தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

 • வைத்தமாநிதி பெருமாள்கோவில் திருக்கோளூர் 1

  வரலாறு

  பிரம்மாண்ட புராணமே இத்தலத்தைப் பற்றிய தகவல்களையும்
  தெரிவிக்கிறது.

  ஒன்பது     வகையான     நவநிதிகளுக்கும் எண்ணிலடங்காப்
  பெருஞ்செல்வத்துக்கும் தலைவனாகி (காப்பாளனாக) அளகா
  புரியிலிருந்து அரசாண்டகுபேரன் சிறந்த சிவ பக்தனாயிருந்தான் ஒரு
  சமயம் அவன் சிவனை வழிபடக் கைலாயம் சென்றான். அப்போது
  சிவன்     தனது பத்தினியான     உமையவளோடு அன்போடு
  பேசிக்கொண்டிருக்க உமையவளின் அழகில் மயங்கி ஒற்றைக்
  கண்ணால் பார்த்தான் குபேரன்.

  இதைப் பார்த்துவிட்ட உமையவள் மிக்க சினங்கொண்டு “நீ கெட்ட
  எண்ணத்துடன் பார்த்ததால் ஒரு கண்ணை இழப்பதுடன் உருவமும்
  விகாரமடையக் கடவது” என்று சபித்து நவநிதிகளும் உன்னை
  விட்டகலக் கடவதென்றார்.

  உடனே நவநிதிகளும் குபேரனை விட்டகன்று, தாங்கள்
  தஞ்சமடைவதற்குத் தகுந்த தலைவன் இல்லையென்றும், தம்மைக்
  காத்து அபயம் அளிக்குமாறும், பொருனை நதிக்கரையில் நீராடித்
  திருமாலைத் துதிக்க, அப்பொருனைக் கரையிலே நவநிதிகளுக்கும்
  காட்சி கொடுத்து எம்பெருமான் அந்நிதிகளுக்குப் பாதுகாப்புக்
  கொடுப்பது போல அவைகளை அரவணைத்துப் பள்ளி கொண்டான்.

  நிதிகளைத் தன் பக்கத்தில் வைத்து, பாதுகாப்பளித்து அதன்
  மீது சயனங்கொண்டதால் “வைத்தமாநிதிப் பெருமாள்” என்ற திருநாமம்
  இப்பெருமாளுக்கு உண்டாயிற்று. நிதிகள் எல்லாம் இங்கு
  தீர்த்தமாடியதால் இந்த தீர்த்தத்திற்கும் “நிதித்தீர்த்தம்” என்றே பெயர்
  உண்டானது.

  முன்னொரு காலத்தில் தர்மத்தை (தர்ம தேவதையை) அதர்மம்
  தோற்கடித்தது. எங்கும் அதர்மம் பரவியது. தோற்றுப் போன தர்மம்
  இந்த நிதி வனத்திற்கு வந்து இப்பெருமானை அண்டி தஞ்சம்
  அடைந்திருந்தது. அதர்மத்தினால் உண்டான தொல்லை தாங்க முடியாத
  தேவர்கள், தர்மம் தஞ்சம் புக்கிருந்த இத்தலத்திற்கு வந்து சேர, அதை
  பின் தொடர்ந்து அதர்மமும் இங்கு வந்து சேர, தர்மத்திற்கும்
  அதர்மத்திற்கும் பெரும் யுத்தம் நடந்து, இறுதியில் எம்பெருமானின்
  அருள்பெற்ற தர்மம் வென்றது.

  இஃதிவ்வாறிருக்க,தன் தவறுணர்ந்த குபேரன் பரமசிவனின் பாதத்தில்
  வீழ்ந்து மன்னிப்புக் கோர, அதற்கவர் பார்வதியிடமே மன்னிப்புக்
  கோருமென்று கூற, குபேரன் உமையவளின் பாதம் பணிந்து மன்னிப்புக்
  கோரினான்.

  குபேரனை நோக்கிப் பார்வதி கூறுகிறாள். நான் சபித்ததைப்
  போலவேஉனக்கு இனிமேல் ஒரு கண்ணும் தெரியாது. உன் மேனியின்
  விகாரமும் மறையாது. ஆனால் நீ இழந்த நவநிதியங்களை மட்டும்
  பெற்று வாழ்தற்கு ஒரு உபாயம் உண்டு. உன்னைவிட்டுப் பிரிந்த
  நவநிதிகள் தாமிரபரணி நதி தென்கரையில் தர்மப் பிசுன ஷேத்திரத்தில்
  திருமாலைத் தஞ்சம் அடைந்துள்ளன. திருமாலும் அதன் மீது
  சயனித்துள்ளார். நீயும் அங்கு சென்று ஸ்ரீமந் நாராயணனைக் குறித்தே
  தவம் செய்து இழந்த நிதியினைப் பெறுக என்றாள்.

  திருக்கோளூர் வந்து சேர்ந்த குபேரன், வைத்த மாநிதிப்
  பெருமாளைக் குறித்துப் பெருந்தவஞ் செய்து மன்றாடி நிற்க, ஒரு மாசி
  மாதம் சுக்லபட்ச துவாதசியில் எம்பெருமான் காட்சி கொடுத்து, “உன்
  தவத்தை நான் மெச்சினேன். இருப்பினும் செல்வம் யாவும் உனக்கு
  இப்போதே தரமுடியாது. கொஞ்சம் தருகிறேன் பெற்றுக்கொள்” என்று
  கொஞ்சம் செல்வத்தைத் தர அதைப் பெற்ற குபேரன் “இத்தகு
  நிதியாகிலும் வைத்திருக்கப் பெற்றோமே யென்று” எண்ணித் தன்
  இருப்பிடம் சேர்ந்தான்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:26:30(இந்திய நேரம்)