தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Cultural Gallery - -

  • கூடலழகர் கோவில் - திருக்கூடல்

        அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
        இழைப்பன் திருக்கூடல் கூட, - மழைப்பே
        ரருவி மணிவரன்றி வந்திழிய யானை
        வெருவி யரவொடுங்கும் வெற்பு
            (2420) நான்முகன் திருவந்தாதி - 39

    என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இக்கூடல் என்னும் திவ்ய
    தேசம், நான் மாடக்கூடல் என்றும், மூதூர் என்றும் தண்டமிழ்
    இலக்கியங்கள் போற்றும் நம் மதுரை மாநகரமேயாகும். இந்நகரம்
    இந்தியாவின் தலைசிறந்த நகரங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இந்நகரின்
    மையப் பேருந்து நிலையத்திற்கு வெகு அருகாமையிலேயே இத்தலம்
    அமைந்துள்ளது. ரயில்வே நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தூரம்.

    ஆறுகள் கூடும் துறைகளையே புனிதமான இடங்களாக கருதும்
    பழக்கம் நம் நாட்டில் தொன்றுதொட்டு நிலவுவதாகும். வடநாட்டில்
    கங்கை, யமுனை, சரஸ்வதி இம்மூன்றும் கூடும் இடம் “திரிவேணி
    சங்கமம்” ஆயிற்று.

    தமிழர்களும் இவ்விதம் ஆறுகள்     கூடும் இடங்கட்கு
    முக்கியத்துவமும் புனிதத்துவமும் அளித்தனர். மூன்று நதிகள் கூடும்
    இடத்தை முக்கூடல் எனவும் இரண்டு நதிகள் கூடும் இடத்தை கூடலூர்
    எனவும் தமிழர் பெயரிடலாயினர். தொண்டை நாட்டில்பாலாறு, சேயாறு,
    கம்பையாறு மூன்றும் சேரும் இடத்தை திருமுக்கூடல் என்று
    பெயரிட்டனர். நெல்லையில் தாமிரபரணி, சித்ரா நதி, கோதண்டராம நதி
    என்னும் கயத்தாறு, இம்மூன்றும் சேருமிடம் முக்கூடல் ஆயிற்று.
    முக்கூடற் பள்ளு என்னுஞ் சிறந்த நாடகம் இவ்வூரைப்
    பற்றியெழுந்ததே.

    இஃதே போன்று “கிருதமாலா” என்னும் நதி பூமாலை போன்று இரு
    பிரிவாய்ப் பிரிந்து இவ்வூரை (மதுரை) அரண்போலச் சுற்றி மீண்டும்
    ஒன்று சேர்வதால் இவ்வூர் கூடல் நகராயிற்று.

    இக்கூடல் மாநகரில் கோவிந்தனின் சாநித்தியம் ஏற்பட்டதால்
    “திருக்கூடல்” ஆயிற்று.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:15:20(இந்திய நேரம்)