தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சௌந்தரநாதசுவாமி கோவில் - திருநாரையூர்

  • சௌந்தரநாதசுவாமி கோவில் - திருநாரையூர்

    சோழநாட்டு (வடகரை)த் தலம்.

    சிதம்பரம் - காட்டுமன்னார் கோயில் (காட்டுமன்னார்குடி) சாலையில், குமராட்சியை அடுத்து, சாலையில் திருநாரையூர் 1 கி.மீ. என்று கைகாட்டி உள்ள இடத்தில் அதுகாட்டும் பாதையில் (இடப்புறமாக) சென்றால் தலத்தையடையலாம். சிதம்பரத்திலிருந்து 16 கி.மீ. சாலையில் சிமெண்ட் பெயர்ப்பலகையும் உள்ளது. சற்று குறுகலான பாதை. கோயில்வரை செல்லலாம். துர்வாசருடைய தவத்திற்கு இடையூறுசெய்த காந்தருவன் ஒருவன் சாபத்தால் நாரையாகி வழிபட்ட தலம். நம்பியாண்டார் நம்பிகள் அவதரித்த தலம். இங்குள்ள பொல்லாப் பிள்ளையாரின் அருளைக் கொண்டு இவர், தில்லையில் சேமித்து வைத்திருந்த தேவாரத் திருமுறைகளை உலகிற்கு வெளிப்படுத்தினார்.

    இறைவன்
    -
    சௌந்தரநாதர்
    இறைவி
    -
    திரிபுரசுந்தரி.
    தலமரம்
    -
    புன்னாகம்.
    தீர்த்தம்
    -
    காருண்ய தீர்த்தம். (கோயிலுக்கு எதிரில் உள்ளது.)

    சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது. கிழக்கு நோக்கிய திருக்கோயில். முகப்புவாயிலைக் கடந்ததும் உள்இடம் விசாலமாகவுள்ளது. நந்திமண்டபம்-கொடிமரத்து விநாயகர் உள்ளார். கொடிமரமில்லை.

    வலப்பால் அம்பாள் சந்நிதி. உள்கோபுரம் மூன்று நிலைகளை உடையது. உள் முகப்பு வாயிலின் மேற்புறம் ரிஷபாரூடர் வண்ணச் சுதையில் அழகுறக் காட்சி தருகிறார். நேரே மூலவர் சந்நிதி தெரிகிறது. உட்பிராகாரத்தில் வலமாக வரும்போது சந்தானாசாரியர் சந்நிதி உள்ளது. அடுத்திருப்பது நால்வருடன் சேக்கிழாரும், அகத்தியரும், பகமுனிவரும் ஒரு சேரசிலாரூபத்தில் எழுந்தருளியுள்ள சந்நிதி. அடுத்த தரிசனம் இத்தலத்திற்குச் சிறப்பாகவுள்ள பொல்லாப் பிள்ளையார் சந்நிதியாகும். இதைச் சுயம்பிரகாசர் சந்நிதி என்றும் அழைக்கின்றனர். (பொள்ளல் - உளி கொண்டு செதுக்குதல். இவ்வாறு செதுக்கப்படாமல் தானே தோன்றியவர். பொள்ளலில்லாப் பிள்ளையார் பொல்லாப்பிள்ளையார் என்றாகி விட்டது.) சந்நிதிக்கு முன் மங்களூர் ஓடுவேயப் பெற்ற மண்டபம் உள்ளது. வலம்புரி விநாயகராகப் பிள்ளையார் தரிசனம் தருகின்றார். சந்நிதியில் உட்புறத்தில் திருமுறை கண்ட வரலாறு வண்ணப் படங்களாக வைக்கப்பட்டுள்ளன. நம்பியாண்டார் நம்பிகள், ராசராசன் ஆகியோரின் சிலாரூபங்கள் உள்ளன. அடுத்து சுப்பிரமணியர், கஜலட்சுமி, திருமூலநாதர் சந்நிதிகளும், தலமரமும் யாகசாலையும் உள்ளன. அடுத்துள்ள சந்நிதியில் நவக்கிரகங்களை சனிபகவான், பைரவர், சூரியன் திருவுருவங்கள் ஒரே வரிசையில் வைக்கப்பட்டுள்ளன.

    வலம்முடித்து மண்டபத்துள் நுழைந்தால் வலப்பால் நடராசசபை உளது. இடப்பால் நம்பியாண்டார் நம்பிகள் பாடியுள்ள திருநாரையூர் இரட்டைமணிமாலைப் பாடல்களும் தேவாரப் பதிகங்களும் பதிக்கப்பட்டுள்ளன. துவாரபாலகர்களை வணங்கி உட்சென்றால் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைத்திருத்தலைக் காணலாம். இவற்றுள் நாரை, பொல்லாப்பிள்ளையார், இராசராசன், சந்திரசேகர், நால்வர் முதலியன தரிசிக்கத்தக்கன. கோஷ்டமூர்த்தங்களுள் தட்சிணாமூர்த்தியும், துர்க்கையும் தனிச்சந்நிதிகளாக ஆக்கப்பட்டு வழிபடப் பெறுகின்றன. நேரே மூலவர் தரிசனம். சௌந்தரநாதர் சௌந்தர்யமாகவே காட்சி தருகிறார். அழகான சிவலிங்கத் திருமேனி.

    கோயிலுக்கு எதிரில், நம்பியாண்டார் நம்பிகள் அவதரித்த இல்லம் அவர் பெயரில் நினைவாலயமாக (14-9-84ல்) ஆக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் வளைவு உள்ளது. நம்பியாண்டார் நம்பிகள், விதானத்தின் கீழ், நின்ற திருக்கோலத்தில் கையில் அபிஷேகக் கலசத்துடன் காட்சி தருகின்றார். இதன் பின்னிடம் நந்தவனமாக உருவாக்கப்பட்டு வருகின்றது. நம்பியாண்டார் நம்பியின் பெற்றோர் - அநந்தேச சிவாசாரியார், கல்யாணி என்றும்; எருக்கத்தம்புலியூரில் யாழ்ப்பாணர் மரபில் வந்த “ஏந்திசைப்பாடினி” என்றும் ஊமைப்பெண், பொல்லாப்பிள்ளையாரின் அருளால் பேசும் திறமை பெற்றாள் என்றும், அவரே பாடல்களுக்குப் பண் அமைத்துத் தந்தார் என்றும் சொல்லப்படுகிறது. நம்பியாண்டார் நம்பிகள் குரு பூசை ஆண்டு தோறும் புனர்பூச நாளில் கொண்டாடப்படுகிறது. இதற்கென வைப்பு நிதி ஒரு லட்சம் வைக்கப்பட்டுள்ளது. நித்திய வழிபாட்டுக் கட்டளையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    ‘பகர் மார்க்கண்டர் திருநாரை பாண்டவாதிபலர் முன்னாள்
    அகமார் அன்பால் விதியுளியே அருச்சித்திறைஞ்ச அவ்வவர்க்குத்
    தகமாக் கருணை புரிந்தருளித் தமியேம் பிறவி நீங்க நலம்
    மிகமா வளஞ்சேர் திருநாரையூர் வாழ் விமலன் தாள்பணிவாம்.’

    ‘பொருநாகப் பணியுடனே குழவிப் பிறையுஞ்
    சடைமிசையே யணியும் பெருமான்
    இருநாழித் தருமருநென் முதலா
    எண்ணான் கறமும் பெருகப் புரிவாள்
    தருநாகத்தவர் முதல் எவ்வுயிருந்
    தழையத் தழையும் பொழிலில் திகழும்
    திருநாரைப் பதி வளருங் கருணைத்
    திரிபுரசுந்தரி சரணம் பணிவாம்.’

    ‘தன்னைக் குறித்த திருப்பணியுஞ்
    சான்றோர் பிறர்க்குச் செயும் பணியும்
    முன்னைத் தனது வழிபாடு
    முடிப்போர்க் கினிதா முடிப்போனை
    என்னை நினைத்துத் தனது பணி
    யியற்றப் பணித்த இபமுகனைப்
    புன்னைத் தருசூழ் திருநாரைப்
    பொல்லா முதல்வன் தனைப்பணிவாம்.’
                                                 (தலபுராணம்)

    ‘என்னை நினைந்தடிமை கொண்டென் இடர் கெடுத்துத்
    தன்னை நினையத் தருகின்றான் - புன்னை
    விரசுகமழ் சோலை வியன் நாரையூர் முக்கண்
    அரசுமகிழ் அத்தி முகத்தான்.’
                                     (திருநாரையூர் இரட்டைமணி மாலை)

    ‘முகில்போல் பொழியும் மூவர் திருமுறை கண்டெடுக்கச் சோழேசன்
    முக்காலத்தின் இயல்புணர்ந்த முத்தர் நம்பி யாண்டார்தாள்
    புகழ ஆங்கே நிவேதித்த பொற்பார் மோதகாதியெலாம்
    பொருந்தத் துதிக்கை யாலெடுத்துப் புசிக்க அவர்தாம் பின்கேட்க
    மகிழைங்கரத் தோன் கனகசபை வாயுதிக்கிலிருக்கு தென்றே
    வந்தே யருளத் திருமுறையால் வைய மெல்லாம் வாழவைக்கும்
    திகழு நாரையூர்க்குமார சிறியேஞ் சிற்றில் சிதையேலே
    தெய்வக் குறப் பெண் மணவாளா சிறியேஞ் சிற்றில் சிதையேலே.’

    (காஞ்சி சிதம்பர முனிவர் பாடியுள்ள சுப்பிரமணியக் கடவுள் க்ஷேத்திரக்கோவை பிள்ளைத் தமிழ்)

    ‘தீவினையாயின் தீர்க்க நின்றான் திருநாரையூர் மேயான்
    பூவினைமேவு சடைமுடியான் புடைசூழப் பலபூதம்
    ஆவினிலைந்துங் கொண்டாட்டு கந்தானடங்கார் மதின்மூன்றும்
    ஏவினையெய் தழித்தான் கழலே பரவா எழுவோமே.’
                                                                 (சம்பந்தர்)

    ‘பண்ணி னான்மறை பாடலோ டாடலும்
    எண்ணிலார் புரமூன் றெரிசெய்ததும்
    நண்ணினார் துயர் தீர்த்தலு நாரையூர்
    அண்ணலார் செய்கை அம்ம அழகிதே.’          (அப்பர்)
                                                      -மேனாட்டுந்

    தேரையூர்ச் செங்கதிர் போல் செம்மணிகள் நின்றிலங்கும்
    நாரையூர் மேவு நடுநிலையே.
                                                      (அருட்பா)

    “மருப்பை யொரு கைக்கொண்டு காரையூர் மன்னும் பொருப்பை
    யடிபோற்றத்துணிந்தால் - நெருப்பை அருந்த வெண்ணுகின்ற
    எறும்பன்றே யவரை வருத்த வெண்ணுகின்ற மலம்.”

    அஞ்சல் முகவரி :-
    அ/மி. சௌந்தரநாதசுவாமி திருக்கோயில்

    (சுயம்பிரகாசநாதசுவாமி தேவஸ்தானம்)
    திருநாரையூர் & அஞ்சல் - 608 303
    (வழி) லால்பேட்டை - காட்டுமன்னார்கோயில் வட்டம்
    கடலூர் மாவட்டம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 11-08-2017 17:59:49(இந்திய நேரம்)