Primary tabs
-
சுகந்தவனநாதன் திருக்கோவில் - திருஇந்தளூர்திருமங்கையும் பரிமள ரெங்கனும்
திருமங்கையாழ்வார் இத்தலத்திற்கு வந்தபோது பூஜைகள் முடிந்து
கோவில் பூட்டப்பட்டுவிட்டது. தான் வருவதற்குள் இவன் கதவடைத்துக்
கொண்டானே என்று கோபப்பட்ட திருமங்கை யாழ்வார் பெருமானை
“வாழ்ந்தே போம் நீரே-என்று வசை வாழ்த்துக் கூறினார்.அதாவது நமக்கு வேண்டிய ஒருவன் நமக்குத் தேவையான ஒரு
பொருளை வைத்துக் கொண்டு நாம் அதைக் கேட்கும் போது
வேண்டுமென்றே தரமுடியாது என்று கூறுவதாக வைத்துக் கொள்வோம்.
அவன் நமக்கு மிகவும் வேண்டியவனாதலால். பரவாயில்லை அதை
வைத்துக்கொண்டு “நீரே வாழ்ந்துபோம்” என்று கூறுவதில்லையாஅதேபோல் பெருமாள் திருமங்கைக்கு வேண்டியவர்.அர்ச்சாவதாரம்
வேண்டிய பொருள். அதை தரிசிக்க வரும்போது கதவடைத்துக்
கொண்டால் உம்மழகை நீரே ரசித்து வாழ்ந்துபோம் என்று ஆழ்வார்
சொல்ல மாட்டாரா என்ன?இத்தலத்திற்கு அமைந்த 10 பாடல்களும் திருமங்கை ஆழ்வாருக்கும்
பெருமாளுக்கும் நடந்த விவாதமாகவே கூறுவர். மிகவும் இனிமையான
உள்ளுறை பொருந்திய பாடல்களாகும் அவை,திருமங்கைக்கும் பரிமள ரெங்கனுக்கும் நடந்த உரையாடல்
நாம் வாழும்போது, நாம் உமதடிமை என்று தெரிந்திருந்தும் எமக்கு
காட்சி கொடுக்காது தாழிட்டுக் கொண்டீரல்லவா பெருமாளே, இது
நம்மிருவருக்கு மட்டும் உள்ள பிரச்சினை அல்ல. திருமங்கை, பரிமள
ரங்கனைக் காண ஆசைப்பட்டதற்கு அவன் கதவடைத்துக்
கொண்டதுதான் மிச்சம் என்று எல்லோரும் ஏசினால் உமக்கே
பழிவந்து சேரும். ஆகவே எமக்கு காட்சி கொடும் என்று திருமங்கை
சொல்ல.நமக்குப் பழிவரும் என்று நீர் ஏன் துயரப்படுகிறீர்கள் அதனை
நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் கவலையை விடுங்கள் என்று
பெருமாள் கூற,திருமங்கை விடுவதாக இல்லை. பெருமாளே உம்மால் பொறுக்க
முடியாதது ஒன்று இப்போது ஏற்பட்டுவிட்டதென்று கூற, ஆழ்வாரே
அது என்ன புதிதாக ஒன்றைச் சொல்கிறீர் என்று பரிமளன் வினவ,பெருமாளே ஒரு பொருள் நம்மை விட்டுச் சென்றால் அதை மறந்து
மற்றொன்றை நாடுவதே இன்றைய உலகியற்கையாக உள்ளது. ஆனால்
யாம் அவ்வாறல்ல, நீவிர் எங்கட்கு புலப்படாது செல்லச் செல்ல
உங்கள் மீது யாம் கொண்ட பக்திதான் மேலும் வளரும்.
நாங்கள் யார் தெரியுமா
“மறந்தும் புறந்தொழாமாந்தர்”
“இற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும்
உற்றோமேயாமாகில் உமக்கே
நாம் ஆட் செய்வோம்.”
“இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்”
“எந்தை தந்தை எம்மூத்தப்பன் ஏழ்படி கால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்.”
“நுந்தம் பணி செய்திருக்கும் நும்மடியோம்
நும்மைத் தொழுதோம்.”என்று நாங்கள் கொண்ட ஆசையின் காரணமாக உம்மைப் போற்றிப்
புகழ்வதையே இயல்பாகக் கொண்டவர்கள். உம்மைப் பழித்தாலும்
பொறுத்துக் கொள்ளும் இயல்புடைய தாங்கள் உமதடியாரைப் பழித்தால்
பொறுமையாக இருப்பீரோ, அதனால்தான் எமக்கு வந்திருக்கும் இழுக்கு
நும்மால் பொறுக்க முடியாதென்று கூறினோம்ஆசைவழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து
அடியார்கட்கு.....என்றார்.பெருமாளே நம்மிருவருக்கும் உள்ள உறவு பற்றி தேசம் முழுவதும்
தெரியும்.திவ்ய தேசங்களினூடே திரிந்து கொண்டிருக்கிறான் என்பது
உலகமறிந்த விஷயமாகும். அப்பேர்ப்பட்ட இந்த அடியவனுக்கு
பொன்னின் ஒளியைக் காட்டிலும் விஞ்சி நிற்பதான உமது வடிவழகைக்
காட்டாமல் உள்ளீரே“தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர்” - என்றார்திருமங்கையின் விளக்கத்தை மேலும் பருக எண்ணிய பரிமளன்
மீண்டும் மௌனம் சாதிக்க திருமங்கை மீளவும் விட்ட பாடில்லை.பெருமாளே பரமபதத்தில் நித்திய சூரிகட்கு காட்சி கொடுக்கும் நின்
பேரழகை பூவுலகிற்கும் வழங்குவதற்காக அல்லவா அர்ச்சாவதாரம்
எடுத்துள்ளீர். அவ்வாறன்றோ இந்தளூரிலும் தங்கி இருப்பது. அவ்விதம்
இருக்க இன்னும் வேறுபாடு காட்டலாமோ (வாசி அற என்றால்
வேறுபாடு இன்றி என்பது பொருள்) வாசி அற முகங்கொடுக்கிற
இடத்தே, வாசி வையா நின்றீர் என்று இந்நிகழ்ச்சியை பெரிய வாச்சான்
பிள்ளை வ்யாக்யானிப்பார்.இவ்வாறு கூறியும் பெருமாள் முகங்கொடுக்காதிருக்கவே,
சரி, ஆசைப்பட்ட அடியவர்கட்கு ஆராவமுதமாக இருப்பது
அர்ச்சாவதார மொன்றுதான். அதனையும் காண்பிக்க இஷ்டமில்லை
யாயின் நீரே அதனைக் கட்டிக்கொண்டு வாழுமய்யா - நாங்கள்
எப்படியும் போகிறோம் என்று.வாசி வல்லீர் இந்தளூரீர் வாழந்தேபோம்நீரே - என்றார்
(இப்போது தலைப்பில் உள்ள பாடலைப் பாருங்கள் பொருள்
முற்றிலும் விளங்கும்)இவ்வாறு திருமங்கை மங்களாசாசனம் செய்து நிற்க இப்படியே
விட்டால் எங்கே திருமங்கை போய்விடுவாரோ நமக்கும் பாசுரங்
குறைந்து போகுமோ, பிறகு நின்றவூரானைப் போல நாமுஞ் சென்று
நிற்க வேண்டி வந்துவிடுமோ என்றெண்ணிப் பெருமாள் மேலும் வாதம்
செய்யத் தொடங்குகிறார். வாதம் வளர்ந்து பாசுரங்களை
வாங்கிக்கொண்ட பின் பரகாலனுக்கு காட்சி தந்ததாக வரலாறு.10 பாவிற்கும் இதேபோன்ற விளக்கம் எடுத்தாண்டால் நூலின்
போக்கு வேறுதிக்கில் செல்லுமாதலால் இப்பாடலுக்கு உண்டானதை
மட்டும் எடுத்தாண்டோம்.இப்பெருமானைச் சென்று சேவிக்கும் கடமை நமக்கும்
உண்டல்லவா?நும்மடியோம், நுமக்கே என்பன போன்ற அழகு தமிழ்ச் சொற்களை
திருமங்கையாழ்வாரும் நம்மாழ்வாரும் எடுத்தாண்டுள்ளனர். நம்மாழ்வார்,“நுமக்கடிமை யென்றென்றே நொந்துரைத்தேன்” - 2593 என்று
சொல்லியிருப்பதும் இங்கு பொருளமைதியில் மிகவும் வியந்து
போற்றத்தக்கதாகும்.