் அறியா மறைப்பமை மாயமொடு
 ஆணி வையம் அரும்பொறி கலக்கி
 மாண வைத்து மகிழ்ந்தனன் கூடி
 மாண்முடி மன்னன் தோள்முதல் வினவிச்
 சிரமம் எல்லாம் செல்இருள் தீர்ந்து
 கருமம் அறியும் கட்டுரை வலித்துத்
 தோழனும் தானும் சூழ்வது துணியா
 வெந்திறல் மிலைச்சர் லிலக்குவனர் காக்கும்
 மந்திர மாடத்து மறைந்தனன் இருந்து

 




40




45

 தன்தொழில் துணியாது தானத்தின் வழீஇக்
 குஞ்சர வேட்டத்துக் கோள்இழுக் குற்ற
 வெஞ்சின வேந்தனை விடுத்தல் வேண்டி
 வஞ்ச இறுதி நெஞ்சுணத் தேற்றி
 உஞ்சைஅம் பெரும்பதி ஒளிக்களம் புக்கு
 மெய்ப்பேய்ப் படிவமொடு பொய்ப்பேய் ஆகிப்
 பல்உயிர் மடிந்த நள்என் யாமத்துக்
 கூற்றுஉறழ் வேழம் குணம்சிதைந்து அழி்யச்
 சீற்ற வெம்புகை செருக்க ஊட்டிக்
 கலக்கிய காலை விலக்குநர்க் காணாது

 




50

 நாவாய் கவிழ்த்த நாய்கன் போல
 ஓவா அவலமொடு காவலன் கலங்கிப்
 பண்ணமை நல்யாழ் இன்னிசைக் கொளீஇஅதன்
 கண்ணயல் கடாத்துக் களிப்பியல் தெருட்டின்
 ஆழித் தடக்கை அற்றம் இல்லென
 வருமொழிக் கட்டுரை முகமன் கூறிநம்
 பெருமகன் தன்உழைப் பிரச்சோ தனன்இம்
 மன்னுயிர் உற்ற நடுக்கம் நீக்குதல்
 இன்இயல் மான்தேர் ஏயற்கு இயல்பென

 
55




60

 உதையண குமரனும் உள்ளம் பிறழ்ந்ததன்
 சிதைவுகொள் சீலம் தெளிந்தனன் கேட்டு
 வீணை எழீஇ வீதியின் நடப்ப
 ஆணை ஆசாற்கு உடியுறை செய்யும்
 மாணி போல மதக்களிறு படியத்
 திருத்தகு மார்வன் எருத்தத்து இவர

 




65




70

 அண்ணல் முதூர் ஆர்ப்பொடு கெழுமி
 மன்னவன் வாழ்க வத்தவன் வாழ்க
 ஒலிகெழு நகரத்து உறுபிணி நீக்கிய
 வலிகெழு தடக்கை வயவன் வாழ்கெனப்
 பூத்தூய் வீதிதோறு ஏத்தினர் எதிர்கொள
 அவந்தி அரசன் உவந்தனன் விரும்பிப்
 பொலிவுடை உரிமையொடு பரிசனம் சூழப்
 புலிமுக மாடம் மலிர ஏறி
 மையல் வேழம் அடக்கிய மன்னனை
 ஆணை கூறாது அருண்மொழி விரவாது
 காணல் உற்றனன் காதல் இதுவெனச்
 சேனை வேந்தன் தானத்து விளிப்ப

 


75

 அறியாப் பாழியும் அறியக் காட்டிக்
 குறியாக் கூற்றத்தைக் கோள்விடுங் கொல்எனச்
 சிறியோர் அஞ்சப் பெரியோர் புகல
 ஆனை ஏற்றம் அறியக் காட்டி
 இருள்தெறு சுடரின் அன்ன இறைவன்முன்
 வருட்டுபு நிறுத்த மன்னனை நோக்கித்

 

80




85




90

 தெருட்டுதற்கு ஆயஇத் தீக்குறி வேழம்
 யாதிற் சிதைந்ததுஅஃது அறிய உரைக்கென
 ஏதில் வேந்தன் காதலின் வினவ
 வேத முதல்வன் விளம்பிய நூல்வழி
 மாதங்கம் என்று மதித்தலிற் பெற்ற
 பெயரது மற்றதன் இயல்புஅறிந்து ஓம்பி
 வெருட்டலும் தெருட்டலும் விடுத்தலும் விலக்கலும்
 பணித்தலும் உயர்த்தலும் தணித்தலும் தாங்கலும்
 தமர்பிறர் என்பது அறியும் திறனும்
 நீலம் உண்ட நூலிழை வண்ணம்
 கொண்டது விடாமைக் குறிப்பொடு கொளுத்தல்
 பண்டியல் தொன்நூல் பாகுஇயல்பு ஆதலின்
 முதற்கண் பிணித்தோர் சிதைப்பில் விடாது
 கொண்டதை இதுஎனச் சண்ட வேந்தற்கு
 எதிர்மொழி கொடீஇக் கதிர்முகம் எடுத்தோன்

 

95




100

 தகைமலர்ப் படலைத் தந்தை தலைத்தாள்
 முகைமலர்க் கோதை முறுவல் செவ்வாய்க்
 கன்னி ஆயத்துப் பொன்அணி சுடர
 வீசுவளிக் கொடியின் விளங்குபு நின்ற
 வாசவ தத்தை மதிமுகத்து ஏற்றிச்
 சிதரரி மழைக்கண் மதர்வை நோக்கம்
 உள்அகத்து ஈர அள்ளல் பட்ட
 போதகம் போலப் போதல் ஆற்றாக்
 காதல் குமரனைக் கருமக் காமத்துக்

 


105

 கணிகை திறவயின் பிணிபிறர்க்கு உணர்த்தி
 இகழ்வொடு பட்ட புகழ்காண் அவையத்து
 மல்லன் மூதூர் மலிபுனல் விழவினுள்
 சில்அரிக் கண்ணியொடு சிறுபிடி ஏற்றிச்
 செயற்படு கருமத்து இயற்கை இற்றென
 இப்பால் இறைமகன் போத்தந்து அப்பால்
 நிகழ்ந்ததை அறிதந்து ஒளித்தனன் ஆகி

 
110




115

 வேறல் செய்கை வேந்தற்கு உண்மை
 தேறன் மாக்களைத் திறவிதின் காட்டிப்
 பழந்தீர் மரவயின் பறவை போலச்
 செழும்பல் யாணர்ச் சேனைபின் ஒழிய
 நம்பதிப் புகுதரக் கங்குல் போத்தந்து
 யான்பின் போந்தனன் இதுவென அவன்வயின்
 ஓங்கிய பெரும்புகழ் யூகி மேநாள்
 பட்ட எல்லாம் பெட்டாங்கு உரைப்பக்

 


120

 கெட்ட காலை விட்டனர் என்னாது  
 நட்டோர் என்பது நாட்டினை நன்றென
 உறுதுணைத் தோழன் மறுமொழி கொடுத்தபின்

 




125

 தன்உரை ஒழித்து நுண்வினை அமைச்சனைப்
 பெயர்ந்த காலைப் பெருமகன்கு இப்பால்
 உயர்ந்த கானத்து உற்றதுஉண்டு எனின்அதூஉம்
 சின்மொழி தாதரைச் சேர்ந்ததற் கொண்டு
 நிலையது நீர்மையும் தலையது தன்மையும்
 உள்விரித்து உரையென ஊகி கேட்ப

 



130




135

 அடலரும் பல்படை இடபகன் உரைக்கும்
 அழகமை மடப்பிடி ஐந்நூறு ஓடி
 அழல்நிலை அத்தத்து அசைந்துஉயிர் வைப்பத்
 தடம்பெருங்கண்ணியொடு நடந்தனர் போந்து
 கடும்பகல் கழிதுணைக் காட்டகத்து ஒடுங்கி
 வெங்கதிர் வீழ்ந்த தண்கதிர் மாலை
 வயந்தகன் என்பால் வரீஇய போதரத்
 தயங்குமலர்த் தாரோன் தனியன் ஆகி
 மாலை யாமம் கழிந்த காலை

 




140

 வெஞ்சொல் வேட்டத்து அஞ்சுவரு சீற்றத்துச்
 சலம்புரி நெஞ்சின் சவரர் புளிஞர்
 கலந்தனர் எழுந்து கானம் தெரிவோர்
 ஊன்என மலர்ந்த வேனில் இலவத்துக்
 கானத்து அகவயின் கரந்தனன் இருந்த
 அரச குமரனை அகப்படுத்து ஆர்ப்ப

 



145




150

 வெருவுறு பிணையின் விம்முவனள் நடுங்கும்
 அஞ்சில் ஓதியை அஞ்சல் ஓம்பென
 நெஞ்சுவலிப் புறுத்து நீக்குவனன் நிறீஇ
 விலக்குஅவண் கொளீஇ வில்லின் வாங்கி
 ஓரோர் கணையின் உராஅய் வந்தவர்
 ஏழேழ் மறவரை வீழ நூறலின்
 ஆழும் நெஞ்சமொடு அச்சம் எய்திப்
 பட்டவர் தந்தமர் பகையின் நெருங்கிக்
 கட்டெரி கொளீஇக் கரந்தனர் எனலும்

 




155

 ஒட்டிய தோழற்கு உற்றதை அறியான்
 பகைஅடு தறுகண் இமைஅகன்று பிறழ
 உரைபெயர்த்துக் கொடாஅன் யூகி மாழ்க
 வரைபுரை மார்பனை வாங்குபு தழீஇக்
 கதுமென உரைத்தது கவன்றனன் ஆகி
 எதிர்மலர்க் குவளை இடுநீர்சொரிந்து
 சீதச் சந்தனம் தாதோடு அப்ப
 ஏஎல் பெற்றெழுந்து இருந்தனன் உரைக்கென

 

160




165

 மாஅல் அன்ன மன்உயிர் காவலன்
 ஆட்டிடைப் பாயும் அரிமாப் போல
 வேட்டிடைப் பாய்தலை வெரீஇ ஓடாப்
 பஞ்சி மெல்அடிப் பரல்வடுப் பொறிப்ப
 வஞ்சி மருங்குல் வாடுபு நுடங்க
 அஞ்சுபு நின்ற பைந்தொடி மாதரைச்
 சிறுவரை நடாஅய்ச் செல்லல் நீங்கக்
 கறுவுகொள் ஆளர் மறுவுவந்து ஓடி
 உறுவுகொள் உரோணியொடு உடனிலை புரிந்த
 மறுவுடை மண்டிலக் கடவுளை வளைத்த
 கரந்துறை ஊர்கோள் கடுப்பத் தோன்றி

 
170




175

 நிரந்தவர் நின்ற பொழுதில் பெயர்ந்து
 குறிவயிற் குறித்தியாம் செல்லு மாத்திரை
 அறிவன் நாடி அரும்பொருள் உண்டென
 விரைமுதல் கட்டிய விரும்பின் இமிழ்ப்பின்
 உரைமுதல் காட்டி உளமை கூறி
 நின்ற பொழுதில் சென்றியாம் தலைப்பெய
 எந்திறம் அறியா ஏதிலன் போல
 வெந்திறல் வேந்தனும் அவரொடு விராஅய்
 ஓடல் ஆற்றான் ஆகி ஒருசிறை
 ஆடமைத் தோளியோடு அகன்றனன் நிற்ப

 
180




185

 வேட்டுவர் அகலக் கூட்டம் எய்திக்
 கரும நுனித்த கடுங்கண் ஆண்மை
 உருமண் ணுவாவின் ஊரகம் புகீஇப்
 போகப் பெருநுகம் பூட்டிய காலை
 மாக விசும்பின் மதியமும் ஞாயிறும்
 எழுதலும் படுதலும் அறியா இன்பமொ(டு)
 ஒழுகுபுனல் அகழினை உடையெனக் கிடந்த
 முழுமதில் நெடுங்கடை முதற்பெரு நகரம்
 தாரணி யானை பரப்பித் தலைநின்(று)
 ஆருணி அரசன் ஆள்வதும் அறியான்

 
190




195




200

 தன்னுயிர் அன்ன தம்பியர் நினையான்
 இன்னுயிர் இடுக்கண் இன்னதென்று அறியான்
 அவையும் கரணமும் அவைவகுத் திருவான்
 அந்தி மந்திரத்து அருநெறி ஒரீஇத்
 தந்தையொடு டொறுக்கப் படாஅன் சிந்தை
 அகன்உணர் வில்லா மகனே போலத்
 தன்மனம் பிறந்த ஒழுக்கினன் ஆகிப்
 பொன்நகர் தழீஇய புதுக்கோப் போலச்
 செல்வியும் கொடாஅன் இவ்வியல் புரிந்தனன்
 அண்ணல் ஆதலின் அசைவிலன் என்னத்
 தன்னமர் தோழன் பன்னினன் உரைப்ப

 




205




210

 வேகந் தணியா வெஞ்சின நெடுவேல்
 யூகந் தராயணன் ஒழிவிலன் கேட்டு
 முறுவல் கொண்ட முகத்தினன் ஆகிப்
 பெறுக போகம் பெருமகன் இனிதென
 அறுவகைச் சமயத்து உறுபொருள் ஒழியாது
 பன்னுபு தெரிந்த பழியறு வாய்மொழித்
 தொன்மு தாட்டியைத் துன்னத் தரீஇத்
 தருமத்து இயற்கையுங் கருமக் கிடக்கையும்
 தலைமையது தன்மையு நிலைமையது நீர்மையும்
 வேறுவேறு ஆகக் கூறுகூறு உணர்த்தி
 இதுவென் வலிப்பென அதுஅவட்கு உணரக்
 கூறுதல் புரிந்த குறிப்பினன் ஆகி

 


215

 அகலா தோரையும் அகல்கென நீக்கி
 உம்மைப் பிறப்பில் கொண்டும் செம்மற்குத்
 தாயோர் ரன்ன தகையினிர் ஆதலின்
 மேயோர்க்கு அல்லது மெய்ப்பொருள் உணர்த்தல்
 ஏதில் பெரும்பொருள் நீதியுள் இன்மையின்
 தெரியக் கேட்கென விரியக் காட்டி

 

220




225

 அற்றங் காத்தலின் ஆண்மை போலவும்
 குற்றம் காத்தலின் குரவர் போலவும்
 ஒன்றி ஒழுகலின் உயிரே போலவும்
 நன்றி யன்றிக் கன்றியது கடிதற்குத்
 தகவில செய்தலின் பகைவர் போலவும்
 இனையன பிறவும் இனியோர்க்கு இயன்ற
 படுகடன் ஆதியில் பட்டது நினையான்

 




230




235

 தொடுகழல் குருசில் வடுவுரை நிற்ப
 இன்ப அளற்றுள் இறங்கினன் ஆதலின்
 துன்பம் துடைத்த தொழிலே போல
 அவலம் ஒழிப்பி அவன்வயின் திசையா
 இகலடு பேரரண் இலாவா ணந்தவன்
 உகந்துண்டு ஆடி மகிழ்ந்தபின் ஒருநாள் 
 வாலிழை மாதரை மன்னவன் அகல்விடைக்
 கோலக் கோயில் கூர்எரிக் கொளீஇப்
 பொய்ந்நில மருங்கில் போத்தந்து என்வயின்
 கண்எனத் தருதல் கடன்எனக்கூறி

 




240




245

 இன்பம் துடைத்தவற்கு இறைக்கடம் பூட்டுதல்
 நிம்கடன் ஆமென நினைந்துநெறி திரியா(து)
 உருப்ப நீள்அதர்க்கு அமைத்துமுன் வைத்த
 தருப்பணம் செருமித் தன்னுயிர் வைத்தனன்
 யூகி என்பது உணரக் கூறி
 நிலங்குறை பட்ட மன்னனை நிறுவுதல்
 புலந்துறை போகிய பொய்இல் வாய்மொழி
 நும்மின் ஆதல் எம்மில் சூழ்ந்த(து) 
 அறியக் கூறினேன் யான்என அவளொடும்
 செறியச் செய்த தெளிவினன் ஆகி

 
 

 உருமண் ணுவாவொடு வயந்தக குமரனைக்
 கருமக் கிடக்கை காண்வரக் காட்டி
 இன்உழி வருகென அன்னவை பிறவும்
 ஒருபொருள் ஒழியாது அவளொடும் சூழ்ந்து

 
250

 மறைப்புஇடன் அமைத்துப் புறத்தோர் முன்னர்
 ஆத்திரைத் தருப்பணம் மாத்திரை கூட்டி
 உண்புழி விக்கிக் கண்புகச் செருமி
 உயிர்ப்பு நீங்கிய உடம்பினன் ஆகிச்
 செயற்கைச் சாக்காடு தெளியக் காட்டத்

 
255




260

 தோழனும் தமரும் சூழ்வனர் குழீஇ
 வாழலம் இனிஎன வஞ்ச இரக்கம்
 பல்லோர் முன்னர்க் கொள்ளக் காட்டிச்
சுடுதற்கு ஒவ்வாச் சூழ்ச்சி அண்ணலைக்
 கடுவினை கழூஉங் கங்கா தீரத்(து)
 இடுதும் உய்த்தென இசைத்தனர் மறைத்துத்

 




265
தவமுது மகளைத் தலைமகன் குறுகி
முகன்அமர்ந்து உரைத்து முன்னையிர் ஆமினென்று
 அகனமர் காதலொடு ஆற்றுளி விடுப்பக்
 காட்டகம் கடந்து காவலன் இருந்த
 நாட்டகம் நணுகி நகரம் புக்கனள்
 தெரிமதி அமைச்சனொடு திறவதின் குழ்ந்த
 அருமதித் திண்கோள் அறம்புரி மகள்என்.