தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

 • மாயக்கூத்தன் கோவில் - திருக்குளந்தை
  வரலாறு

  ஸ்ரீ பிரம்மாண்ட புராணமே இத்தலத்தைப் பற்றியும் கூறுகிறது.

  இவ்விடம் ஒரு காலத்தில் தடாகவனம் என்றழைக்கப்பட்டது.
  அவ்விடத்து ஒரு ஸ்தலமும் இருந்தது. அவ்வனத்தில் வாழ்ந்து வந்த
  வேதசாரன் என்னும் அந்தணன், தனது மனைவி குமுத வல்லியுடன்
  தனக்குப் புத்திரப்பேறு வேண்டுமென்று இந்த தடாகத்தில் உள்ள
  பொய்கையில் நீராடி நாள் தோறும் பகவானை வேண்டிவந்தான்.

  பெருமாளின் திருவருளால் ஒரு பெண் மகவு பிறக்க அதற்கு
  “கமலாவதி” என்று பெயரிட்டு நாளொரு மேனியும் பொழுதொரு
  வண்ணமுமாக வளர்த்து வரலாயினர். தக்க பருவம் அடைந்த அவள்
  தான் மானிடரை மணந்து சாதாரண வாழ்க்கை வாழ மாட்டேன்.
  மணந்தால் பகவானையே மணப்பேன் என்று கூறி கானகம் சென்று
  கடுந்தவமியற்றத் தொடங்கினாள்.

  யார்சொல்லியும்     கேளாது தவத்திலேயே லயித்துப்போன
  கமலாவதிக்கு முன் எம்பெருமான் தோன்றி, நின் கடுந்தவத்தை
  மெச்சினோம், வேண்டிய வரங்கேள் என்றார். கமலாவதி தனது
  எண்ணத்தைத் தெரிவித்து மீண்டும் அதையே கேட்பாள் போன்று
  தவத்தினில் மூழ்க ஆரம்பித்தாள். இவள் தவத்தை பெரிதும் மெச்சிய
  பகவான் தம் கௌஸ்துப மணியோடு அவளை ஆலிங்கனம் செய்து தம்
  நெஞ்சில் ஏற்றுக் கொண்டார். பாலிகை (கன்னிகை) தவம் செய்த
  வனமாகையால் பாலிகாவனமாயிற்று.

  தனது புதல்விக்கு கிடைத்த பெரும் பாக்கியத்தை நினைத்து
  பெருமிதம் அடைந்த வேதசாரன் அங்கெழுந்தருளிய பெருமான் மீது
  பெரிதும் பக்தி கொண்டு தினந்தவறாது ஆராதனையில் ஈடுபட்டிருந்தார்.

  இவ்விதமிருக்கையில் ஒரு நாள் குமுதவல்லி நீராடச் சென்றவிடத்து
  அஸ்மாசரன் என்னும் அரக்கன் அவளைக் கவர்ந்து சென்று
  இமயமலைக் குகையில் சிறைவைத்தான். விஷயமறிந்த வேதசாரன் பூச
  நட்சத்திரம் கலந்த தைம் மாத பௌர்ணமியில் பெருமாளைக் குறித்து
  திருமஞ்சனம் செய்வித்து தனது மனக் குறையை தெரிவித்து அருள்
  புரிய வேண்டி நின்றான்.

  உடனே பெருமாள் கருட வாகனத்தின் மேலேறி இமயஞ் சென்று
  குமுதவல்லியை மீட்டு வந்தார். இதனை உணர்ந்த அஸ்மாசரன் பாலி
  காவனம் வந்து பகவானுடன் கடும் யுத்தம் செய்தான். பகவான்
  அவனது இரு கால்களையும் பிடித்து தரையில் அடித்து அவன் மீது
  நின்று நர்த்தனம் புரிந்தார்.

  சோரனான (அஸ்மாசரன் மீது)     நர்த்தனம் புரிந்ததால்
  இப்பெருமானுக்கு ஸோரநாதன் (ஸோர நாட்டியன்) என்ற திருநாமம்
  ஏற்பட்டது. தூய தமிழில் மாயக் கூத்தன் என்றாயிற்று.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:14:43(இந்திய நேரம்)