தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தியாகேசர் கோவில் - திருவாரூர்

  • தியாகேசர் கோவில் - திருவாரூர்


    சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

    மயிலாடுதுறை, சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சி, காரைக்கால் முதலிய ஊர்களிலிருந்து பேருந்துகள் நிரம்பவுள்ளன. இருப்புப் பாதை நிலையம். இத்தலத்தின் வடபால் சுக்கனாறும், தென்பால் ஓடம் போக்கியாறும் ஓடுகின்றன.

    “பிறக்க முத்தி திருவாரூர்” என்று புகழப்படும் சிறப்பினது. மூலாதாரத்தலம். ‘திருவாரூர்த்தேர் அழகு.’ பஞ்சபூதத்தலங்களுள் பிருதிவித்தலம். எல்லாச் சிவாலயங்களின் சந்நிதித்தியமும் சாயரக்ஷை எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம். சுந்தரர், திருத்தொண்டத் தொகையைப் பாடுவதற்கு, அடியார்களின் பெருமைகளை விளக்கிய பெருமை இப்பதிக்கேயுரியது. பரவையார் அவதரித்த பதி. ‘கமலை’ என்னும் பராசக்தி தவம் செய்யுமிடம். திருமகள் இராமர் மன்மதன் முதலியோர் வழிபட்ட பதி. முசுகுந்த சோழன் ஆட்சி செய்த சீர்மையுடையது. இத்தலத்திற்குரிய வேறுபெயர்கள் :- (1) க்ஷேத்ரவரபுரம் (2) ஆடகேசுரபுரம் (3) தேவயாகபுரம் (4) முசுகுந்தபுரம் (5) கலிசெலா நகரம் (6) அந்தரகேசுபுரம் (7) வன்மீகநாதபுரம் (8) தேவாசிரியபுரம் (9) சமற்காரபுரம் (10) மூலாதாரபுரம் (11) கமலாலயபுரம் என்பன.

    தியாகராஜா பெருஞ்சிறப்புடன் அஜபா நடன மூர்த்தியாகத் திகழும் தலம். செல்வத்தியாகேசர், மனுச்சோழனுக்கு அருள்செய்த பெரும் பதி. இவ்வரலாற்றைப் பெரிய புராணத்தின் வாயிலாக அறியலாம். இத்தியாகேசப் பெருமானே சோமாசிமாற நாயனாரின் வேள்விக்கு எழுந்தருளி அவிர்ப்பாகம் ஏற்றார் என்னும் வரலாற்றை திருமாகாளத் தலபுராணத்தால் அறிகிறோம். திருவாரூரில் பாடல் பெற்ற தலங்களுள் மூன்று, அவை :- (1) திருவாரூர் (2) ஆரூர் அரநெறி (3) ஆரூர்ப்பரவையுள் மண்டளி என்பன.

    திருவாரூர்க் கோயில் - தியாகராஜா கோயில், திருமூலட்டானம், பூங்கோயில் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுவது. ஆரூர் அரநெறி என்னும் கோயில் திருவாரூர்க் கோயிலுக்குள்ளேயே தெற்குச் சுற்றில் உள்ளது. கீழவீதியில் தேரடியில் உள்ளது ஆரூர்ப்பரவையுள் மண்டளியாகும். (1) தண்டியடிகள் (2) கழற்சிங்கர் (3) செருத்துணையார் (4) விறன் மிண்டர் (5) நமிநந்தியடிகள் முதலிய நாயன்மார்களுடைய திருத்தொண்டுகள் பரிமளித்த பதி இதுவே. கமலை ஞானப்பிரகாசரும் இங்கிருந்தவரே. இத்தலத்தில் பெருஞ்சிறப்பு தியாகேசருக்குத்தான்.

    இவருக்கு வீதிவிடங்கர், தேவரகண்டப்பெருமான் தியாகப் பெருமான், ஆடரவக்கிண்கிணிக்காலழகர், செங்கழுநீரழகர், செவ்வந்தித்தோடகர், கம்பிக்காதழகர், தியாகவிநோதர், கருணாகரத் தொண்டைமான், அசைந்தாடும் அப்பர், அடிக்காயிரம் பொன் வழங்கியவர், கமலேசர், செம்பொன் தியாகர், தேவசிந்தாமணி, தியாகசிந்தாமணி முதலாக அறுபதுக்கு மேற்பட்ட பெயர்கள் (தியாகராஜாவுக்குச்) சொல்லப்பட்டுள்ளன.

    இப்பெருமானுக்குரிய அங்கப்பொருள்களாவன :-

    1. ஆடுதண்டு - மணித்தண்டு
    2. கொடி - தியாகக்கொடி
    3. ஆசனம் - இரத்தின சிம்மாசனம்
    4. மாலை - செங்கழுநீர்மாலை
    5. வாள் - வீரகண்டயம்
    6. நடனம் - அஜபா நடனம்
    7. யானை - ஐராவணம்
    8. மலை - அரதன சிருங்கம்
    9. முரசு - பஞ்சமுக வாத்தியம்
    10. நாதஸ்வரம் - பாரி
    11. மத்தளம் - சுத்தமத்தளம்
    12. குதிரை - வேதம்
    13. நாடு - சோழநாடு
    14. ஊர் - திருவாரூர்
    15. ஆறு - காவிரி
    16. பண் - பதினெண்வகைப்பண் - என்பன.

    சாயரட்சை பூஜையின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதிகமாதலால் அர்ச்சகர் நீண்ட அங்கி, தலைப்பாகை அணிந்துதான் எதிரில் நின்று பூசை செய்கின்றார். சப்த விடங்கத்தலங்களுள் ஒன்று. மற்றையவை (1) நாகைக்காரோணம் (2) திருநள்ளாறு (3) திருமறைக்காடு (4) திருக்காறாயில் (5) திருவாய்மூர் (6) திருக்கோளிலி என்பன.

    “சீரார் திருவாரூர் தென்நாகை நள்ளாறு
    காரார் மறைக்காடு காறாயில் - பேரான
    ஒத்த திருவாய்மூர் உவந்த திருக்கோளிலி
    சத்த விடங்கத் தலம்” - என்பது பழம் பாடல்.

    திருவாரூர்க் கோயிலுக்குள் சென்றுவிட்டால் ஏராளமான சந்நிதிகள் இருப்பதால், குவித்த கரங்களை - விரிப்பதற்கு வழியேயில்லையெனலாம். இதையே மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் “குவித்தகரம் விரித்தல் செலாக் கோயில்களும் பல உளவால்” என்று தம் வாக்கால் புகழ்ந்து பாடுகின்றார்.

    இறைவன்
    -
    வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார்.
    இறைவி
    -
    கமலாம்பிகை, அல்லியங்கோதை, நீலோத் பலாம்பாள்.
    தலமரம்
    -
    பாதிரி.
    தீர்த்தம்
    -
    1)
    கமலாலயம் (5 வேலிப் பரப்புடையது, தேவ தீர்த்தம் எனப்படுகிறது).
     
    (கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கும் பழமொழி) கமலாலயம் 64 கட்டங்களை உடையது. மாற்றுரைத்த விநாயகர் சந்நிதி மேலைக் கோபுரத்தின் எதிரில் குளக்கரையில் உள்ளது.)
    2)
    சங்கு தீர்த்தம் - ஆயிரக்கால் மண்டபத்தின் அருகிலுள்ளது. அமுததீர்த்தம் என்றும் பெயர்.
    3)
    கயாதீர்த்தம் - ஊருக்கு அப்பால் கேக்கரை என்று வழங்கும் இடத்தில் உள்ளது.
    4)
    வாணிதீர்த்தம் - (சரஸ்வதி தீர்த்தம்) மேற்குப் பெரிய பிராகாரத்தில் சித்திரசபை மண்டபத்திற்கு எதிரில் உள்ளது.

    இது தவிர ‘செங்கழுநீர் ஓடை’ எனப்படும் ஓரோடை கோயிலுக்கு அப்பால் 1 கி.மீ. தொலைவில் உள்ளது.

    மூவர் பாடல் பெற்றது.

    கோயில் நாற்புறமும் உயர்ந்த மதில்களுடன் - கோபுரங்களுடன் விளங்குகிறது. கீழ்க்கோபுரம் 118 அடி உயரமுள்ளது. மொத்தம் வீதிப் பிராகாரங்களையும் சேர்த்து ஐந்து பிராகாரங்கள், கிழக்குக் கோபுர வாயில் வழியாகச் செல்வோம். விநாயகர் முருகன் கோயில்கள் இருபுறமும் உள்ளே நுழைந்தால் வீதிவிடங்க விநாயகர் தரிசனம். பின்னால் பிரமநந்தி எழுந்தருளியுள்ளார். மழை வேண்டின் இப்பெருமானுக்கு நீர் கட்டுவதும், பசுக்கள் பால் கறக்க உதைத்தால் நன்கு கறக்க இவர்க்கு அறுகுசாத்தி அதைப் பசுக்களுக்குத் தருதலும் இன்றும் மக்களிடையேயுள்ள நம்பிக்கையும் பழக்கமுமாகும். அடுத்து பெரிய பிராகாரத்தில் வலமாக வந்தால் பக்தகாட்சி மண்டபம் (பங்குனி உத்திர விழா முடிந்து நடனக்கோலத்தில் தியாகராசர் எழுந்தருளுமிடம்) ; ஊஞ்சல் மண்டபம் (சந்திரசேகரின் ஊஞ்சல் உற்சவம் நடக்குமிடம்) காணலாம். அடுத்து ஆகாசவிநாயகர், துலாபார மண்டபம், சரஸ்வதி தீர்த்தம் முதலியவை உள்ளன.

    அடுத்துள்ளது சித்திரசபாமண்டபம் - பெரியது. இதன் பக்கத்தில் கோயில் ஓரமாகவிருப்பது சிறியது - புராணமண்டபம். அடுத்துக் கமலாம்பாள் சந்நிதி. பராசக்தி பீடங்களுள் ஒன்று. அம்பிகை தவக்கோலத்தில் தரிசனம் தருகின்றாள். ஆடிப்பூர விழா இச்சந்நிதியில் விசேஷம். பக்கத்தில் உச்சிட்ட பிள்ளையார் உள்ளார்.

    மகாமண்டபம் தாண்டி உட் சென்றால் கமலாம்பிகை தரிசனம். நான்கு கரங்களுடன் (தாமரை, பாசம், அக்கமாலை, அமைந்தநிலை) யோகாசனத்தில் காட்சி தருகிறாள்.

    அம்பாள் கோயிலின் மேற்கு மூலையில் அக்ஷரபீடமுள்ளது. இதில் பீடமும் ஐம்பத்தோரு எழுத்துக்கள் எழுதப்பெற்ற திருவாசியுமே உள்ளன. நின்று தியானித்துச் செல்லவேண்டும். அடுத்தாற்போல் சண்முகர், பாலசுப்பிரமணியர், கலைமகள், மகரிஷிகள் வழிபட்ட லிங்கங்கள் - சந்நிதிகள் உள்ளன.

    வெளிவந்தால் எதிரில் பார்ப்பதீச்சரம். இங்குள்ள தீர்த்தக் கிணறு ‘முத்திக்கிணறு’ எனப்படும். இதை மக்கள் உருமாற்றி ‘மூக்குத்திக் கிணறு’ என்றழைக்கிறார்கள். ஒட்டுத்தியாகர் கோயில் உள்ளது. சுந்தரரைக் கோயிலுள் போகாதவாறு விறன் மிண்டர் தடுக்க, இறைவன் இங்கு வந்து சுந்தரரை ஆட்கொண்டார் என்பர். “ஒட்டி ஆட்கொண்டு போய் ஒளித்திட்ட” என்னும் சுந்தரர் வாக்கு இங்கு எண்ணத்தக்கது. அடுத்துள்ளது, தேவாசிரியம் எனப்படும் ஆயிரக்கால் மண்டபம். செல்வத்தியாகர் ஆழித்தேர் விழா முடிந்து இம்மண்டபத்தில்தான் வந்து மகாபிஷேகம் கொண்டு-செங்கோல் செலுத்துவார். அதனால் இஃது ராஜதானி மண்டபம் என்று வழங்கப்படும்.

    “தேவாசிரியன் எனும் திருக்காவணம்” என்னும் சேக்கிழார் வாக்குக்கேற்ப இம்மண்டபத்தின் முன்னால் பந்தலிட பலகால்கள் நடப்பெற்றுள்ளமையைக் காணலாம். அடுத்துள்ள தீர்த்தம் - சங்க தீர்த்தம். இதில் இறங்கிக் கைகால் சுத்திசெய்து கொண்டு, ஆரியன் கோபுரம் வழியாக உட்செல்ல வேண்டும்.

    கோபுர வாயிலில் இடப்பால் விறன்மிண்டர் காட்சி தருகிறார். இவரை வணங்கி வாயிலைக் கடந்து சென்றால் - இந்திரன் கொடி மரமும், ராஜநாராயண மண்டபமும் வரும். பங்குனி உத்திர விழா இறுதியில் பெருமான் இம்மண்டபத்தில் எண்ணெய்க் காப்பு கொள்வாராதலால் இதற்கு எண்ணெய்க் காப்பு மண்டபம் என்று பெயர். ராஜநாராயண சோழன் கட்டியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-12-2017 12:57:24(இந்திய நேரம்)