திருக்குறள்
பாடல் கருத்து
Theme of the Poem
திருக்குறள் - புகழ்
(1) வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும். அப்புகழ் அல்லாமல் உயிர்களுக்கு ஊதியமாவது வேறொன்றும் இல்லை.
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து)
ஊதியம் இல்லை உயிர்க்கு.

(2) புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்(று)
ஈவார்மேல் நிற்கும் புகழ்.
(3) உயர்ந்த புகழைத் தவிர உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிற்கவல்லது வேறொன்றும் இல்லை.
ஒன்றா உலகத்(து) உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்(று) இல்.
(4) நிலவுலகில் நெடுங்காலம் நிற்க வல்ல புகழை ஒருவர் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் பெற்றாரைப் போற்றுமே அல்லாமல்) அறிவால் மட்டும் சிறந்தவரைப் போற்றாது.
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.

(5) சங்கு போலத் தம் உடம்பைப் பிறருக்காக அழித்துக் கொள்வதும், புகழுக்குரிய சாவைப் பெறுவதும் அறிவில் சிறந்தவர்களுக்கு அல்லாமல் மற்றவர்களுக்கு அமையாது.
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.

(6) ஒருதுறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும்; அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பது நல்லது.
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
((7) தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழ முடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல், தம்மை இகழ்பவரை நொந்து கொள்வதால் பயன் என்ன? ஒன்றும் இல்லை.
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்
(8) தமக்குப் பின் நிற்பதாகிய புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.
(9) புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றி விடும்.
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.

(10) தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர். புகழ் இல்லாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.
வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.
நடுவுநிலைமை
(1) அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு நடந்து கொண்டால் நடுவு நிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்(டு) ஒழுகப் பெறின்.
(2) நடுவு நிலைமை உடையவனின் செல்வ வளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற்(கு) ஏமாப்(பு) உடைத்து.
(3) தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நிலைமை தவறி உண்டாகும் செல்வத்தை அப்போதே கைவிட வேண்டும்.
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.

(4) நடுவுநிலைமை உடையவர், நடுவு நிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பிறகு எஞ்சி நிற்கும் புகழாலும், பழியாலும் காணப்படும்.
தக்கார் தகவிலர் என்ப(து) அவரவர்
எச்சத்தால் காணப் படும்.
(5) கேடும் (தாழ்வும்), ஆக்கமும் (உயர்வும்) வாழ்வில் இல்லாதவை அல்ல. ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
(6) தன் நெஞ்சம் நடுவு நிலைமை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின் ‘நான் கெடப் போகிறேன்’ என்று ஒருவன் அறிய வேண்டும்.
கெடுவல்யான் என்ப(து) அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின்.
((7) நடுவு நிலையாக நின்று அறநெறியில் நிலைத்து வாழ்கின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என்று உலகம் ஏற்றுக் கொள்ளாது.
கெடுவாக வையா(து) உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
(8) சமமாக இருந்து பொருளின் சரியான எடையைக் காட்டும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாகச் சாயாமல் நடுவு நிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.
(9) உள்ளத்தில் கோணல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.
(10) பிறர் பொருளையும் தம் பொருள்போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும்.
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோற் செயின்.