தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Cultural Gallery - -

  • தாடாளன் கோவில் - திருக்காழிச்சீராம விண்ணகரம்

    நான்முகன் நாள் மிகைத்தருக்கை இருக்கு வாய்மை
        நலமிகுசீர் உரோமசனால் நவிற்றி - நக்கன்
    ஊன்முகமார் தலையோட்டூண் ஒழித்த எந்தை
        ஒளிமலர்ச் சேவடியணைவீர் உழுசேயோடச்
    சூல்முகமார் வளையனைவாய் உகுத்த முத்தைத்
        தொல் குருகு சினையென்னச் சூழ்ந்தியங்க - எங்கும்
    தேன்முகமார் கமலவயல் சேல் பாய் காழிச்
        சீராம விண்ணகரே சேர்மினீரே
                 (1179) பெரியதிருமொழி 3-4-2

    என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட காழிச்சீ ராம விண்ணகரம்
    இன்றைய தினத்தில் சீர்காழி என்ற பெயர் தாங்கி சிறந்த நகரமாக
    விளங்குகிறது     (மயிலாடுதுறையிலிருந்து     சிதம்பரம் செல்லும்
    நெடுஞ்சாலையில்     மிகச் சிறந்த நகரமாய்     விளங்குகிறது)
    சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் பேருந்துகள் இக்கோவிலின்
    வாயிலிலேயே செல்கின்றது. சீர்காழி புகைவண்டி நிலையத்திலிருந்து
    சுமார் 4 பர்லாங் தூரத்தில் உள்ளது.

    இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணம் உட்பட பல
    புராணங்களிலும் பேசப்பட்டுள்ளது.

    இத்தலம் இருந்த பகுதிக்கு பாடலீக வனம் என்றும், சேத்திரத்திற்கு
    “உத்தம ஷேத்திரம்” என்றும் உரோமசர் என்னும் மகாமுனிவர் இங்கு
    தவமியற்றியதாகவும், முனிவரின் வேண்டுகோளுக்கு இசைந்து
    எம்பெருமான்     அவருக்கு     திரிவிக்ரம     அவதாரத்தைக்
    காட்டியருளியதாகவும் இத்தல வரலாறு பேசப்படுகிறது.

    பிரம்மனுக்குத் தன் ஆயுளைப்பற்றிக் கர்வம் இருந்ததாகவும்
    அதனை அடக்க உரோமசர் என்னும் முனிவர் மகா விஷ்ணுவைக்
    குறித்து கடுந்தவம் இருக்கலானார். உரோமச முனிவரின் தவத்தை
    மெச்சிய மஹாவிஷ்ணு உன் உடம்பில் உள்ள (தலையில் உள்ள) ஒரு
    உரோமம் உதிர்ந்தால் பிரம்மனின் ஆயுளில் ஒருவருடம் குறையும்
    என்று கூறி இன்னும் யாதுவேண்டுமென்று கேட்க எம்பெருமான் எடுத்த
    திரிவிக்ரம அதாரத்தை இவ்விடத்தே எனக்கு காட்டியருள
    வேண்டுமென்று வேண்ட அவ்வண்ணமே எம்பெருமான் தனது
    இடதுகாலைத் தூக்கி திரிவிக்ரம கோலத்தில் நின்றருளியதாக புராண
    வரலாறு இவ்விதம் வரம் பெற்ற உரோமச முனிவர் பிரம்மனைநோக்கி
    “உன் ஆயுளும் என் ஒரு ரோமும் சரி” என்று கூறி அவனது
    கர்வத்தை அடக்கியதாகவும் கூறுவர். இக்கதைக் கருத்து தலைப்பில்
    கொடுத்துள்ள திருமங்கையின் பாசுரத்திலும் பொதிந்துள்ளதைக்
    காணலாம்.

    புராணமும்,
    பாடலீக வனம் நாம
        ஷேத்ர நாம உத்தமஷேத்ரா
    ரோமஸ்ய மஹாத்ம நகரி
        .....................................................
    த்ரி விக்ரம முகம் வந்தே
        ஸதா ஸர்வாங்கம் சுந்தரம்
    என்று விவரித்துப் பேசும், இதன் எல்லைகளைக் கூட,
    உதகே பச்சிம பாகே
        காவிரி யாற்ச உத்ரதடே
    பூர்வேஸ்ய உத்ர ரங்கஸ்யே
        நூபுராயஸ்த தக்ஷ்ணே

    (உதகே - கடல், பச்சிம், மேற்கு, உத்ர - வடக்கு, பூர்வ - கிழக்கு)
    பாடலிக வனம் முடியும் இடத்தே மேற்கு எல்லை கடல் காவிரிக்கு
    வடக்கு, நூபுர கங்கையென்னும் கொள்ளிடத்திற்குத் தெற்கு,
    உத்திரரங்கம் என்னும் கோயிலுக்கு கிழக்கு என்று இதன்
    எல்லைகளையும் கோடிட்டு காட்டுகிறது.

    திரி விக்ரம அவதாரம் எடுத்து, தன் தாள்களால் உலகம்
    அளந்தமையால் இப்பெருமாளுக்கு தாள் + ஆளன் - தாளாளன் -
    தாடாளன் என்பதே திருநாமமாயிற்று. தாடாளப் பெருமானை வைத்து
    திரேதாயுகத்தில் கட்டப்பட்டிருந்த     கோவில்     இப்போதுள்ள
    இடத்தைவிட்டு சற்று தொலைவில் இருந்ததாகவும், அக்கோவில்
    வெள்ளப்பெருக்கால் சிதைபாடுற்ற பின்னே அதே பெருமாளை
    பிரதிட்டை செய்து     இப்போதுள்ள     இடத்தில்     இத்தலம்
    எழுப்பப்பட்டதென்பர். ஆயினும் இக்கோவிலும் பழங்காலத்தே எந்த
    மன்னரால் அல்லது யாரால் கட்டப்பட்ட தென்று அறியுமாறில்லை.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:13:51(இந்திய நேரம்)