தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • சாரநாதப்பெருமாள் கோவில் - திருச்சேறை
    வரலாறு

    இத்தலத்தைப் பற்றி பிர்ம்மாண்ட புராணத்தில் மகேஷ்வர நாரத்
    ஸம்வாதத்தில் 1 முதல் 6 அத்தியாயம் வரையிலும் பவிஷ்ய புராணத்தில்
    68 முதல் 72 வரை உள்ள அத்தியாயங்களிலும் பேசப்படுகிறது.

    முன்பு ஒரு பிரளயத்தின்போது பிரம்மா சிறிது மண் எடுத்து ஒரு
    கடம் பண்ணி அதில் சகல வேதங்களையும் மறைத்து வைத்துக்
    காப்பாற்ற எண்ணி பல இடத்தில் மண் எடுத்துப் பானை செய்யவும்,
    எல்லாம் உடைந்து போக இறுதியில் வழக்கம்போல் மஹாவிஷ்ணுவைத்
    துதி செய்ய, அவர் வழக்கம் போல் பல ரிஷிகளும்
    தவஞ்செய்யக்கூடியதும், தனக்கு மிகவும் உவப்பானதுமான “ஸார
    ஷேத்திரத்தில்” மண் எடுத்துக் கடம் செய்யுமாறு கூற பிரம்மனும்
    ஸாரச் சேத்திரம் என்னும் இந்தத் திருச்சேறை வந்து மண் எடுத்துக்
    கடம் செய்து வேதங்களை அதிலிட்டுவைத்துக் காத்தார். மண் எடுத்த
    இடமே ஸார புஸ்கரணியாயிற்று.

    காவிரித்தாய் தவமிருந்த வரலாறு

    ஒரு காலத்தில் விந்திய மலையின் அடிவாரத்தில் கங்கை, யமுனை,
    சரஸ்வதி, சிந்து, காவேரி, கோதாவரி ஆகிய 7 நதிகளும்
    கன்னிகைகளாக மாறி விளையாடிக் கொண்டிருக்கையில் அவ்வழியாகச்
    சென்ற விச்வாவஸ் என்னும் ஒரு கந்தர்வன் இவர்களை கண்டு
    வணங்கிவிட்டுச் சென்றான். இவன் யாருக்கு வணக்கம் தெரிவித்தான்
    என்று அவர்களுக்குள் சந்தேகம் வந்துவிட்டது. அப்போது மீண்டும்
    அவ்வழியே திரும்பி வந்த இந்தக் கந்தர்வனைக் கண்டு தாங்கள்
    யாருக்கு வணக்கம் செலுத்தினீர்கள் என்று கேட்க உங்களில் யார்
    பெரியவரோ அவருக்கே என்று சொல்லிச் சென்றுவிட்டான்.

    இதில் மற்ற நதிகள் எல்லாம் விலகிக்கொள்ள கங்கையும் காவிரியும்
    தாமே நதிகளுள் பெரியவர்கள். ஆகவே என்னைத் தான் சொன்னான்,
    என்னைத்தான் சொன்னான் என்று இருவரும் கூற வாதம் வளர்ந்து
    முடிவில் பிரம்மனிடமே விடைபெறச் சென்றனர்.

    அப்போது பிரம்மன் கூறினான். திருமால் திரிவிக்ரம அவதாரம்
    எடுத்தபோது சத்திய லோகம் என்னும் எனது பிர்ம்ம லோகம் வரை
    நீண்ட எம்பெருமானது பாதங்களை நான் திருமஞ்சனம் செய்ய அதுவே
    பெருக்கெடுத்து ஓடி கங்கையாயிற்று. எனவே கங்கையே புனிதமானவள்,
    உயர்வானவள் என்று கூறினார்.

    இதைக் கேட்டு மிகவும் வருத்தமுற்ற காவேரி நான் கங்கையினும்
    பெருமைபெற்றவள் என்ற பெயரை தனக்குத் தரவேண்டுமென்று கேட்க,
    அது தன்னால் முடியாதென்றும் சர்வ வல்லமை பொருந்திய
    மஹாவிஷ்ணுவால்தான் அது முடியுமென்றும், உனக்கு அப்பதம்
    சித்திக்க வேண்டுமென்றால் ஸாரபுஷ்கரிணியில் உள்ள அரச
    மரத்தடியில் திருமாலைக் குறித்து கடுந்தவஞ் செய்யுமாறு கூற,
    அவ்வண்ணமே காவேரி கோடையில் பஞ்சாக்கினி மத்தியிலும், குளிர்
    காலத்தில் ஜலத்தின் மத்தியிலும் கடுந்தவஞ்செய்ய, மஹாவிஷ்ணு ஒரு
    தை மாச பூச நட்சத்திரத்தன்று சிறு குழந்தையாய்த் தோன்றித் தவழ்ந்து
    வர அந்தக் கோடி சூர்ய ப்ரகாசத்தைக் கண்ட காவிரி இது சாதாரணக்
    குழந்தையன்று எம்பெருமானே என்று தீர்மானித்து தொழுது நின்றாள்.

    உடனே எம்பெருமான் தனது மழலை வேடத்தை மறைத்து
    கருடவாகனத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளா தேவி, மகாலெட்சுமி,
    ஸாரநாயகி என்னும் 5 தேவிகள் புடைசூழ சங்கு சக்ர தாரியாக
    காட்சியளித்தார். இக்காட்சியைக் கண்டு பேரானந்தமும் மயிர்க்
    கூச்செறிப்பும் கொண்ட காவேரி பலவாறு போற்றி எம்பெருமானைத்
    துதித்துப் பாடினாள். என்ன வரம் வேண்டுகிறாய் காவேரி, என்று
    பெருமாள் கேட்டதும், தாங்கள் இதே கோலத்தில் இங்கு காட்சி
    தரவேண்டுமென்றும்,     கங்கையினும் மேன்மையைத் தனக்கு
    தரவேண்டுமெனவும் வேண்டினாள்.

    அவ்விதமே அருளிய எம்பெருமான் நான் திரேதா யுகத்தில்
    நின்னிடத்தில் தங்குவேன் என்று கூறினார்.

    அவ்வண்ணமே     இராமாவதாரம்     முடிந்து,     விபீஷணன்
    எம்பெருமானை இலங்கைக்கு கொண்டு செல்கையில் அரங்கநாதனாக
    காவிரியில் பள்ளிகொண்டார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:20:42(இந்திய நேரம்)