பல்சுவைப் பாடல்கள்

தமிழ் விடு தூது

பாடல் கருத்து
Theme of the Poem


தமிழ் மொழி தாய் போன்றது. தமிழ்த்தாயைச் சிறு குழந்தைகள் வளர்க்கிறார்கள்.

பள்ளிக்கூடம் என்பது சிறுகுழந்தைகள் படிக்கும் இடம். அங்குத் தமிழ்த்தாய் வளர்க்கப் பெறுகிறாள்.

சிறு குழந்தைகள் வீட்டில் இருந்து பள்ளிக்கு வருகிறார்கள். தமிழ் நூல்களைத் துணிப்பையில் எடுத்து வருகின்றனர். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு துணிப்பை வைத்து இருக்கும். தமிழ்த்தாய் தூங்கப் பல துணிப்பைகள் உள்ளன. அவையே தமிழ்த்தாய் தூங்கும் தொட்டில்கள் ஆகும்.

அந்தத் தொட்டில்களை (துணிப்பைகளை) ஒரு கம்பில் (மரத்துண்டு) சிறுகுழந்தைகள் சேர்ப்பர்; கம்பின் ஒரு பகுதியை ஒரு குழந்தை பிடிக்கும். கம்பின் மறுபகுதியை இன்னொரு குழந்தை பிடிக்கும். கம்பில் உள்ள துணிப்பைகளைச் சிறுகுழந்தைகள் ஆடி, அசைந்து, பாட்டுப்பாடிப் பள்ளிக்கூடத்திற்குக் கொண்டுவருவார்கள்.

இவ்வாறு பல தொட்டில்களில் தமிழ்த்தாய் தூங்குகிறாள்.

தூங்கும் தமிழ்த்தாயைக் குழந்தைகள் எழுப்புகிறார்கள்.

அந்தக் காலத்தில் தமிழ்நூல்கள் பனை ஓலைகளில் எழுதப்படும். அவற்றை நீண்டநாள் வைத்து இருக்க மஞ்சள் பூசுவார்கள்.

தமிழ்நாட்டில் பெண்கள் தங்கள் முகம் மீது மஞ்சள் பூசுவார்கள்.

இதுபோல தமிழ்த்தாயை மஞ்சள் பூசிச் சிறு குழந்தைகள் குளிப்பாட்டுகிறார்கள்.

பனை ஓலையில் எழுதப்பட்ட எழுத்துகள் நன்றாகத் தெரிவதற்காக மை பூசுவார்கள். தமிழ்நாட்டுப் பெண்கள் கண்கள் அழகாக இருக்க மை பூசுவார்கள். மையால் பொட்டும் வைப்பார்கள்.

சிறு குழந்தைகள் பனைஓலைக்கு மை பூசுகிறார்கள். இதனால் தமிழ்த்தாய்க்குக் குளித்தபின் 'மை'யால் பொட்டு வைக்கிறார்கள்.

அதன்பின் குழந்தைகள் தமிழ்த் தாய்க்குப் பால் தருகிறார்கள். அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் ஆகிய பால்களைத் தமிழ்த்தாய்க்குத் தருகிறார்கள்.

குழந்தைகளைத் தாய் வளர்ப்பாள், ஆனால் இங்குத் தமிழ்த்தாயைக் குழந்தைகள் வளர்க்கிறார்கள்.