தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Cultural Gallery - -

 • பரமபரநாதன் கோவில் - திருப்பரமேச்சுரவிண்ணகரம்

  சொல்லுவன் சொற்பொருள் தானவையாய்ச் சுவை
      யூறாலி நாற்றமும் தோற்றமுமாய்
  நல்லரன் நான்முகன் நாரண னுக்கிடந்த
      தான் கடஞ் சூழ்ந்த ழகாய கச்சி
  பல்லவன் வில்லவ னென்று லகில் பல
      ராயாப் பல வேந்தர் வணங்கு கழல்
  பல்லவன், மல்லையர் கோள் பணிந்த பர
      மேச்சுர விண்ணகர மதுவே (1128)
              -பெரியதிருமொழி 2-9-1

  என்று திருமங்கையாழ்வாரால் பாடிப் பரவசிக்கப்பட்ட இத்தலம்
  பெரிய காஞ்சிபுரத்தில், காஞ்சிபுரம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 3
  பர்லாங் தூரத்தில் உள்ளது.

  இத்தலத்தைப்     பற்றிக் குறிப்பாக எந்தப்     புராணத்தில்
  சொல்லப்பட்டுள்ளது என்பது அறியுமாறில்லை. ஆனால் புராண
  காலத்தில் இத்தலம் ஸர்ப்பச் சேஷத்ரம் என அழைக்கப்பட்டதாகவும்,
  இங்கு எழுந்தருளியிருந்த பிரான் பரமபத நாதன் என்று
  ஆராதிக்கப்பட்டதாகவும் அறியமுடிகிறது.

  விதர்ப்ப நாட்டு மன்னன் புத்ர சந்ததி வேண்டி காஞ்சியில் உள்ள
  கைலாச நாதனை வணங்க விஷ்ணுவின் துவார பாலகர்கள் இருவரும்
  பல்லவன், வில்லவன் என்ற பெயர் கொண்டு பிறந்ததாகவும்,
  அவ்விருவரும் மஹா விஷ்ணுவைக் குறித்து இக்கோவிலின் வாயு
  மூலையில் அஸ்வமேத யாகம் செய்ய மஹாவிஷ்ணு ஸ்ரீ
  வைகுண்டநாதனாக வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி கொடுத்து
  அதே நிலையிலிருந்து இன்றும் பக்தர்கட்கு அருளுவதாக ஐதீஹம்.

  ஒரு காலத்தில் இக்கோயில் காசி யாத்திரை செல்வோர் தங்கிச்
  செல்லும் மடமாக இருந்தது. மிகச் சிறிய அளவினதாக இருந்த இத்தலம்
  பல்லவ மன்னன் முதலாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி. 669)
  காலத்தில்தான் இன்றுள்ள நிலையில் 3 அடுக்குகளாக கட்டப்பட்டது.

  பரமேஸ்வரவர்மன் பிறப்புக்கும் இத்தலத்திற்கும் உண்டான
  தொடர்பு கீழ்வருமாறு பேசப்படுகிறது.

  ஒரு சமயம் பரத்வாஜ முனிவர் பெரும் தவமியற்றிக் கொண்டிருக்கும்
  போது அவரின் தவத்தைக் கெடுக்க வந்த காந்தர்வக் கன்னியின்பால்
  மோகம் கொண்டு அவளை ஆலிங்கனம் செய்ய அவ்வளவிலேயே ஒரு
  ஆண் மகவு உண்டாக இக்குழவியை என்ன செய்வதென்று பிரம்மன்
  சிந்தனையில் மூழ்க அதற்கு மஹாவிஷ்ணுவும் சிவபெருமானும்
  இக்குழந்தையின் வளர்ச்சி குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
  நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்லி, மஹாவிஷ்ணுவும்
  லட்சுமியும் வேடர் உருக்கொண்டு அக்குழந்தைக்கு உயிர்
  கொடுக்கலாயினர்.

  இஃதிவ்வாறிருந்த சமயத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தின் வம்ச வீழ்ச்சி
  ஏற்படவே, தங்கள் குலம் தழைக்க நல்ல வாரிசு வேண்டுமென
  இப்பெருமாளைத்     துதித்துவிட்டு     திரும்பும்போது வேடன்
  உருக்கொண்டிருந்த எம்பெருமானால் இம்மகவு அவர்களின் கையில்
  தரப்பட்டது. பிரம்மனாலும் விஷ்ணுவாலும் வளர்க்கும் பொறுப்பு
  உண்டானதால் பரமேஸ்வரன் என்று பெயரிட்டதாகவும் ஒரு கதை
  உண்டு.

  இதை நினைவு படுத்தும் முகமாக பரமேஸ்வரன் இக்கோவிலுக்கு 18
  யானைகளைக் கொடுத்திருந்ததாகவும் கூறுவர். யானைப்பாலை உண்டு
  வளர்ந்த அவன் மிக்க பராக்கிரமசாலியாகவும், பலசாலியாகவும்
  விளங்கினான்.

  பல்லவர்கள் யார் என்பதை ஆராயப் புகுந்த வரலாற்று அறிஞர்கள்
  பல்லவர்களின் வம்ச வழியை அடையாளம் காணுமிடத்து பரத்வாஜ
  கோத்ரம் என்றவொரு பிறப்புரிமையைக் காட்டுவதும் இங்கு உற்று
  நோக்கத் தக்கதாகும்.

  பரமேஸ்வர வர்மனுக்கு இப்பெருமான் 18 கலைகளை
  போதித்ததாகவும், அவைகளைச் சொல்வதற்காக எழுந்த நிலையில்
  நின்ற திருக்கோலத்திலும், சீடனுக்கு உபதேசித்தருள குருவாக
  அமர்ந்த திருக்கோலத்திலும், அவனுக்கு சேவை சாதிக்க கிடந்த
  திருக்கோலத்திலும் இருந்ததாகக் கூறுவர்.

  இதனை நினைவுகூறும். முகத்தான்தான் பரமேஸ்வரவர்மன்
  இன்றுள்ள நிலையில் 3 அடுக்குகளாகக் கட்டி முதல் அடுக்கில் (கீழ்
  அடுக்கில்) பெருமாள் வீற்றிருந்த நிலையிலும், இரண்டாவது தளத்தில்
  ரங்கநாதனாகச் சயன திருக்கோலத்திலும், மூன்றாவது தளத்தில் நின்ற
  திருக்கோலத்திலும் எம்பெருமானை எழுந்தருளச் செய்தார்.

  மூன்றாவது அடுக்கில் நின்ற திருக்கோலத்தில் அமைக்கப்பட்ட
  சிலை ஒரு சமயம் மழையின் போது உண்டான பேரிடியின் காரணமாகச்
  சிதலமடைய பிறகு அவ்விடத்தில் சுதையால் செய்யப்பட்ட சிலை
  வைக்கப்பட்டது.     (இந்நிகழ்ச்சி     நடைபெற்றதும் பல்லவர்கள்
  காலத்திலேதான்) இது தவிர மற்ற இரண்டு தளத்திலும் உள்ள சிலைகள்
  கற்களில் வடிக்கப்பட்டவையாகும்.

  ஸ்ரீ வைகுண்டமென்னும் பரமபதத்தில் உள்ள விரஜா நதியே இங்கு
  புஷ்கரணியாக அமைந்துள்ளதாக ஐதீஹம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:34:37(இந்திய நேரம்)