Primary tabs
-
காளமேகப் பெருமாள் கோவில் - திருமோகூர்
சிறப்புக்கள்-
பிரம்மன் இவ்விடத்தில் திருமாலைக் குறித்து தவம் செய்தார்.
இதனை பிரம்மாண்ட புராணம், மாத்ஸய புராணம் இரண்டும்
ஸ்தல வரலாறு பற்றிக் கூறும் விவரங்களுடன் கலந்து
தெரிவிக்கின்றது.நாராயணன் தமது உந்திக்கமலத்திலிருந்து பிரம்மனைப் படைத்த
அதே நேரத்தில் அவரது காதுகள் வழியாக, மது, கைடபன் என்ற
இரண்டு அரக்கர்கள் தோன்றினர். இவ்விருவரும் பிரம்மனருகே
இருந்த வேதப் புத்தகங்களைத் திருடிக் கொண்டுபோய் பாதாள
லோகத்தில் மறைத்து வைத்துவிட்டனர்.மஹா விஷ்ணு மத்ஸயவதாரம் (மச்ச-மீன்) எடுத்து பாதாளம்
சென்று அவ்வேதப்புத்தகங்களை மீண்டும் எடுத்து (ஹயக்ரீவ
அவதாரம்) பிரம்மனிடம் சேர்ப்பித்தார்.இதனையறிந்த அரக்கர்கள் இருவரும், எம்பெருமானின்
நாபிக்கமலத்திலிருந்து செல்லக் கூடிய தாமரைத் தண்டினைப்
பிடித்து ஆட்டி பிரம்மனுக்கு இடையூறு விளைவிக்கவே
மிகவும் சினம்கொண்ட எம்பெருமான் அவ்விருவரையும் பிடித்து
தனது தொடையிலடித்து முறித்துக் கடலில் தூக்கி எறிந்தார்.
அவர்களின் வாயிலிருந்து மிகுதியான ரத்தத்தை தங்கள் உடம்பில்
கக்கிக் கொண்டு சமுத்திரத்தில் வீழ்ந்ததால் சமுத்திர ஜலமும்
கெட்டியானது.அதற்கு முன் அவனியென்றழைக்கப்பட்டு வந்த இப்பூமி
அவ்வரக்கர்களின் கொழுப்பினால் வியாபிக்கப்பட்டு மேடாகி
“மேதிநீ’ என்றாயிற்று. இதனால்தான் பூமிக்கு மேதிநீ என்ற
பெயரும் வந்த தென்றும் பெரியோர் சொல்வர். (பிர்ம்மாண்ட
புராணம், மோஹன ஷேத்ர மஹாத்திமியம் ஸ்லோகம் 26)தனக்கு மீண்டும் வேத நூல்களை அளித்து அரக்கர்களை
அழித்தமைக்கு நன்றி கூறும் முகத்தான் பிரம்மன் இவ்விடத்திற்கு
வந்து ஒரு தடாகம் (பிரம்ம தீர்த்தம்) உண்டாக்கி பெருமானுக்கு
திருவாராதனக் கைங்கர்யத்தை தினந்தோறும் செய்து வர
இறுதியில் எம்பெருமான் பிரத்தியட்சமானார். தேவர்களுக்கு அமிர்தம் கொடுப்பதற்கு இத்தலம் காரணமாக
இருந்தமையால் தேவேந்திரனால் அனுப்பப்பட்ட சிற்பிகளுடன்
விஸ்வகர்மாவும் சேர்ந்து இந்தக் கோவிலின் விமானத்தை
(கேதச விமானத்தை) அமைத்தனர்.மோகினி அவதாரத்துடன் இங்கு நின்று கொண்டிருந்த
மஹாவிஷ்ணுவை, மோகினி என்றே நினைத்த சிவன், அவ்வழகில்
மயங்கி, உன்னழகால் கவரப்பட்ட நான் உன்னை ஆலிங்கனம்
செய்து கொள்ள எத்தனிக்கிறேன் என்று சொல்ல, மோகினியாய்
நின்ற விஷ்ணு, அப்படியேயாகட்டும் என்று சொல்லி
தன்னையொத்த இன்னொரு மோகினியை அங்கே ச்ருஷ்டி
செய்துவிட்டு மறைய, இது விஷ்ணுவின் மாயை என்று தெளிந்த
சிவபிரான் “விஷ்ணுவின் மாயையால் யார்தான் மயங்கார்” என்று
தன்னை நொந்துகொண்டு ப்ரமத்தை அடைந்தார். அம்மாயையும்
அப்போதே மறைந்தது.(மாத்ஸ்ய புராணம் பதினோராம் அத்தியாயம் ஸ்லோகம்
54 1/2 - 61 1/2)நம்மாழ்வார் 11 பாசுரங்களாலும், திருமங்கையாழ்வார் ஒரு
பாசுரத்தாலும் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.மணவாள மாமுனிகளாலும், பிள்ளைப் பெருமாள் ஐயங்காராலும்
மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.தலைப்பில் கொடுக்கப்பட்ட பாடலைக் கூர்ந்து நோக்கினால்
தேவர்களுக்கும், அசுரர்கட்கும் அமிர்தங் குறித்து நடைபெற்ற
யுத்தத்தில் மோகினியவதாரங் கொண்டு அருள்புரிந்தமை
மறைமுகமாக விளக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.இங்குள்ள ஆதிசேடனுக்குத் தங்க கவசங்கள் சாத்தப்பட்டுள்ளமை
ஒரு தனிச்சிறப்பாகும்.மிகவும் அழகான, அமைதியான கிராமத்தில் இயற்கை எழில்
கொஞ்சும் செந்நெல் வயல்களூடே காணப்படும் இத்தலம்
உண்மையிலேயே யாரையும் மோகிக்கச் செய்யும் என்பதில்
ஐயமில்லை.சீராப்தி புஷ்கரணிக்கு கிழக்கில் ஒரு விருட்சம் (ஸ்தலமரம்)
இருக்கிறது. அவ்விருட்சம் ஆதியில் கிருதாயுகத்தில் திவ்ய
விருட்சமாகவும், திரேதாயுகத்தில் வன்னி மரமாகவும்,
துவாபராயுகத்தில் வில்வமரமாகவும், கலியுகத்தில் அரசமரமாகவும்
திகழ்கிறதென்று பிரம்மாண்ட புராணம் கூறுகிறது.நம்மாழ்வாரால் பாடப்பட்ட தாளதாமரை ஏரியின் நீர்வளத்தால்
(வயல்கள் செரிந்து) ஊருக்கு அழகு செய்கிறது.திருமோகூர் பற்றி குறிப்பிடும் சங்ககாலப் பாடலொன்று
இவ்வூரின் தொன்மையை எடுத்தியம்பும்....வேல் கொடித்
துனைக்காலன்ன புனைதேர் கோசர்
தொன் மூதலத்தரும் பனைப் பொறியில்
இன்நிசை முரசங் கடிபிகுத் திரங்கத்
தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர்
பணியாமைதிற் பகைதலை வந்த
மாகெழுதானை வம்ப மோரியர்
-அகம் 251நந்தர்கள் மீது வெற்றி கொண்ட மௌரியர்கள்
படையெடுப்பாளர்களாக விளங்கி பெரியதோர் பேரரசை நிறுவினர்.
அவர்கள் தக்காணத்திலும் தமிழகத்திலும் படையெடுத்து
முன்னேறினர். மோகூரை முறியடித்தனர். பொதியமலைவரை
சென்றனர்.
-இப்பாடல் அகநானூற்றில் உள்ளது.
சங்ககாலப் புலவர் மாமூலனார் பாடியது.
-