தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • பாண்டவநூதப்பெருமாள் கோவில் - திருப்பாடகம்
    சிறப்புக்கள்
    1. அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள எம்பெருமான்களில் 25 அடி
      உயரத்தில் பிரம்மாண்டமான ரூபத்தில் தன்னை ஏமாற்ற
      நினைப்பவர்களை ஏமாற்றி விடும் குறிப்பை உணர்த்தும் அழகுத்
      திருமேனியுடன் திகழும் இவ்வெம்பெருமானை 108 திவ்ய
      தேசங்களில் மட்டுமன்றி இந்தியாவில் கூட வேறெங்கும் கூட
      சேவிக்க முடியாது.

    2. கர்ப்பக் கிரஹத்தின் அமைப்பை உற்று நோக்கினால்
      நிலவறையின் மொத்தப்பகுதியை அப்படியே பெயர்த்து தலைக்கு
      மேல் குவித்து வைத்தால் எப்படி இருக்குமோ அதுபோல்
      தோன்றுகிறது.     மிக     சிறிய     அளவில் இச்சன்னதி
      அமைந்திருந்தாலும், கர்ப்பக்கிரஹத்தின் குவிந்த அமைப்பும்,
      அதனடியில் பிரம்மாண்டமான திருக்கோலத்தில் எம்பெருமான்
      வீற்றிருப்பதும் ரசித்துப் பார்க்கத் தக்கது மட்டுமன்றி
      பேராச்சர்யம் தருவதுமாகும்.

    3. எம்பெருமானின் நின்ற அமர்ந்த கிடந்த திருக்கோலங்கட்கு
      தொண்டை நாட்டில் உள்ள இந்த மூன்று ஸ்தலங்களே ஒரு
      காலத்தில் புகழ் பெற்றிருந்ததெனச் சொல்லலாம். அதாவது நின்ற,
      இருந்த, கிடந்த திருக்கோலம் என்றாலே அது ஊரகம், பாடகம்,
      வெஃகா தான் என்று சொல்லாமல் சொல்வதைப் போலவும்,
      எல்லோராலும் - மூன்று திருக்கோலங்கட்கு இந்த மூன்று
      ஸ்தலங்கள்தான் என்று அறியப்பட்டதாயும், காஞ்சி மண்ணிற்கே
      தனித்துவமும் முக்கியத்துவமும் பெற்றுத் தந்த ஸ்தலங்களாக
      விளங்குகின்றது என உணர முடிகிறது.

      108     திவ்ய தேசங்களில் நின்ற     திருக்கோலத்திற்கு
      வேங்கடமலையானையும்,     அமர்ந்த     திருக்கோலத்திற்கு
      பத்ரிநாதனையும், கிடந்த திருக்கோலத்திற்கு திருவரங்கத்து
      அரங்கனையும்     தனித்துவம்     படுத்தலாமென்றிருந்தாலும்
      ஆழ்வார்கள், நின்ற, கிடந்த, இருந்த திருக்கோலங்கட்கு
      காஞ்சியில் உள்ள இந்த மூன்று ஸ்தலங்களையே குறித்து
      மங்களாசாசனம் செய்துள்ளனர் என்று கொள்ளலாம்.

      அதாவது நின்ற, இருந்த, கிடந்த திருக்கோலமெனில் அவைகள்
      ஊரகம், பாடகம், வெஃகாதான் பிறவன்று என்றும் உரைக்கலாம்.

      அ) வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத
          பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும் - நான்கிடத்தும்
          நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தானே
          என்றால் கெடுமாம் இடர்.

      என்ற     பொய்கையாழ்வாரின் பாசுரத்தில் வெஃகாவைக்
      குறிப்பிட்டிருப்பது தொன்மைக்காலத்தே 108 திவ்ய தேசங்களில்
      மூன்று திருக்கோல எம்பெருமான்களை ஒரு சேரக் குறித்தால்
      அது இந்த தொண்டை மண்டலத்தின் முத்தலமேயென்பதில்
      ஐயமில்லை.

      ஆ) இசைந்த வரவமும் வெற்புங் - கடலும்
          பசைந்தங்கு அமுது படுப்ப - அசைந்து
          கடைந்த வருத்தமோ கச்சி வெஃகாவில்
          கிடந்திருந்து நின்றதுவு மங்கு - 2345
          என்று பேயாழ்வார் உரைப்பதும்.

      இ) குன்றிருந்த மாட நீடும் பாடகத்தும் ஊரகத்தும்
      நின்றிருந்து வெஃகனைக் கிடந்ததென்ன நீர்மையே-814

      என்று     திருச்சந்த விருத்தத்தில் திருமழிசையாழ்வாரும்
      கூறியிருப்பதில் 108இல் உள்ள பிற ஸ்தலங்களை - மூன்று
      திருக்கோலங்கட்கும் சுட்டவில்லை.

      ஈ) நின்றவாறும் அன்றியும் இருந்தவாறும் கிடந்தவாறும்
      நினைப்பரியன. ஒன்றலா உருவாய் அருவாய நின்
      மாயங்கள் - (திருவாய்மொழி 5.10.6)

      என்ற நம்மாழ்வாரின் மங்களாசாசனத்திற்கு

      திருவூரகத்தில் நின்றபடியும், திருப்பாடகத்திலே இருந்தபடியும்
      திருவெஃகாவிலே கிடந்த படியுமாதல் - என்று ஈடு
      வ்யாக்யானம் சுட்டியிருப்பதும் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது.

      எனவே ஆழ்வார்கள் காலத்திலும், அதற்கு முந்திய தொன்மைக்
      காலத்திலும் நின்றிருந்த கிடந்த திருக்கோலமென்றாலே அது
      மேற்படி மூன்று தலங்களையே குறிக்கும் என்பதில் ஐயமில்லை.

      மிகப் பிற்காலத்திலேதான் நின்ற திருக்கோலத்திற்கும் அமர்ந்த,
      கிடந்த திருக்கோலங்கட்கும் 108இல் பிற ஸ்தலங்கள் பிரசித்தி
      பெற்றன வென்று சொன்னால் அது மிகையல்ல.

      காஞ்சி மண்ணில் முத்தீபம் போல் இலங்கும் இத்தலங்கள்
      தொண்டை மண்டலத்திற்கே தனிப்புகழ் ஏற்றுத் தந்தன
      வென்பதும் மறுக்க முடியாததாகும்.

    4. ஸ்ரீஇராமானுஜரிடம் வாதப்போரிலே தோற்றுப்போன யக்ஞ
      மூர்த்தி என்னும் அத்வைதி ஸ்ரீஇராமானுஜரின் உண்மை
      சொரூபம் தெரிந்து அவரிடமே சரணாகதியாகி அவரிடம்
      சீடரானார். அவருடைய பெயரை அருளாளப் பெருமாள்
      எம்பெருமானார் என்று இராமானுஜர் மாற்றி அவரை விஷ்ணுவின்
      தொண்டராக்கி விஷ்ணு கைங்கர்யம் செய்ய வைத்தார். இந்த
      அருளாளப் பெருமாள் ஜீவித்திருந்தது இந்த திவ்ய
      தேசத்தில்தான். இங்கு அவருக்குத் தனி சன்னதியுண்டு.

    5. பூதத்தாழ்வார், பேயாழ்வார்,     திருமழிசையாழ்வார்,
      திருமங்கையாழ்வார் ஆகிய நால்வரால் 6 பாசுரங்களில்
      மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம்.

    6. மணவாள மாமுனிகளும் இங்கு எழுந்தருளி மங்களாசாசனம்
      செய்துள்ளனர்.

    7. நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில், பிள்ளைப் பெருமாளையங்கார்
      தவம் புரிந்த சேதனரைச் சந்திரன் ஆதித்தன்
      சிவன் பிரம்மனிந்திரனா செய்கை - உவந்து
      திருப்பாடக மருவுங் செங்கண் மால் தன் மார்
      பிருப்பாடக உரையாலே

      யார் எந்தப் பயனைக் கருதி தவம் செய்யினும் அந்தப்
      பயனாகவே எம்பெருமான் அவர்கட்கு வருகிறான். சந்திரன்,
      சூரியன், சிவன், பிரம்மன், இந்திரன் என்று அவரவர்களின்
      எண்ணங்கட்கேற்ப நியமித்து அவர்களின் தவத்திற்கு மகிழ்ந்து
      பயனளிக்கிறான். அத்தகையோன்தான் இந்த பாடகத்துள்ளான்.
      (ஜெனமேஜெய மகாராசனுக்கும் அவர் விரும்பியவாறே வந்து
      காட்சி தந்தான்)

    8. எம்பெருமானுக்கு எத்தனையோ திருப்பெயர்கள் இருக்க
      பக்தர்களின் கைங்கர்யத்திற்காகவே சென்ற பாண்டவ தூதன்
      என்ற தனது கைங்கர்ய திருநாமத்தையே கொண்டு இத்தலத்தில்
      இருப்பது ஒரு தனிப்பெருஞ் சிறப்பாகும். இவ்விடத்தில்
      பிராட்டியும் கம்பீரமாகத் திகழும் பாண்டவதூதரின் திருமார்பை
      விட்டகலாது கேட் போருக்குப் பயனளிக்க (புருஷாகாரமாக)
      சிபாரிசு செய்து எழுந்தருளியுள்ளார். எண்ணரும் சிறப்புக்
      கொண்டதன்றோ இத்தனித்துவம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:36:48(இந்திய நேரம்)