தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • நந்தா விளக்குப் பெருமாள் கோவில்
    திருமணிமாடக் கோவில்

    சிறப்புக்கள்
    1. பத்ரிகாச்ரமத்தில் இருக்கும் ஸ்ரீமந் நாராயணனே இங்கு 11
      திருமால்களில் ஒருவராக வந்து நின்றார். பத்ரியிலும் நாராயணன்
      என்ற பெயரிலேயே அமர்ந்த திருக்கோலம், இங்கும் அதே
      நிலை. பத்ரிகாஸ்ரமத்தில்தான் ஸ்ரீமந்நாராயணன் திருமந்திரத்தை
      உபதேசித்தருளினார். எனவேதான் எமக்கும் அந்த மந்திரத்தை
      யருளாயென தேவர்கள் இங்கு வந்து வேண்டுகின்றனர். என்பது
      ஐதீகம். திருமந்திரம் உபதேசித்த பெருமாளே இங்கு
      எழுந்தருளியிருப்பதால் இது பத்ரிக்குச் சமமான ஸ்தலம்.

    2. எம்பெருமான், சிவனின் நடனத்தை நிறுத்த, திருநாங்கூரில்
      பிரவேசித்தபோது இந்த ஸ்தலத்தினருகில் சிவன் நடனம்
      புரிந்துகொண்டு இருந்ததாகவும், ஸ்ரீமந் நாராயணனைப் பரமபத
      நாதனாகக் கண்ட பரமேஸ்வரன் தன்னைப்போல் 11
      உருக்கொண்டு பெருமாள் காட்சி தர வேண்டுமென விண்ணப்பம்
      செய்ய, அவ்விதமே எம்பெருமான் 11 திருக்கோலங்களில் காட்சி
      தந்து ஒரு சிவனை அழைத்து ஒரு சிவனுக்குள் செலுத்தி பிறகு
      இன்னொரு சிவனை அழைத்துச் செலுத்தி இந்த விதமாக 11
      சிவன்களை ஒன்றாக்கி நிறுத்தினார் என்பது ஐதீஹம்.

      இந்த மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாளே பத்து
      திருமேனிகளை எடுத்துக் கொண்டு தாம் ஒரு திருமேனியாக
      வந்ததாயும் கூறுவர்.

    3. திருநாங்கூர் கருடசேவைத் திருவிழா இந்த ஸ்தலத்திற்கு
      முன்புதான் நடைபெறுகிறது. 11 எம்பெருமான்களும் இங்கு
      எழுந்தருள திருமங்கையாழ்வார் ஒவ்வொரு பெருமானையும்
      வலம்வந்து (மாலை மரியாதைகளுடன்) மங்களாசாசனம் செய்யும்
      காட்சி தை அமாவாசைக்கு மறுநாள் இங்கு நடப்பது
      கண்கொள்ளாக் காட்சியாகும். திருமங்கையாழ்வார் ஒவ்வொரு
      பெருமாளாக     மங்களாசாசனம்     செய்துவரும்போது
      அப்பெருமாளுக்கு உரிய பாசுரங்களை பக்தர்களுடன் சேர்ந்து
      பாடல் வல்லார் சேவிப்பது செவிக்கினிய விருந்தாகும்.

    4. திருக்கோட்டியூர் நம்பி இங்கு விஜயம் செய்துள்ளார்.
      திருமந்திரத்தை உபதேசித்த பத்ரி நாராயணன் இருக்கும்
      இடமல்லவா இது. திருமந்திரத்தை இராமானுஜருக்கு உபதேசித்த
      திருக்கோட்டியூர்நம்பி இங்கு எழுந்தருளியிருப்பது முறைதானே.

    5. மிகச்சிறந்த வடிவமைப்புடன் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ள
      இக்கோவில் மாடக்கோவில் என்று சொல்லுமாற்றான் சிறந்து
      விளங்குகிறது.

    6. திருமங்கையாழ்வாரால் மட்டும் 12 பாசுரங்களில் மங்களாசாசனம்
      செய்யப்பட்டுள்ளது.

    7. சீதளமான பூமியோடு, இயற்கையெழில் கொஞ்ச செந்நெல்வயல்கள்
      சூழ, நிறைந்த பொழில்களில் மந்தாரம் நின்றிலங்க மிகவும்
      ரம்மியமாகத் திகழும் இப்பகுதியில் (திருநாங்கூர் பகுதி)
      இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் வருகையும்
      வாழ்வும்     திருமங்கையாழ்வாரின்     பாசுரங்களில் சுட்டிக்
      காட்டப்பட்டுள்ளது.

    8. பழனம் என்று சொல்லத்தக்க அளவில் அமைந்துள்ள
      இப்பகுதியில் பைங்காற் கொக்கும், செங்கால் அன்னமும், குயிலும்,
      மயிலும், கிளியும், புறாவும் தம் துணையோடு பறந்து ஒன்றித்
      திளைத்து விளையாடி மகிழும் காட்சிகள் திருமங்கையாழ்வாரின்
      பாடல்களிலும் பயின்று வந்துள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:41:30(இந்திய நேரம்)