தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Cultural Gallery - -

 • சாரநாதப்பெருமாள் கோவில் - திருச்சேறை

  பைவிரியும் வரியரவில் படுகடலுள்
      துயிலமர்ந்த பண்பா என்றும்
  மைவிரியும் மணிவரைபோல் மாயவனே
      என்றென்றும், வண்டார் நீலம்
  செய்விரியும் தண்சேறை யெம் பெருமான்
      திருவடியைச் சிந்தித் தேற்கு, என்
  ஐ யறிவும் கொண்டானுக் காளாணார்க்
      காளாமென் அன்பு தானே (1584)
           பெரியதிருமொழி 7-4-7

  என்று பாற்கடலுள் பள்ளி கொண்ட பண்பினையும், கருமேக
  நிறமொத்து நீண்ட மலைபோல் தோற்றமும் கொண்டு விரிந்திருக்கும்
  நீல மலர்களைச் சுற்றி எந்நேரமும் வண்டுகள் இசைபாடும் குளிர்ச்சி
  பொருந்திய திருச்சேறையில் எழுந்தருளியுள்ள எம்பெருமானைச்
  சிந்தித்தவர்கட்கு என்     அன்பு     ஆட்படுகின்றது, என்று
  திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்திருத்தலம் இன்றும் திருச்சேறை
  என்ற தூயதமிழ்ப் பெயரிலேயே வழங்கி வருகிறது.

  நாச்சியார் கோவில் திவ்ய ஸ்தலத்திலிருந்து குடவாசல் செல்லும்
  வழியில் 3வது மைலில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து குடவாசல்
  வழியாகத் திருவாரூர் செல்லும் எல்லாப் பேருந்துகளும், நாச்சியார்
  கோவில் என்னும் திருநறையூர், திருச்சேறை, திருக்கண்ணமங்கை
  ஆகிய மூன்று திவ்ய தேசங்களைத் தாண்டித்தான் செல்கிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:20:28(இந்திய நேரம்)