தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Cultural Gallery - -

 • சுகதீசப்பெருமாள் கோவில் - திருநீரகம்

  நீரகத்தாய் நெடுவரை யினுச்சி மேலாய்
      நிலாத்திங்கள் துண்டத் தாய் நிறைந்த கச்சி
  ஊரகத்தாய் ஒன்துறை நீர் வெஃகாகவுள்ளாய்
      உள்ளுவா ருள்ளத்தாய் உலகமேத்தும்
  காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா
      காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு
  பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்
      பெருமா னுன் திருவடியே பேணினேனே.
           திருவெடுந்தாண்டகம் - 8 - 2059

  நீரகத்தாய் என்று பாடலில் முதற்சொல்லாகவே மங்களாசாசனம்
  துவங்கப்பட்ட இந்த நீரகம் அன்று எங்கிருந்ததென அறியமுடியவில்லை.
  திவ்ய தேசம் மட்டுமல்ல. மூலவரும் எங்குற்றாரென அறியமுடியவில்லை.
  உற்சவரே இன்றும் உள்ளார். உற்சவரே மூலவரின் இடத்திலிருந்து
  சேவை சாதிக்கிறார். இந்த நீரகமும் உலகளந்தான் (திருஊரகம்)
  சன்னதிக்குள்ளாகவே உள்ளது.

  எம்பெருமான் நீர்மைத் தன்மையானவன். நீரிடை மீனாக அவதாரம்
  செய்தவன். நீர்ப்பாயலை இருப்பிடமாக் கொண்டவன். பிரளய காலத்தின்
  போது பூவுலகு நீரால் சூழ ஆலிலை மேல் மிதப்பவன். எனவே
  அவனை     நீரகத்தான் என்று மங்களாசாசனம்     செய்தார்
  திருமங்கையாழ்வார். ஆனால் இத்தலம் எங்கிருந்தது என்று மட்டும்
  விளம்பாது சென்றார் ஆழ்வார்.

  திவ்ய     தேசங்களின்     இருப்பிடங்களையும்     அருகமைந்த
  நீர்நிலைகளையும் (நதிகளையும்) எம்பெருமானின் திருநாமங்களையும்
  தன்பாக்களில் கூறிப் போகும் திருமங்கை, நீரகம், காரகம், கார்வானம்
  என்னும் மூன்று திவ்ய தேசங்கட்கு மட்டும் ஏனோ அந்த மரபை
  மறைத்து விட்டார்.

  திருமங்கையாழ்வார்     மங்களாசாசனம்     செய்ய     இங்கு
  எழுந்தருளியபோது இந்த மூன்று ஸ்தலங்களும் ஊரகத்தில்
  வந்துவிட்டதா அல்லது வெவ்வேறு இடங்களில் இந்த திவ்ய
  தேசங்களை மங்களாசாசனம் செய்தாரா அல்லது எந்தவொரு காலச்
  சூழ்நிலையில் இம்மூன்றும் இங்கு வந்துற்றதென்பது ஆய்ந்தறிய
  இயலவில்லை.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:34:00(இந்திய நேரம்)