தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • புருடோத்தமப்பெருமாள் கோவில் - திருக்கரம்பனூர்
    சிறப்புக்கள்
    1. மும்மூர்த்திகளும், ஒரே கோவிலுக்குள் எழுந்தருளியுள்ள
      இக்காட்சி வேறெங்கும் கண்டற்கரியது. எனவே இது ஒரு
      த்ரிமூர்த்தி தலம்.

    2. பிச்சையெடுத்து வந்த நிலையில் தனது பாத்திரம் (கபாலம்)
      நிறைந்ததால்     பிட்சாடன     மூர்த்தியாக     சிவபெருமான்
      எழுந்தருளியுள்ளார். எனவே பிட்சாண்டார் கோயில் என்ற
      மறுபெயரும் உண்டு.

    3. இங்குள்ள ராஜகோபுரம், மற்றதிவ்ய தேசங்களைவிட மிகச்
      சிறியதாக இருந்தாலும், மிகவும் கலை நுணுக்கங்களுக்கும்,
      பேரழகுக்கும் பெயர் பெற்றதாகும்.

    4. ஜனகர் இங்குள்ள கதம்ப தீர்த்தக்கரையில் ஒரு யாகம் செய்தார்.
      யாகத்தில்     அவியுணவுகளை     நாய் ஒன்று     புசித்து
      மாசுபடுத்திவிட்டதால், அத்தோஷம் நீங்க கதம்ப மரத்தை
      பூஜிக்குமாறு ஜனகனிடம் முனிவர்கள் கூற, மீண்டும் யாகத்தைத்
      துவக்கி கதம்ப மரத்தை பக்தி சிரத்தையோடு வழிபட
      அரவணையில் அறிதுயிலமர்ந்த கோலத்தில் தனது நாபியில்
      பிரம்மாவுடனும், அருகில் பிட்சாண்ட மூர்த்தியான சிவனுடனும்
      திருமால் ஜனகனுக்கு காட்சி கொடுத்தார்.

    5. பக்தன் ஒருவனுக்கு மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்த ஸ்தலம்
      இது ஒன்றுதான். மும்மூர்த்திகளையும் ஒருங்கே கண்ட
      ஜனகர்தான், இங்கு மும்மூர்த்திகளுக்கும் ஆலயம் எடுத்தார்
      என்று வரலாறும் உண்டு.

    6. ஆழ்வார்களில் திருமங்கையாழ்வார் மட்டும் மங்களாசாசனம்.
      பிள்ளைப் பெருமாள் ஐயங்காரும் மங்களாசாசனம் செய்துள்ளார்.

      சில மாதவஞ் செய்தும் தீ வேள்வி வேட்டும்
          பல மாநதியிற் படிந்தும் உலகில்
      பரம்ப நூல் கற்றும் பயனில்லை நெஞ்சே
          கரம்பனூர் உத்தமன் பேர் கல்
           என்பது பிள்ளை பெருமாளயங்காரின் பாடல்

    7. ஸ்ரீ ரங்கநாதனே ஆண்டுதோறும் இங்கு எழுந்தருளி கதம்ப
      தீர்த்தத்தில் தீர்த்தம் சாதிப்பது இன்றும் வழக்கமான விசேடத்
      திருவிழாவாகும்.

    8. திருமங்கையாழ்வார் கரம்பனூரில் தங்கியிருந்துதான் ஸ்ரீரங்கத்தின்
      கோவில் மதில், மண்டபம், போன்றவற்றிற்குத் திருப்பணிகள்
      செய்தார். கதம்ப புஷ்கரணியின் வடக்கேயுள்ள தோப்பும்,
      நஞ்செயும் எழிலார்ந்த சோலையும், திருமங்கை மன்னன்
      தங்கியிருந்ததின் காரணமாகவே “ஆழ்வார் பட்டவர்த்தி” என்று
      இன்றும் அழைக்கப்படுகிறது.

    9. கி.பி. 1751 இல் ஆங்கிலேயருக்கும், பிரஞ்சுக்காரருக்கும் நடந்த
      போரில் கர்னல் ஜின்ஜன் என்பவன் திருச்சிராப்பள்ளிக்
      கோட்டையிலிருந்து பின்வாங்கி இந்த சோலையில் அடைக்கலம்
      புகுந்தான். ஆங்கிலப் படை வீரர்களோ, பிரஞ்சுபடை வீரர்களோ
      இக்கோவிலுக்கு எவ்வித ஊறும் விளைவிக்காதது மட்டுமன்றி
      நிலங்களையும் ஆபரணங்களையும் தானமாக கொடுத்தனர் என்று
      பிரஞ்சுக்காரர்களின் வரலாற்றுக் குறிப்புகள் பரக்கப் பேசுகின்றன.

    10. “கரம்பனூரில்”     கோயில்     கொண்டுள்ள     உத்தமனை
      “தென்னரங்கத்தில்” கண்டேன் என்றார் திருமங்கையாழ்வார்.
      இதற்கு வியாக்கியானம் செய்த பெரிய வாச்சான் பிள்ளை
      “வழிக்கரையிலே” திருவாசலுக்கு     ஒரு     கதவிடாதே
      வந்துகிடக்கிறவனை”     என்றார்.     எல்லோரும்     நடந்து
      செல்லக்கூடிய வழியாக இருப்பதனால் சேவிப்போர் எந்நேரமும்
      வரலாம் போகலாம் என்று எண்ணி தனக்கு கதவு வைத்துக்
      கொள்ள அவகாசம் இல்லை என்று கதவிடாதே கிடந்து
      விட்டான் என்பது மற்றும் ஒரு உரையாசிரியரின் கருத்து. ஒரு
      காலத்தில் கதவு இல்லாமல் இருந்த இத்தலத்திற்கு இப்போது
      கதவு உண்டு.

    11. இந்த ஆலயத்தில் மகாமண்டபத்தில் பிரமனுக்கு உள்ள
      கோயிலில் சரசுவதி தேவி எழுந்தருளியுள்ளாள்.

    12. ஆண்டுதோறும் வரும் கார்த்திகை திருநாளன்று பெருமாளும்
      சிவனும் சேர்ந்தாற்போல் வீதி உலா வருவார்கள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:09:52(இந்திய நேரம்)