தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிரம்மகிரகடீஸ்வரர் கோவில் - திருக்கண்டியூர்

 • பிரம்மகிரகடீஸ்வரர் கோவில் - திருக்கண்டியூர்

  சோழநாட்டு (தென்கரை)த் தலம்

  தஞ்சை - திருவையாறு பேருந்துச் சாலையில் உள்ளது. தஞ்சையிலிருந்து 9 கி.மீ. தொலைவு. திருவையாற்றிலிருந்து 3 கி.மீ. தொலைவு. பேருந்து வசதி உள்ளது. அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்று. பிரமன் சிரத்தைத் (ஐந்தனுள் ஒன்றை) தம் சூலத்தால் கண்டனம் செய்த (கொய்த) காரணத்தால் கண்டனபுரம் - கண்டியூர் எனப் பெயர் பெற்றது. சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்றாகும்.

  “சாதாதாப”முனிவருக்காக இறைவனால் வில்வமரம் கயிலையிலிருந்து கொண்டு வரப்பட்டதால் இத்தலத்திற்கு ‘ஆதிவில்வாரண்யம்’ என்றும் பெயர். இம்முனிவர் பிரதோஷத்தில் காளத்தி சென்று தரிசனம் செய்து வந்தார். ஒருமுறை கண்டியூர் வந்தபோது, காளத்திக்கு, நேரத்தில் செல்ல முடியாமற்போயிற்று. அப்போது இறைவன், அவருக்குக் காளத்தி தரிசனத்தை இத்தலத்திலேயே காட்டியருளினார் என்பது வரலாறு. பிரமகத்தி தோலும் நீங்கும் தலமாகவும் சொல்லப்படுகிறது. சூரியன் வழிபட்டதலம் இது. ஆதலின், மாசிமாதம் 13, 14, 15 ஆம் நாள்களில் மாலையில் 5 - 45 மணிமுதல் 6, 10 மணிவரை சூரிய ஒளி சுவாமிமீது படுகின்றது. அருணகிரி நாதர் பாடல் பெற்றது.

  இறைவன்
  -
  பிரமசிரக் கண்டீஸ்வரர், வீரட்டேஸ்வரர்,
  பிரமநாதர், ஆதிவில்வவனநாதர்.
  இறைவி
  -
  மங்கள நாயகி
  தலமரம்
  -
  வில்வம்
  தீர்த்தம்
  -
  நந்திதீர்த்தம், தக்ஷதீர்த்தம், பிரமதீர்த்தம்,
  குடமுருட்டியாறு முதலியன.

  சம்பந்தர், அப்பர் பாடிய சிறப்புடைய தலம்.

  பெரிய ஊர். மேற்கு நோக்கி கோயில். ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சிதருகின்றது. கவசமிட்ட கொடிமரம் - நந்தி, பலிபீடங்கள் உள்ளன. கொடிமர விநாயகர் காட்சி தருகின்றார். இடப்பால் தண்டபாணி சந்நிதி தனிக்கோயிலாக மண்டபத்துடன் உள்ளது. இம்மண்டபம் வௌவால் நெத்தி மண்டப அமைப்புடையது. சப்தஸ்தானத் திருவிழாவில் (ஏழூர் திருவிழாவில்) சுவாமி இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும். சுவாமி இங்கு வந்து இறங்கி, (ஐந்தாவது தலமாக) சற்று இளைப்பாறிச் செல்லும். சிலாத முனிவருக்கும், சாதாதாப முனிவர் தமையனாராதலின், இளைப்பாறிச் செல்லும்போது மூத்தமாமனார் என்ற வகையில் கட்டிச் சோறு கட்டித் தரும் ஐதீகமாக அன்று (தயிர்சாதம், புளியோதரை) - கட்டித் தந்து சுவாமியுடன் அனுப்புவது மரபாக இருந்து வருகின்றது.

  அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம். அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள். பெயருக்கேற்ற மங்களப் பொலிவு. வலப்பால் விநாயகர், உள்வாயில் கடந்ததும் இடப்பால் வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியர் தரிசனம். அடுத்து மகாலட்சுமி சந்நிதி. எதிரில் நடராசசபை உள்ளது. வலமாக வரும்போது விஷ்ணுதுர்க்கை சந்நிதி உள்ளது. பைரவரும், பலவகை விநாயகர்களும், (வெவ்வேறு வகை மூர்த்தங்கள்) சூரியனும் அமர்ந்த கோலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரரும் அடுத்தடுத்துக் காட்சி தருகின்றனர்.

  சண்டேஸ்வரர் சந்நிதி தனிக் கோயிலாகவுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக பிரமன், லிங்கோற்பவர், தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர் மூர்த்தங்கள் உள.

  உள்வலம் முடித்து, துவாரபாலகர்களை வணங்கி உட்சென்றால் இடப்பால் நவக்கிரகங்கள் உள்ளன. துவாரபாலகர்களுக்குப் பக்கத்தில் சாதாதாப முனிவர் உருவம் உள்ளது. சப்தஸ்தானலிங்கங்கள், பஞ்ச பூதலிங்கங்கள், சாதாதாபருக்குக் காட்சி தந்த காளத்தி நாதர் சந்நிதி முதலியவைகள்     உள்ளன. நவக்கிரகங்களில் சூரியன் இரு மனைவியருடன் காட்சி தருகின்றார். மூலவர் தரிசனம். மூலவர் சுயம்பு. துவாரகணபதியும் சுப்பிரமணியரும் உள்ளனர். மூலவர் பாணம் சற்று உயரமாகவுள்ளது. சுவாமி சந்நிதிக்குப் பக்கத்தில் பிரமன், சரஸ்வதி சிலாரூபம் உள்ளன. பிரமனின் நான்கு முகங்களும் அழகாகவுள்ளன. பூ, ஜபமாலை ஏந்தி, இருகைகளும் பிரார்த்திக்கும் அமைப்பில், அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள இவ்வுருவம் (பிரமன்) அழகுடையது. பிரமன் சிரம்கொய்த பின், அவன் வேண்டிட ஐம்முகங்களின் அழகினை சதுர்முகங்களில் (நான்கு முகங்களில்) இறைவன் அருளிச் செய்ய, பிரமன் பெற்றுப் பயனடைந்ததாக வரலாறு.

  பிரமன் சிரம் கொய்வதற்காக இறைவன் மேற்கொண்ட வடுகக் கோலம். சுவாமி சந்நிதிக்கு எதிரில், இடப்பால், பிரமன் சந்நிதிக்குச் செல்லும் வாயிலில் சுவரையொட்டிக் கதவோரமாகச் சிறிய சிலா ரூபமாகவுள்ளது. நவக்கிரக சந்நிதியில் தீபமேற்றி வழிபடுவதற்காகத் தீபங்கள் வைக்கும் அமைப்பில் மேடை அமைத்துக் கட்டப்படுள்ளது. நாடொறும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

  சித்திரை மாதத்தில் ஏழூர் திருவிழா நடைபெறுகின்றது. வைகாசி விசாகத்தில் பதின்மூன்று நாள்களுக்குப் பெருவிழா நடைபெறுகிறது. கல்வெட்டில், இப்பெருமான் பெயர், ‘திருவீரட்டானத்து மகாதேவர்’, ‘திருக்கண்டியூர் உடைய மகாதேவர்’ எனக் குறிக்கப் பெறுகின்றது.

  “அடியராயினீர் சொல்லுமின்னறி கின்றிலேன் அரன் செய்கையைப்
  படியெலாந் தொழு தேத்து கண்டியூர் வீரட்டத்துறை பான்மையான்
  முடிவுமாய் முதலாயிவ் வையமுழுதுமாய் அழகாயதோர்
  பொடியதார் திருமார்பினிற்புரி நூலும் பூண்டெழு பொற்பதே.”
                                                               (சம்பந்தர்)

  “வானவர் தானவர் வைகன் மலர் கொணர்ந் திட்டிறைஞ்சித்
  தானவர் மால் பிரமன்னறியாத தகைமையினான்
  ஆனவனாதி புராணன் அன்றோடியப் பன்றி யெய்த
  கானவனைக் கண்டியூர் அண்டவாணர் தொழுகின்றதே”  (அப்பர்)
                                                         -“காந்தருவத்

  தண்டியூர் போற்றுந் தகைகாசிக்கட் செய்து
  கண்டியூர் வாழும் களைகண்ணே.”                       (அருட்பா)


  அஞ்சல் முகவரி :-
  அ/மி. பிரமசிரக் கண்டீஸ்வரர் திருக்கோயில்
  திருக்கண்டியூர் - அஞ்சல் 613 202
  (வழி) திருவையாறு - தஞ்சை மாவட்டம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-08-2017 12:32:41(இந்திய நேரம்)