தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • நம்பி பெருமாள் கோவில் - திருநறையூர்
    சிறப்புக்கள்
    1. வ்யூக வாசுதேவனாக இவ்விடத்திற்கு எழுந்தருளிய எம்பெருமான்
      தனது 5 நிலைகளில் உண்டான சக்தியை தேவிக்கு அளித்து
      ஸ்ரீனிவாசன்     என்னும்     திருநாமத்தோடு     தேவியை
      திருமணக்கோலத்தில் ஏற்றுக் கொண்டார். எனவே இத்தலத்தில்
      திருமாலும் திருமணக்கோலத்திலேயே நின்று அருளுகிறார்.
      இதுவே இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். வ்யூக ரூபத்துடன்
      எம்பெருமான் இங்கு எழுந்தருளியதும் ஒரு தனிச்சிறப்பாகும்.

      திருமகளை மணம்புரிந்த கோலத்தில் வலது கையில் சக்கரமும்,
      இடது கையில் சங்கும் ஏந்தி சற்றே முன்புறம் வருவதுபோல் ஒரு
      தோரணை காட்டி பஞ்ச சமஸ்காரம் என்னும் ஸ்ரீ வைஷ்ணவ
      லட்சணை செய்ய முற்படுதல் போல் (ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு
      வைணவ அடையாளம் இடுதல்) ஆகமசிற்ப சாஸ்திரத்தில்
      கூறப்பட்ட     அனைத்து இலக்கணங்களுக்கும் ஒருங்கே
      பொருந்தியிருக்க எம் பெருமான் இங்கு எழுந்தருளி இருக்கும்
      காட்சி கண் கொள்ளாக் காட்சியாகும். இதுபோன்ற அழகுத்
      திருமேனியை வேறுஎந்த திவ்ய தேசத்திலும் சேவித்து விட
      முடியாது.     இப்பெருமானது     அழகு திருமேனியில்
      திருமங்கையாழ்வார் ஆட்பட்டவிதம் சொல்லுந்தரமன்று.

    2. பிராட்டி மார்களால் புகழ்பெற்ற ஸ்தலங்களில் இதுவும் ஒன்று
      (இலக்குமி) ஸ்ரீதேவியின் பெருமை திருவரங்கத்தில் என்றால்
      பூமாதேவியின் பெருமை திருவில்லிபுத்தூரில்     என்றால்
      நீளாதேவியால் பெருமை பெற்றது இத்தலமாகும். பிராட்டிக்கு
      உண்டான நம்பிக்கை நாச்சியார் என்னும் திருநாமத்தாலே
      நாச்சியார்கோவில் என்றே பெயர் ஏற்பட்டது என்பர்.
      ஸ்ரீவில்லிபுத்தூரை நாச்சியார் திருமாளிகை என்றும், இத்திரு
      நறையூரை நாச்சியார் கோவில் என்றும் அழைப்பர்.

    3. முக்தி தரும் 12 ஸ்தலங்களுள் ஸ்ரீனிவாசம் என்னும் தலமும்
      இதுதான்.

    4. திருமங்கையாழ்வார் தனது பாசுரத்தில் மன்னும் மணி மாடக்
      கோயில் என்று இத்தலத்தை புகழ்கிறார். அதாவது இத்தலம்
      மாடக்கோவில் அமைப்பில் உள்ளது. கோபுர வாயிலினின்று
      நோக்கினால் இப்பெருமான் ஒரு மாடத்தின் மேல் பொலிந்து
      நிற்பது போன்று தெரியும். இக்கருவறையின் அமைப்பும் அதில்
      பெருமாள் எழுந்தருளியிருக்கும் தோற்றமும் ஒரு சிறிய
      வடிவமைக்கப்பட்ட மலைமேல் எழுந்தருளியிருப்பது போல்
      திருமங்கைக்கு காட்சியானது அதனால்

      “தென்னறையூர் மன்னு மணிமாடக் கோயில் மணாளன்
          திருநறையூர் மணி மாடம்” என்றும்
      “திரு.... மணிமாடச் செங்கண் மாலை” என்றும்
          மன்னு மறையூர் திரு நறையூர் மாமலைபோல்
      பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு
          என்னுடைய கண்களிப்ப நோக்கினேன்.
      என்று பெரிய திருமடலிலும் போற்றிப் புகழ்கிறார்.

    5. இத்தலம் சிறிதும் பெரிதுமான 16 கோபுரங்களை உடையது.
      ராஜகோபுரம் 5 அடுக்கும் 76 அடி உயரமும் கொண்டதாகும்.
      மூலஸ்தானத்திற்கு (கருவறைக்கு) மேல் உள்ள விமானமும்,
      கோபுர     வடிவிலேயே     அமைந்திருக்கிறது. இதுபோன்ற
      அமைப்பினை வேறு திவ்ய தேசங்களில் அதிகமாக காணமுடியாது.

      கருவறைக்கு மேல் உள்ள விமானம் கோபுரம் போல்
      அமைந்திருப்பது இங்கும் திருவல்லிக்கேணியிலும் மட்டுமே.

    6. கோச்செங்கண் என்னும் சோழமன்னன் மிகச் சிறந்த சிவ பக்தன்.
      63 நாயன்மார்களில் சோழ நாயனார் என்னும் திருப்பெயர்
      பூண்டவன். இவன் மாற்றாரிடம் தோற்று நாடு இழந்து, மறைந்து
      வாழும் போது மணி முத்தா நதியிலிருந்த முனிவர்களால்
      இந்நம்பியை வழிபடுமாறு உபதேசம் பெற்று மணிமுத்தா நதியில்
      நீராடி, மூழ்கி எழுந்திருக்கையில் தெய்வ வாளினைப் பெற்று
      எதிரிகளோடு பொருதி அவர்களை சின்னாபின்னமாக்கி நாட்டை
      மீட்டு முடிசூடி வைணவ பக்தனாகவும் மாறினான். இத்தலத்தில்
      தன் பெயரில் திருமண மண்டபம் ஒன்றும் கட்டுவித்தான்.
      இப்பெருமானின் முக்கிய பூஜைக்கு நிலம் அளித்தான்.
      தங்கத்தால் விமானம் அமைத்தான். இம்மன்னன் நம்பியின் மீது
      பக்திகொண்டதையும்,     தெய்வவாள்     பெற்றதையும்
      திருமங்கையாழ்வார் தனது பெரிய திருமொழியில்.

      செம்பியன் கோச்செங்கணான் சேர்ந்த கோயில்
          திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
      தெய்வ்வாள் வளங்கொண்ட சோழன் சேர்ந்த
          திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
                  என்றார்.

    7. கருடாழ்வார் தனிச் சிறப்புற்றுத் திகழும் ஸ்தலமாகும் இது. ஆம்.
      இங்குள்ள கருடாழ்வார் மிக்க கீர்த்தியும், பெருஞ்சக்தியும்
      வாய்ந்தவர், மற்ற திவ்ய தேசத்து கருடாழ்வார்களைவிட
      இவருக்கு மகத்துவம் அதிகம்.

      ஒரு சமயம் ஒரு ஊரில் ஒரு சிற்பி ஆகமவிதிகட்கு உட்பட்ட
      முறையில் ஒரு கருடனை செதுக்கி வந்தாராம். சிற்பம் முடியும்
      தருவாயில் கருடனுக்கு இரண்டு புறமும் 2 சிறகுகளைச் செதுக்கி
      அதற்குப் பிராணப் ப்ரதிட்டை (உயிரூட்டுதல் போன்ற
      உயிரோவியமாக) செய்தாராம். உடனே உயிர்பெற்ற கருடன்
      மேல்நோக்கிப் பறக்க ஆரம்பிக்கவே இதைக் கண்டு அச்சமுற்ற
      சிற்பி தம் கையில் இருந்த கல் உளியை எடுத்து கருடன் மேல்
      எறிந்தாராம். மூக்கில் அடிபட்டதால் அந்தக் கருடன் இந்த
      நாச்சியார் கோவிலில் இறங்கி விட்டாராம். அதன் பின்பும்
      உயிர்பெற்று எம்பெருமானின் திருவருளால் இத்தலத்திலேயே
      அமர்ந்து தம்மை வேண்டினோர் அனைவருக்கும் இங்கிருந்தே
      அருள்பாலித்து வருகிறார் என்பது ஐதீகம். இவர் இத்தலத்தின்
      மூலஸ்தானத்திற்கு அருகேயுள்ள மகா மண்டபத்தில் சாளக்கிராம
      வடிவத்தில் நீள்சிறகும், நீள்முடியும், நீண்டு வளர்ந்த
      திருமேனியுடன் கம்பீரத்தோற்றத்தில் எழுந்தருளியுள்ளார்.

      இவர் எழுந்தருளியுள்ள இடம் 10 1/2 சதுர அடி. இவர் வாகன
      மண்டபத்திற்குப் புறப்படும் சமயம் இவர் திருப்பாதங்களை
      நால்வர்     தாங்கிவருவாராம்.     இவரது இருப்பிடம்விட்டு
      வெளிவந்ததும் மூலைக்கு ஒருவராக மேலும் நால்வர். இவ்விதம்
      16 பேர்கள் தாங்கிவர படிகளில் இறங்கும் தறுவாயில் பலபேர்கள்
      தாங்க இந்நிகழ்வு கண்கொள்ளாக் காட்சியாக அமையும். இந்தக்
      கருடன் மீது எம்பெருமான் திருவீதி கண்டருள்வது நாச்சியார்
      கோவில் கருட சேவை எனப் பெரும் புகழ்பெற்றதாகும், பெரிய
      திருவடி தரிசனம் என்றும் இதனைக் குறிப்பிடுவர்.

      இங்கு பெருமாளுக்குத் திருவாராதனம் முடிந்ததும் இவருக்கு 6
      வேளைக்கு அமுதகலசம் ஊட்டப்படுகிறது. அமுத கலசம்
      எனப்படும் இந்த மோதகம் (கொழுக்கட்டை) இவருக்கு மிகவும்
      பிரியமானதாகும். எனவே இவரை மோதக மோதர் என்றும்
      சொல்வர்.

      பக்தியோடு இவரிடம் வேண்டிக்கொள்ளும் வேண்டுதல்கள்
      யாவும் இங்கு அப்படியே நிறைவேறி விடுகிறதென்பது
      கண்கூடான நிகழ்ச்சியாகும்.

    8. திருமங்கையாழ்வாரால் மட்டும் பெரிய திருமொழியில் 100
      பாசுரங்களால் மங்களாசாசனம். நூற்றுக்கும் அதிகமான
      பாசுரங்களை திருமங்கையாழ்வார் அள்ளிப் பொழிந்தது இவர்
      ஒருவருக்கு மட்டும்தான். பெரிய திருமொழி மட்டுமின்றி,
      திருநெடுந்தாண்டகத்திலும் பெரிய திருமடல், சிறிய திருமடலிலும்
      இத்தலத்தினை மங்களாசாசனம் செய்துள்ளார். இத்தலத்தோடும்
      இப்பெருமானோடும் திருமங்கைக்கு உள்ள சம்பந்தத்தை
      விவரித்து தனிப்பெரும் நூலொன்றை யாத்துவிடலாம்.

    9. திருமங்கையாழ்வார் நீலன் என்ற பெயரில் சோழ மன்னனின்
      படைத்தளபதியாயிருந்தார் (கப்பம் கட்டும் குறுநில மன்னனாக
      இருந்தார் என்னும் ஒரு கருத்தும் உண்டு) அப்போது
      திருவெள்ளக் குளத்தில் குமுதமலர் கொய்து செல்ல வந்த தேவ
      மகளான பெண்ணொருத்தி குமுத மலரைக் கொய்து செல்ல
      வேண்டிய குறிப்பிட்ட நேரம் கடந்து விட்டபடியால், விண்ணுக்கு
      செல்ல முடியாது. திருவெள்ளக் குளத்திலேயே நின்று பூவுலகில்
      வாழும் தன்மை பெற்றாள். பேரழகு பொலிந்த தெய்வ
      நங்கையான இவள் குமுத மலருடன் நின்றதால் குமுதவல்லி
      எனப்பட்டாள். இந்நங்கையைப் பற்றிச் செவி மடுத்த
      திருமங்கையாழ்வார் குமுதவல்லியைப் பெண் கேட்டு வந்தார்.

      நான் வைணவ இலச்சிணைகளைத் தாங்கி வைணவ
      லட்சணத்துடன் திகழும் ஒருவனுக்கு மாலையிடுவேன். எனவே
      நீர் வைணவ இலச்சிணை தரித்தே வரவேண்டுமெனக் கூற
      திருமங்கையாழ்வார் திருநறையூர் நம்பியிடம் தமக்கு வைணவ
      அடையாளமிட வேண்டுமென்று கேட்க வைணவ லட்சணமான
      பஞ்ச ஸமஸ்காரங்களை இப்பெருமாளே திருமங்கைக்கு
      செய்வித்தார்.

      பஞ்ச ஸமஸ்காரம் என்பது வைணவ சம்பிரதாயத்தில் மிக
      முக்கியமான கொள்கையாகும். ஒரு தூய வைணவன்
      கடைப்பிடிக்க வேண்டிய ஐந்து நிலைகளாகும். பஞ்ச ஸமஸ்காரம்
      என்பது யாவதோ வெனின், ஒரு சீடன் ஆச்சார்யனிடம்

      1. 12 திருமண்கள் இட்டுக் கொள்ள வகை பெறுதல் அதாவது
        சரீரத்தில் 12 திருநாமங்களை எங்கெங்கு இடுவது ஒவ்வோர்
        திருமண் இட்டுக் கொள்ளும் போது உச்சரிக்க வேண்டிய
        மந்திரம் அம்மந்திரத்தை உச்சரிக்கும் விதம்

      2. புது தாஸ்ய நாமம் தரித்துக் கொள்ளல், அடியார்களின்
        பெயர்களை தமக்கு இட்டுக் கொள்ளல்.

        அதாவது பெற்றவர்கள் இட்டபெயர் எதுவாயிருந்த போதும்
        ஒருவன் வைணவனாக மாறும் பொழுது (விஷ்ணுக்கு
        அடியவன் ஆகும் போது) அவ்வெம்பெருமானின் திரு
        நாமங்களையோ     அல்லது     அவனடியார்களின்
        பெயர்களையோ வைத்துக் கொள்வது (நீலன், திருமங்கை
        ஆகிறார்).

      3. வலது புஜத்தில் (தீயிற் பொலிந்த) சக்கரத்தையும் இடது
        புஜத்தில் தீயிற்பொலிந்த சங்கினையும் இட்டுக் கொள்ளல்.

        அதாவது விஷ்ணு வலது கரத்தில் சக்கரத்தையும், இடது
        கரத்தில் சங்கினையும் கொண்டு திகழ்கிறார். விஷ்ணுவின்
        இந்த இரண்டு சின்னங்களையும் இம்முறைப்படியே தமது
        வலது மற்றும் இடது தோள்களில் தாங்கிக் கொள்ளுதல்
        (அடையாளமிட்டுக் கொள்தல்).

      4. தினந்தோறும் பெருமாளுக்குத் திருவாராதனம் செய்தல்.
        அதாவது தினந்தோறும் ஏதாவது ஒரு பிரசாதம் செய்து
        தூய மனதுடன் அதை எம்பெருமானுக்குப் படைத்து,
        முறைப்படியான பூசை செய்து அதன்பின் தான் சாப்பிடுதல்.

      5. திருமந்திரம் என்னும் நாராயண மந்திரத்தை உணர்ந்து
        உரைக்கும் ஆற்றல் பெறல்.

        அதாவது “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை
        பொருளுணர்ந்து உச்சரிக்கும் முறை.

        இவ்வைந்து வைணவ இலச்சணங்களை (அடையாளங்களை)
        இட்டுக் கொள்ளும் சடங்கிற்கு பஞ்ச ஸமஸ்காரம் என்பது
        பொருள்.

        திருநறையூர் நம்பியே இதை திருமங்கையாழ்வாருக்கு
        செய்து வித்து அவருக்கு ஆச்சார்யரானார். 108
        திவ்யதேசங்களில் வேறெந்தப் பெருமாளும் யாருக்கும்
        பஞ்ச ஸமஸ்காரம் செய்ததில்லை.

        திருநறையூர் நம்பியை உற்று நோக்கினால் அவர் சற்றே
        முன்வந்து பஞ்ச ஸமஸ்காரம் செய்யும் தோற்றத்திலேயே
        இருப்பது போலத் தோன்றும். தானே ஆச்சார்யனாகவும்,
        தானே சிஷ்யனாகவுமிருந்து பத்தி ரியில் எம்பெருமானே
        திருமந்திரத்தை உலகிற்கு இட்டு அருளினான் என்பர்.
        தானே ஆசிரியனாகவும், தானே சீடனாகவும் இருந்ததால்
        பத்திரி எம்பெருமானை முழுமையான ஆச்சார்ய லட்சணம்
        பெற்றவனென்று சொல்ல முடியாது. ஆனால் நறையூரானோ
        தாம் முழு லட்சணம் பெற்ற ஆச்சார்யனாய் இருந்து நீலன்
        என்னும் பக்தனை சீடனாகக் கொண்டு பஞ்ச ஸமஸ்காரம்
        செய்து திருமங்கையாழ்வாராக ஆக்குகிறார்.

        இதனால் எம்பெருமானின் 108 திவ்ய தேசங்களில் சிகரம்
        வைத்த பெருமையை இத்தலம் பெறுகிறது.

    10. பஞ்ச ஸமஸ்காரம் செய்து கொண்ட பின்பு திருமங்கையாழ்வார்
      மீண்டும் குமுதவல்லியை பெண்கேட்டு வந்த போது ஒருவருட
      காலத்திற்குத் தினந்தோறும் ஆயிரம் ஸ்ரீவைணவர்கட்கு அமுது
      படைத்து ததியாராதனம் செய்தால்தான் மணம் புரிந்து
      கொள்வேன் எனக் கூற இதற்கு மேல் நிபந்தனை எதுவும்
      விதிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்ட திருமங்கையாழ்வார்
      ததியாராதனம் செய்யத் தொடங்கினார். (ததி என்றால்
      அடியார்கள் என்பது பொருள். ஆராதனம் - என்பது
      அடியார்களுக்கு அன்னமிடுவதைக் குறிக்கும்)

      கையிலிருந்த பணம் எல்லாம் தீர்ந்து போக ததியாராதனம் செய்ய
      என்ன செய்வதென்ற நிலை வந்தபோது, சோழ மன்னனுக்காக
      வசூலித்த கப்பத் தொகையை எல்லாம் ததியாராதனத்திற்கே
      செலவிட்டார். (இவர் ததியாராதனம் நடத்திய இடம் மங்கை மடம்
      என்ற பெயரில் இன்றும் ஒரு அழகிய ஊராகத் திகழ்கிறது)

      தனக்குச் செலுத்த வேண்டிய கப்பப் பணத்தை இவ்வாறு செலவு
      செய்வதைக் கண்ட சோழன் திருமங்கையாழ்வாரைச் சிறைப்
      பிடித்தான். இந்த நாச்சியார் கோவிலில் சிறை வைத்தான். மூன்று
      நாள் அன்ன ஆகாரமின்றி இருந்தார். அன்றைய நாள் இரவில்
      எம்பெருமானிடம்     மனம் உருகி வேண்டிக்கொண்டார்.
      திருமங்கையின் கனவில் வந்த நறையூரான் “காஞ்சிபுரம் வேகவதி
      நதியில் நிதியை எடுத்து பகுதிப் பணத்தை செலுத்தி சிறைவீடு
      செய்து கொள்ளும்” என்று திருவாய் மலர்ந்தருளினார்.

      நனவில் சென்றார்க்கும் நண்ணற் கரியானை
      நானடியேன் நறையூர் நின்ற நம்பியை
      கனவில் கண்டே னின்று ..............
      என்பது திருமங்கையாழ்வாரின் அமுத வாக்கு.

      கப்பம் கேட்க நான்காம் நாள் காலையில் சேவகர்கள் வந்து
      கேட்ட போது “காஞ்சிபுரத்திற்கு வாரும் மாதனம் காட்டுகிறோம்”
      என்று சொல்ல சோழனும் அவ்வாறாயின் உண்மை நிலையைச்
      சென்று கண்டு வருக என்று படைத் தளபதியை அனுப்ப,
      வேகவதி ஆற்றங்கரையில் பெரும் புதையலைக் காட்டி கப்பம்
      தீர்த்தார்.

      இங்ஙனம் பஞ்ச ஸமஸ்காரம் செய்துவித்தது மட்டுமின்றி
      ததியாராதனத்திற்கும் திருநறையூரானே வழிவகுத்தான்.

    11. இவ்வூரில் வாழ்ந்த ஒரு வைதீகப் பிரம்மச்சாரிக்கு 108 திவ்ய
      தேசங்களை காணவேண்டும் என்ற பேராவல் இருந்தது. ஆனால்
      காலச்     சூழ்நிலையால்     அது     இயலவில்லை.     108
      எம்பெருமான்களையும் சேவிக்க வேண்டுமென தினந்தோறும்
      இப்பெருமானை கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டார். இந்த
      பக்தருக்காக அவரது கனவில் திருநறையூர் ஸ்ரீனிவாசனே நேரில்
      வந்து 108 திவ்யதேசத்து எம் பெருமான்களின் விக்கிரகங்களைக்
      கொடுத்ததாகவும், நெடுங்காலம் தமது இல்லத்தில் வைத்து
      பூஜித்த இவைகளை தமது அந்திம காலத்தில் இத்தலத்தில்
      ஒப்படைத்ததாகவும் கூறுவர். இந்த 108 திவ்யதேசத்து
      எம்பெருமானின் விக்ரகங்களை இத்தலத்தில் இன்றும் காணலாம்.

    12. இத்தலம் திருமடல் பரிசு பெற்ற ஸ்தலம் என்றும் கொள்ளலாம்.
      அதாவது மடலேறுதல் என்பது சங்க காலத்து பழந்தமிழர்
      பண்பாடு. சங்க காலக் காதலில் தலைவியை அடையமுடியாத
      தலைவன் தான் தலைவியின் பால் கொண்டுள்ள காதலை
      உலகறியச் செய்வதற்காக பனை மடலால் ஒரு குதிரை செய்து
      தன் காதலியின் உருவத்தை ஒரு கொடியில் வரைந்து அதை ஒரு
      கையில் தாங்கிக் கொண்டு எருக்கம் பூ மாலையணிந்து
      தலைமயிரை விரித்துக் கொண்டு, இவள் தான் என்னைக்கைவிட்ட
      இரக்கமில்லாதவள் என்று கண்ணீர் சிந்திக்கதறியழுது அக்குதிரை
      மீதேறி தெருவில் வலம் வருதலாகும்.

      தன்னை நாயகியாகப் பாவித்து, எம்பெருமானை நாயகனாகப்
      பாவித்துக் கொண்ட திருமங்கை, தனக்கு எம்பெருமான்
      முகங்காட்டாதேயிருப்பின் தான் மடலூர்வன் என்கிறார்.

      எம்பெருமான் மீது கொண்ட காதலை வெளிப்படுத்த
      மடல்விடுத்தார் திருமங்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல்
      என்னும் இரு மடல் விடுத்தார். இரண்டு திருமடல்களிலும்
      எம்பெருமான் எழுந்தருளியுள்ள பல திவ்யதேசங்களை
      திருமங்கையாழ்வார்     குறிக்கிறாரென்றாலும்     “மடலூர்ந்தது
      திருநறையூருக்காகவே” என்று பெரியோர்கள் தலைக்கட்டுவர்.
      இதற்குச் சான்றாக,

      அ) “ஊரா தொழியேன் உலகறிய ஒன்னுதலீர்
      சீரார் முலைத்தடங்களை சேரளவும் - பாரெல்லாம்
      அன்று ஓங்கி நின்று அளந்தான் நின்ற திருநறையூர்
      மன்னோங்க ஊர்வன் மடல்”
           என்று கம்பர் குறிப்பதிலிருந்து உணரலாம்.

      ஆ) திருமங்கையாழ்வார் திருவரங்கத்திற்கு மதில் கட்டினார்.
      இதனால் இவர்மேல்உகந்த அரங்கன் ஆழ்வாருக்குத் தீர்த்தம்,
      திருமாலை, பரிவட்டம், சடகோபம் போன்றவற்றை அளித்து,
      “ஆழ்வீர் திருமடல் பிரபந்தங்களை நமக்கு அருளிச் செய்யல்
      ஆகாதோ” என்றார்.

      அதற்கு திருமங்கை எம்பெருமான் முன் பணிந்து வாய் புதைத்து
      நின்று நம்பிக்குத் திருமடலும், தேவரீருக்கு திருமதிலும்
      அமைந்தது. மதில் இங்கே மடல் அங்கே என்று மாற்றஞ்
      சொன்னாராம்.

      இச்சான்றுகளன்றியும் பிள்ளத் திருநறையூர் அரையர் என்பார்
      அருளிச் செய்த பெரிய திருமடலுக்கான தனியனில்
      (தனிப்பாடலில்)

      “பொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றிச் செய்யும்
      நன்னுதலீர் நம்பி நறையூரர் - மண்ணுலகில்
      என்னிலமை கண்டும் இரங்காரே யாமாகில்
      மன்னு மடலூர்வன் வந்து”

      என்றுரைத்த சான்றுகளாலும் இம்மடல் நறையூர் நம்பிக்கே
      மொழிந்த ஒன்றாகக் கொள்வது மட்டுமன்றி அவனுக்கே
      உரித்தானது என்றும் உரைக்கலாம்.

      இங்கே ஒரு சிறிய இலக்கிய சர்ச்சை.

      மடலூர்தல் என்பது ஆடவருக்குத்தானே ஒழிய பெண்டிர்க்கு
      இல்லை என்பது இலக்கணம்.

      கடலன்ன காமம் உழன்றும் மடலேறாப்
      பெண்ணிற் பெருந்தக்க தில்.
              என்பார் வள்ளுவர்.
      எத்தனை மருங்கினும் மகடுஉ மடன்மேற்
      பொற்புடை நெறியின்மை யான

      என்று மடற்மேற் செல்லும் நெறி மகளிருக்கு இல்லையென
      அகத்தினை இயல் இலக்கணங் காட்டுகிறது.

      அவ்வாறெனில் நாயகி பாவத்தையேற்று பெண்தன்மையேறிய
      திருமங்கையாழ்வாருக்கும் மடலூர்தல் எங்ஙனே பொருந்துமென
      ஒரு சங்கை எழலாம். தண்டமிழ் காட்டும் விதிமுறைகளை மீறாத
      தாண்டக வேந்தனன்றோ நம் மங்கை மன்னன். எனவேதான்,
      மடலூர்வன் மடலூர்வன் என்றே குறிக்கிறார். (மடல் ஏறவில்லை
      என்பதே குறிப்பு) எம்பெருமான் முகங்காட்டாதேயிருப்பின்
      நிச்சயம் மடலூர்வன் என்கிறார். ஒண்தமிழ்     கூறும்
      இலக்கணங்கட்குப் புறம்பாக போக வொட்டேன். ஆயின் நீ
      முகங்காட்டாதே இருப்பாயாகில் மடலேறுதல் பெண்டிருக்கும்
      உண்டு என்று வடநூலார் கூறியுள்ளார். அதையும் மறந்துவிட
      மாட்டேன் என்று எச்சரிக்கிறார்.

      மன்னும் வழிமுறையே நிற்கும் நாம் - மானோக்கின்
      அன்ன நடையார் அலரேச ஆடவர் மேல்
      மன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும்
      தென்னுரையில் கேட்டறிவதுண்டு
              - அதனையாம் தெளியோம்

      மன்னும் வட நெறியே வேண்டினோம்............................

      என்று துணிந்து கூறுகிறார். அத்தோடு விட்டாரில்லை.
      எம்பெருமான் கண்ணனாக அவதரித்த காலத்தில் அவனது
      குடக்கூத்தில் அகப்பட்டுக்கொண்ட ஆய்ச்சி ஒருத்தி அவனை
      அனுபவிக்க முடியாமல் வருந்தி மடலேறத் துணிந்தாள்.
      அவளைப் போல் எம்பெருமான் பால் காதல் மயக்குண்ட
      வடநாட்டுக் கன்னிகையரான வேகவதி, உலாபிகை, போன்ற
      பெண்களின் வரலாற்றையும் தமது பெரிய திருமடலில் காட்டி
      எம்பெருமானைப் பயமுறுத்துகிறார்.

      தமிழின் பாலும், திருமங்கையின் பாலும், ஆராப்பற்றுக் கொண்ட
      ஆராவமுதனுமாகிய     எம்பெருமான்     இவருக்கு முகம்
      காட்டிவார்த்தையாடி இவர் பக்கம் கனிந்து நின்றதால் மடலேறாது
      விட்டார்.

      (நறையூர் நம்பி இவருக்கு பஞ்ச ஸமஸ்காரம் செய்ததை
      முகங்காட்டியதாகவும், வயலாளி மணவாளன் திருமந்திர உபதேசம்
      செய்தவைார்த்தையாடியதாகவும் கொள்ளலாம்)

      இவ்விதம் திருமங்கையாழ்வாரிடம் மடல் பரிசு பெற்றது
      இத்தலத்திற்குண்டான தனிச் சிறப்பாகும். 108 திவ்யதேசங்களில்
      இத்தகு சிறப்பு வேறெந்த தலத்திற்கும் இல்லை.

    13. திவ்ய தேசத்தின் பெயரோடு நம்பி என்று சேர்த்தழைக்கப்படும்
      திவ்ய தேசங்களுள் இதுவும் ஒன்று. இவ்வகையில் திருக்குறுங்குடி
      நம்பியும், திருநறையூர் நம்பியும் மிகு புகழ் பெற்றவர்கள்.

      இப்பெருமானை நம்பி என்று மொழிந்தார் திருமங்கையாழ்வார்.
      நம்பி என்றால் பூரணர் என்பது பொருள். நற்குணங்களால்
      நிறைந்தவர் என்பதும் பொருள்.

      வைணவ     சம்பிரதாயத்தில்     நம்பி என்னும் சொல்
      ஆச்சாரியர்களைக் குறிக்கும். இத்திருப்பெயரை முதலில்
      மதுரகவியாழ்வார் தமது ஆச்சார்யரான நம்மாழ்வாருக்குச்
      சூட்டினார். “நண்ணித் தென்குருகூர் நம்பி என்றக்கால்
      அன்னிக்கே அமுதூறும் என் நாவுக்கே” என்றார்.

      அவ்விதமே தமக்கு வைணவ லட்சணத்தைப் பொறித்து மந்திர
      உபதேசம் செய்த இந்த (ஆச்சார்யனை) எம்பெருமானை நம்பி
      என்றழைத்தார் திருமங்கை.

      நாளும் விழவினொலியோவா நறையூர் நின்ற நம்பியே
          நறவார் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பியே
      கமலம் முகம் காட்டும் நறையூர் நின்ற நம்பியே
          நன்மான வொண்சுடரே நறையூர் நின்ற நம்பியே
      என்றெல்லாம் மாந்தி மகிழ்கிறார்.

    14. இத்தலத்து எம்பெருமானை திருமணக்கோலத்தில் நாள்தோறும்
      பிரம்மனால் பூஜிக்கப்படும் தலம் என்று புராணங்கள் கூறுகின்றன.

    15. திருமங்கையாழ்வாருக்கு     திருக்குடந்தை     ஆராவமுதன்,
      திருவரங்கத்து அரங்கன், நறையூர் நம்பி இம்மூவரும் தத்வத்ரஸம்
      போன்றவர்கள் அதாவது ஜீவாத்மா, பரக்ருதி, உடல்
      போன்றவர்கள்

      அதாவது, திருமங்கையாழ்வார் திருக்குடந்தை யானைச்
      சேவிக்கும்போது,

      “ஆவியே அமுதே என நினைந்துருகி” - 949

      என்று தனது ஜீவன் திருக்குடந்தையான் என்று தலைக்
      கட்டுகிறார்.

      திருவரங்கத்தெம் பெருமானிடம்தான்     இவர் மோட்சம்
      வேண்டுமெனக் கேட்கிறார். அதாவது     அரங்கனையே
      பரமபதநாதனாக (பரக்ருதி) கொண்டு மோட்சம் கேட்கிறார்.
      அவர் திருமங்கையை நோக்கி மோட்சம் வேண்டுமாகில் நீ,
      நமது தெற்கு வீட்டுக்குப் போ என்று கூறுகிறார்.

      உந்தி மேல் நான்முகனை
      படைத் தானுல குண்டவன்
      எந்தையெம்மான் ......................... 1378

      என்று இவ்வரங்கத்து எம்பெருமானையே பரமபத நாதனாக்
      கண்டு அவனது வ்யூகத்தை வர்ணிக்கிறார். எனவே இவர்
      திருமங்கைக்கு பரக்ருதியானார்.

      திருநறையூரானே திருமங்கைக்கு குமுத வல்லியாரைக் காட்டிக்
      கொடுத்தமையாலும், அவரது திருமேனியில் பஞ்ச ஸமஸ்காரம்
      செய்வித்து, திருமந்திரம் உரைத்து உடல் விளக்கம் செய்தமையால்
      இவர் உடலாகிறார்.

    16. சடகோபன் (நம்மாழ்வார்) நாயிகா பாவத்தை அடைந்து
      ஸ்ரீதொலைவில்லி     மங்கலத்தெம்பெருமானை     நாயகனாக
      அனுபவித்தார்.

      ஸ்ரீபரகாலன் (திருமங்கையாழ்வார்) நாயிகா பாவத்துடன்
      திருவாலியெம்பெருமானை அனுபவித்தார்.

      ஸ்ரீமத் இராமானுஜர் திருநாராயணபுரத்து எம்பெருமானை என்
      செல்லப்பிள்ளையே என்று அனுபவித்தார்.

      பெரியாழ்வார்     தன்னைத்     தாயாகவும்,     கண்ணனைக்
      குழந்தையாகவும் கொண்டு தாய்ப்பாவம் காட்டினார்.

      ஆனால் இவர்களையெல்லாம் விஞ்சி இப்பெருமான் மீது மோகம்
      கொண்டு மடல் விடுத்தார் திருமங்கை.

    17. திருநறையூர் எம்பெருமானின் பேரழகில் திருமங்கையாழ்வார்
      மையல் கொண்டது எண்ணியெண்ணி வியக்கத்தக்கதாகும்.
      நறையூர் எம்பெருமானை இப்படி வர்ணிக்கிறார்.

      மன்னு மறையோர் திருநறையூர் மாமலை போல்
      பொன்னியலும் மாடக் கலாடம் கடந்து புக்கு
      என்னுடைய கண்களிப்ப நோக்கினேன் - நோக்குதலும்
      மன்னன் திருமார்பும் வாயும் - அடியினையும்
      பன்னு கரதலமும் கண்களும் - பங்கயத்தின்
      பொன்னியல் காடோர் மணிவரைமேல் பூத்ததுபோல்
      மின்னி ஒளி படைப்ப வீழ்நாணும் தோள் வளையும்
      மண்ணிய குண்டலமும் ஆரமும் நீண்முடியும்
      துன்னு வெயில் விரித்த சூளா மணியிமைப்ப
      மன்னு மரகதக் குன்றின் மருங்கே
               (பெரிய திருமடல் 73-77)

      என்று மின்னும் மரகதக் குன்று என பெருமானை
      வர்ணித்துக்கொண்டே வரும்போது அவனருகே பிராட்டி
      நிற்பதையும் கவனித்துவிட்டார்.

      உடனே ....................... ஓர்

      இன்னிள வஞ்சிக் கொடியொன்று நின்றதுதான்
      அன்னமாய் மானாய் அணிமயிலாய் ஆங்கிடையே
      மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச் செப்பாய்
      முன்னாய தொண்டையாய் கெண்டைக் குலமிரண்டாய்
               - பெரிய திருமடல் (77-80)

      என்று மருங்கே நின்ற பிராட்டியையும் வர்ணித்தார். இவ்வளவு
      பேரழகாய்ப் பிராட்டி நிற்பதையும் அறியாது என் மனமானது
      அவன் பக்கம் சென்றே மையல் கொண்டு நிற்கிறதே என்பதை,

      அன்ன திருவுருவம் நின்றதறியாதே
      என்னுடைய நெஞ்சும் அறிவும் இனவளையும்
      பொன்னியலும் மேகலையும் ஆங்கொழியப் போந்தேற்கு
      மன்னும் மறிகடலும் ஆர்க்கும் - மதியுகுத்த
      இன்னிலாவின் கதிரும் என்றனக்கே வெய்தாகும்
              - பெரிய திருமடல்ஃ (81 - 85)

      என்று அவனை விட்டு நீங்காத உணர்வு கொண்டு நிலவொளி
      கூட வேகிறதே என்கிறார். என்னே காதல் மயக்கம்

    18. சிவபிரானுக்கு 70 திருக்கோயில்களை எழுப்பிய கோச்செங்கண்
      என்னும் சோழ மன்னன் வைணவத்தில்     ஈடுபட்டு
      இப்பெருமானிடம் பேரன்பு பூண்டதை,

      முருக்கிலங்கு கனித்துவர் வாய்ப்பின்னை கேள்வன்
      மன்னனெல்லாம் முன்னவியச் சென்று, வென்றிச்
      செருக்களத்து திறலழியச் செற்ற வேந்தன்
      சிரந் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்
      இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோளீசற்கு
      எழில் மாட மெழுபதும் செய் துலக மாண்ட
      திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில்
      திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
              என்கிறார் திருமங்கையாழ்வார் -1505

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:32:57(இந்திய நேரம்)