Cultural Gallery - - | தமிழ் இணையக் கல்விக்கழகம் 
தமிழ் இணையக் கல்விக்கழகம்

தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Cultural Gallery - -

 • பெருமாள்கோவில் - ஆழ்வார்திருநகரி

      ஓடியோடிப் பலபிறப்பும் பிறந்து மற்றோர் தெய்வம்
      பாடியாடிப் பணிந் பல்படிகால் வழியேறிக் கண்டீர்
      கூடி வானவரேத்த நின்ற திகுக்குருகூரதனுள்
      ஆடுபுட்கொடி யாதி மூர்த்திக்கு அடிமை புகுவதே
              (3112) திருவாய்மொழி 4-10-7

  என்று நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்திருத்தலம்
  ஒப்பிலா பெருமையையுடைய. காலம் காட்ட முடியாத அளவிற்கு
  தொன்மை வாய்ந்தது.

  திருநெல்வேலியிலிருந்து இத்தலத்தின் வாசலருகே செல்வதற்கு
  பேருந்து வசதியுள்ளது. திருச்செந்தூரிலிருந்தும் எண்ணற்ற பேருந்துகள்
  உண்டு.

  இத்தலம் பற்றி எண்ணற்ற நூல்களில் ஆதாரங்கள் கிடைக்கின்றன.
  பிரம்மாண்ட புராணம் குருபரம்பர, குருகாமான்மியம், திருப்பணிமாலை,
  வாகன கவி மாலை, கல்வெட்டுக்கள், மற்றும் செவிவழிச் செய்திகள்
  என்று ஏராளமான விவரங்கள் கிடைக்கின்றன.

  இத்தலத்திற்கு முன்னொரு காலத்தில் குருகூர் என்னும் பெயரே
  மிகவும் பிரசித்திபெற்றதாகவே இருந்தது. குருகூர் என்று பெயர்
  வந்தமைக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.

  ஒரு சமயம் பிரம்மா திருமாலை நோக்கி பூவுலகில் தவம்
  செய்வதற்கு ஒரு சிறந்த இடத்தை தெரிவிக்க வேண்டுமென வேண்டிய
  போது, திருமால் பிரம்மனை நோக்கி உன்னைப் படைப்பதற்கு முன்பே
  தாமிரபரணியாற்றங்கரையில் இனியதோர் இடத்தையும் படைத்து
  ஆதிப்பிரான் என்ற திருநாமத்தோடு எழுந்தருளியுள்ளோம். ஆதிபுரி
  என்று அதற்குப் பெயர். மனதுக்கினிய ரம்யமான சோலைகளும்
  வாவிகளும் சூழ்ந்த அந்த இடத்தில் சென்று தவம் செய் என்றார்.
  இதனை ஒன்றும் தேவும்.. என்ற ஆழ்வார் பாசுரத்தால் அறியலாம்.

  திருமாலை     ஆதிநாதனாகக்     கொண்டு     கடுந்தவமியற்றிய
  பிரம்மாவுக்கு திருமாலே குருவாக வந்து உபதேசித்ததால் மிக
  மகிழ்ந்த பிரம்மன் “குருகாத்தர மதர்ச்சனம்” என்றருளியதால் அதன்
  நினைவாக இவ்வூர்க்கு குருகூர் என்றே பெயர் விளங்க வேண்டுமென
  பிரம்மன் வேண்டிக்கொண்டான் அதுமுதல் குருகூர் ஆயிற்று.


  நம்மாழ்வாரின் மூதாதையரான திருவழுதி வள நாடனின்
  பாட்டனராகியக் குருகன் என்ற அரசன் இத்தலமிருந்த பகுதியைச்
  தலைநகராகக்கொண்டு ஆண்டமையால் அவன் நினைவாக குருகாபுரி
  ஆயிற்றென்றும் வரலாற்றுச் சான்றுகள் உண்டு.

  குருகு என்ற தமிழ்ச் சொல்லுக்கு நாரை, கோழி, சங்கு என்ற பல
  பொருளுண்டு. குருகாகிய சங்கு இத்தலத்திற்கு வந்து மோட்சம்
  பெற்றதாலும் குருகூர் ஆயிற்றென்பர்.

  நம்மாழ்வாரின் அவதார மகிமையால்தான் ஆழ்வார் திரு
  நகரியாயிற்று.

  கம்பரும் தமது சடகோபரந்தாதியில் குருகூர் என்றே
  எடுத்தாண்டுள்ளார்.

      சுரக்குந்திருவும் வறுமயுந் தீரும் தொடக்குவிட்டுக்
      கரக்கும் இருவின மேன்மயும் கானும் கயல் குதிப்ப
      திரங்குங் கழ நெடுந்தாளிர்தொடுத்த செந்தேனுடத்
      பரக்கும் பழன வயற்குருகூர் வளம் பாடுமினே

                   என்று பாடியுள்ளார்.

  இது தவிர்த்து இந்த தலத்திற்கு தாந்த ஷேத்ரம், வராஹ ஷேத்ரம்,
  சேஷஷேத்ரம், தீர்த்த ஷேத்ரம் என்று பல பெயர்களுண்டு.

Tags         :